மக்களைத் துச்சமென எண்ணி அலட்சியமாகத் திட்டம் போட்ட அரசு நிர்வாகத்தை அசைத்த கிராம மக்களின் ஆர்ப்பாட்டம்!
சிவகங்கை நகரில் சுமார் 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வரும் பாதாளச்சாக்கடைத் திட்டத்தின் இறுதிப்பகுதியான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் திட்டத்தை சிவகங்கை – மதுரைச் சாலையிலுள்ள அரசனி எனும் கிராமப்பகுதியில் கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
தென்னந்தோப்புகள், மாட்டுப்பண்ணைகள், மேய்ச்சல்நிலங்கள், படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ நிலையம், மனவளர்ச்சி குன்றியோர்க்கான தனியார் பள்ளி, அரசு ஐ.டி.ஐ நிறுவனம், மற்றும் கிராம மக்களின் குடியிருப்புகள் என அமைந்திருக்கும் சூழல் கொண்ட இடத்தில் இப்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படவிருப்பதை மக்கள் எதிர்த்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அரசனி இடத்திற்கு முன்பாகவே வனத்துறையால் சுமார் 650 ஏக்கர் நிலத்தில் காடுகள் வளர்க்கப்படும் பகுதியில் இந்நிலையத்தை அமைப்பதற்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது வனத்துறை. காட்டிற்குள் வனத்துறை மறுத்த நிலையத்துக்கு அரசனி வெட்டவெளிப் பொட்டலில் மட்டும் அனுமதி கொடுத்திருக்கிறது இதே வனத்துறையின் கீழுள்ள மாசுக்கட்டுப்பாட்டுவாரியம். ஏன்? எப்படி? யாருக்கும் தெரியவில்லை.
பிரச்சினைகள் இப்படியிருந்த நிலையில் அரசனியில் குறிப்பிட்ட இடத்தில் அரசு திட்டத்தை நிறைவேற்றும் விதமாக ஜேசிபி மூலம் இடத்தைச் சுத்தப்படுத்தும் வேலையைத் தொடங்கியது. அப்போதுதான் அப்பகுதியிலுள்ள மக்கள் சிலர் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரை அணுகினர். அவர்கள் பகுதியிலுள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கவனத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு வந்தனர். பிரச்சினையினைக் கையிலெடுத்த புஜதொமு திட்டத்தை உடனே நிறுத்து என்று ஒரு சுவரொட்டிப் பிரச்சாரத்தை நடத்தியது.
“அரசே மக்களைப் பாதிக்கிற திட்டத்தைக் கொண்டு வருகிறதே என்னசெய்வது? இதை எப்படி எதிர்ப்பது ” எனக் குழம்பிப் போயிருந்த அப்பகுதி மக்களுக்கு இந்தச் சுவரொட்டி ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. உடனே கிராம மக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோர் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் புஜதொமுவின் சார்பாக ஒரு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. [அப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது]
அதன்பின்னர், ஆட்சியாளரிடம் போய் ஒரு முறையீட்டை கிராம முக்கியஸ்தர்கள் கொடுத்தனர். கலெக்டரோ, “பழைய கலெக்டர் அனுமதி கொடுத்துவிட்டார், நான் என்னசெய்வது?” எனக் கையை விரித்து விட்டார். “அப்படியானால் நாம் என்னதான் செய்யமுடியும்?” என அமைதியான மக்களிடம் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என ஆலோசனை தோழர்கள் ஆலோசனை கூறினர்.
சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைக்க முடியுமா?, போராட மக்கள் வருவார்களா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனும் முடிவிற்கு வந்தனர்.
கிராம மக்கள் சார்பாக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கான அனுமதி, ஒலிபெருக்கி, பிரசுரம், சுவரொட்டி, பேனர், முழக்கம் ஆகியவைகளை புஜதொமு தயாரித்தது. 15 கிராம மக்களுக்கும் பிரசுரம் போனது. சுவரொட்டி ஒட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று முத்துப்பட்டி கிராமத்தில் முக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் குடும்பப் பிரச்சினை காரணமாக தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சில கிராமங்களில் பலர் கோயிலுக்கு மாலை போட்டிருந்ததால் மலைக்குச் சென்று விட்டனர்.
ஆனால், இவைகளையெல்லாம் தாண்டி சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் முட்டாள்தனமான திட்டத்திற்கு எதிராக தங்கள் கண்டனக்குரலை முழக்கமாக எழுப்பினர். நிகழ்ச்சிக்கு கீழக்குளம் கிராம முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் அ. அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அதன்பின்னர், ஓட்டக்குளத்தைச் சேர்ந்த திரு. சமையன், பேசினார்.
அதன்பிறகு சிவகங்கை-இராமநாதபுர மாவட்டங்களின் புஜதொமு அமைப்பாளர் தோழர் நாகராசன், அரசு திட்டங்கள், அதன் அலட்சியத்தன்மை, அதிகாரிகளின் போக்கு ஆகியவைகளை அம்பலப்படுத்தி சட்டீஸ்கர், நியமகிரி மக்களின் போராட்டங்களை நினைவூட்டி போராடுவதின் அவசியத்தை வலியுறுத்தினார். பிறகு முத்துப்பட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.மாசானம், மகளிர் மன்றத் தலைவி திருமதி. சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினர்.
அதன்பிறகு தோழர் குருசாமி மயில்வாகனன் போராடுவதற்காக வந்திருக்கும் மக்களை வாழ்த்தி, நேரடியாகச் சென்று இத்திட்டத்தை நிறுத்துவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியேதும் இல்லை என்றதோடு மக்களின் போராட்டத்திற்கு புஜதொமு எப்போதும் துணைநிற்கும் என்றார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் அய்யாக்காளை நன்றிகூற நிகழ்ச்சி நிறைவடைந்தது.
மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடத் தயாராக இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு நம்பிக்கையோடு சென்றார்கள் மக்கள். அந்த நம்பிக்கையின் ஆதாரம் புஜதொமு தான் என்பதை அம்மக்கள் கூட்டம் முடிந்ததும் நம்மிடம் வெளிப்படுத்தினார்கள்.
தகவல் :
செய்தியாளர் – பு.ஜ.தொ.மு.
நோட்டிஸ்
சட்ட விதிகளை மீறி அமைக்கப்படும்
அரசினி கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தை உடனே நிறுத்து!
வனத்துறையின் இடத்திற்குள்ளே அமை!
சிவகங்கை நகரிலிருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுநீரைப் பாதாளச் சாக்கடை மூலமாக வெளியேற்றி அதை அரசினிக் கிராமப் பகுதியில் கொண்டுவந்து சுத்திகரிப்பு செய்ய முடிவு செய்த சிவகங்கை நகராட்சியானது இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஓபனிங்கெல்லாம் நல்லாத்தானிருக்கு………! . ஆனா………பினிஷிங்………?
அரசு தனது ஒவ்வொரு திட்டத்தை ஆரம்பிக்கும் போதும் ஏதோ மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு கவனமாக வேலை செய்வது போல அதிகாரிகள் ஃபிலிம் காட்டுவதையும் பிறகு சிறிது காலம் ஆனபிறகு பராமரிப்பு இல்லை; பணியாளர் இல்லை; நிதி இல்லை; அது இல்லை; இது இல்லை……..எனப் பல்வேறு காரணங்களைக் கூறி அதனால் அத் திட்டங்கள் பல்லை இளித்துக்கொண்டு நிற்பதையும் மக்கள் அனைவரும் நேரடியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்றவைகளே இதற்கு போதுமான உதாரணங்கள்.
அனைத்து மக்களுக்கும் குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்குதல்; தெருவிளக்கு மற்றும் சாலைகள் பராமரிப்பது; குப்பைகளை அகற்றுவது; கொசுக்களை அழிப்பது; கழிவுநீரை வெளியேற்றுவது போன்ற எந்தப் பிரச்சினையையுமே இவர்கள் எங்குமே முழுமையாகத் தீர்த்ததாகச் சரித்திரமே கிடையாது. ஏன் ? தீர்த்துவிட்டால் அப்புறம் சம்பாதிக்க முடியாதே!.
காசு – பணம் – துட்டு – மனி – மனி.
ஊழல், அலட்சியம், மெத்தனம், ஆகியவற்றில் ஊறிப்போயிருக்கும் அதிகாரவர்க்கம் செய்வதெல்லாம், மக்களின் வரிப்பணத்தை பல்வேறு திட்டங்களுக்கான அரசு நிதியாக மடைமாற்றம் செய்வதும். பிறகு அதை காண்ட்ராக்டர்களுடன் சேர்ந்து பங்குபோட்டு சுவாஹ செய்வதும்தான். இந்தியாவிலேயே ஊழல் நடக்காத திட்டம், ஏதாவது இருக்கிறதா? அல்லது லஞ்சம் வாங்காத அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள்தான் இருக்கிறார்களா? எங்கும் ஊழல் எதிலும் ஊழல். காசு/பணம்/துட்டு/மனி/மனி. இதுதானே இவர்கள் தாரக மந்திரம்.
இந்தப் பாதாளச் சாக்கடைத் திட்டமும் கூட அப்படித்தான். முதலில் திட்டமே முழுமையானதாகவும் உறுதியானதாகவும் இல்லாமல் திட்டமிடப்பட்டது. பின்னர் அதை நிறைவேற்றுவதில் பல்வேறு வகையான குழப்பங்கள். இந்தத் திட்டத்தினால் கிடைக்கக் கூடிய கமிஷன் தொகையால் உண்டான பல சம்பவங்கள் குறித்து சிவகங்கை நகரில் உலவும் செய்திகளும் கூட அதிர்ச்சியானவைகள்தான். திட்டமும் தொடர்ச்சியாக நடைபெறாமல் நிறுத்தி, நிறுத்திதான் நடைபெற்றது. மொத்தத்தில் இந்த சிவகங்கைப் பாதாளச் சாக்கடைத் திட்டம் முழுவதுமே அவசரகதியிலும், ஏனாதானோவென்றுமே நடைபெற்று வருகின்றது.
முதலில் மேலவாணியங்குடியில் ஒரு இடத்தை அரசு புறம்போக்கு நிலமென்று மாவட்ட ஆட்சியர் வழங்கி, அதில் வேலைகளும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நடத்தி, காசை வீணாக்கி விட்டு அதன் பின்னர் அது தனியார் இடமென்று நீதிமன்றத்தடை வந்ததால் நிறுத்தினார்கள். புறம்போக்கு நிலம் எது? தனியார் நிலம் எது? என்றுகூடத் தெரியாமல் 25 கோடிக்கு ஒரு திட்டம் தொடங்கப்படுகிறதென்றால் அதை நம்ப முடியுமா? எவ்வளவு பணம் அதில் வீணாகியது? அதற்கு யார் பொறுப்பு? எந்தக் கேள்விகேப்பாடும் கிடையாது. அதன்பிறகு அரசனியில் இடம் தேர்ந்தெடுத்தார்கள். அதுவும் அரைகுறையானதாகவே இருக்கிறது. இதுதான் இவர்கள் திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றும் லட்சணம்.
இந்தத் திட்டம் நமக்குச் சில கேள்விகளை எழுப்புகிறது?
1) சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்ற 390 ஏக்கர் இடம் தேவை என தமிழ்நாடு அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரிய விதி உள்ளபோது அரசனியிலுள்ள 85.84 ஏக்கரிலேயே கழிவுநீரை வெளியேற்ற நகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்தது ஏன்?
2) நகராட்சியின் முந்தைய இந்தத் திட்டத்திற்கு வனத்துறை உரிய அனுமதி வழங்காததற்கான காரணம் என்ன? அதை வழங்கினால் வனத்துறைக்கு என்ன நட்டம்?
3) தனது காட்டுப் பகுதிக்குள் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு உரிய அனுமதி கொடுக்காத வனத்துறை தனது கீழுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக மக்கள் நடமாடும் அரசனி இடத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்தது ஏன்?
4) விவசாய நிலங்கள், கட்டி முடித்த வீடுகள், கட்டப் போகும் வீட்டு மனைகள், சித்த மருத்துவ மனை, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளி, அரசின் தொழிற் பயிற்சிப் பள்ளி ஆகியவைகளைக் கொண்ட வளர்ச்சிப் பகுதியான ஒரு இடத்தைக் கழிவுநீர் வெளியேற்றும் திட்டத்திற்கான பகுதியாகத் தேர்வு செய்தது அறிவுள்ளவர் செய்யும் வேலையா?
5) கழிவுநீரை வைத்துக் கட்டுப்படியாகாத விவசாயம் செய்கிற உருப்படாத ஒரு திட்டத்திற்கு வெறுமனே காடு வளர்த்துக் கொண்டிருக்கின்ற மாவட்ட வனத்துறையின் 690 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தாமல் போதுமான இடமில்லாத, பொது மக்கள் புழங்குகிற ஒரு வளர்ச்சியடையும் பகுதியைத் தேர்வு செய்தது முட்டாள் தனமில்லையா?
உழைக்கும் மக்களே!
கழிவுநீர் நிலையத்தை மாற்றக் கோருவதென்பது சிவகங்கைப் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு எதிரானதல்ல. மக்களுக்குக்குப் பாதிப்பில்லாத வகையில் அரசின் வனத்துறைக்குச் சொந்தமான காட்டினுள் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவேண்டும் என்பதுதான், அரசினி, முத்துப்பட்டி, பொன்னாகுளம், ஆத்தூர், துக்கால், நைனாங்குளம், நென்மேனி, கீழக்குளம், வீரவலசை ஆகிய கிராம மக்களின் கோரிக்கை. இது சரியானது, சாத்தியமானது. ஆனால், அரசு நிர்வாகம் இதைத் தானாகச் செய்யாது. அலட்சியமாகவே இருக்கும்.மேலும் போராட்டத்தைத் தடுப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்யும். ஈ.ஐ.டி. பாரி பிரச்சினையிலும் கூட இப்படித்தான் நடக்கிறது. மக்கள் ஒன்றிணைந்து போராடாமல் இத்திட்டத்தை மாற்றி அமைக்க முடியாது. எனவே, போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி-தமிழ்நாடு . சிவகங்கை – முகவை
9443175256/9487407648/9585679637