ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 2
இந்து ராஷ்டிரத்தின் மீதான அசீமானந்தாவின் உணர்ச்சிபூர்வமான நம்பிக்கையும், அதை அடைவதற்கு அவர் வன்முறை வழியை பின்பற்றியதும் இந்திய சிந்தமனை மரபின், ஒன்றோடொன்று தொடர்புடைய ஆனால் பெரிதும் வேறுபட்ட இரண்டு சித்தாந்தங்களுடன் சம்பந்தப்பட்டது. ராமகிருஷ்ண மிஷனின் பல்வேறு மதங்களை இணைக்கும் கர்மயோகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்சின் இந்துத்துவம் ஆகிய இரண்டு சிந்தனை போக்குகளாலும் கட்டியமைக்கப்பட்டவர் அசீமானந்தா. முந்தையதின் துறவு வாழ்க்கையையும், பிந்தையதின் தீவிரவாத அரசியலையும் ஏதோ ஒரு விதத்தில் இணைப்பதை அவர் சாதித்திருந்தார். இதன் ஒரு பகுதி உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் ஷாகா ஒன்றில் அவர் சிறுவயதிலிருந்தே பங்கேற்றதுடன் தொடர்புடையது. அது அவரது அப்பாவின் கொள்கைகளை நிராகரிப்பதாகவும் இருந்தது. அசீமானந்தாவே கூறியது போல அது இந்து மதத்தை அரசியல் சக்தியாக கருதும் ஒரு வகை எழுச்சி.

1951-ம் ஆண்டு இறுதியில் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்த அசீமானந்தாவுக்கு பெற்றோர் இட்ட பெயர் நபகுமார் சர்க்கார். சுதந்திர போராட்ட தியாகி பிபூதிபூஷன் சர்க்காரின் ஏழு மகன்களில் அவர் இரண்டாமவர். காந்தியவாதியான பிபூதிபூஷன் சர்க்கார் தன் குழந்தைகளிடம் காந்தி தனது கடவுள் என்று கூறுவது வழக்கம். அவர்கள் வாழ்ந்து வந்த கிராமமான கமர்புக்கூர் “யதோ மத், ததோ பத்” (பல மதங்கள், கடவுளுக்கான பல வழிகள்) என்று போதித்த 19-ம் நூற்றாண்டின் ஞானி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த ஊர். ராமகிருஷ்ணரின் மிகப்பிரபலமான சீடர் விவேகானந்தா “சுயநலமில்லாத பணிகளால் சேவை” என கர்மயோகத்திற்கான ராமகிருஷ்ண மிஷனை 1897-ம் ஆண்டு தோற்றுவித்தார். ராமகிருஷ்ணரின் பக்தர்களின் புனித யாத்திரைத் தலமான மிஷனின் உள்ளூர் கிளைக்கு அருகில்தான் நபகுமார் வளர்ந்து வந்தார். அவர் பல மாலை நேரங்களை மிஷன் துறவிகள் பக்திப் பாடல்கள் பாடுவதை கேட்பதில் செலவழித்தார்.
பிபூதிபூஷனும் அவரது மனைவி பிரமீளாவும், அவர்களது மகன் மிஷனின் புனித சேவையில் சேருவதை விரும்பினார்கள். அவ்வாறு சேருவது பல பக்தி வாய்ந்த வங்காள குடும்பங்களுக்கு பெருமைக்குரியதாக இருந்தது. ஆனால், நபகுமாரும் அவரது சகோதரர்களும் ஆர்.எஸ்.எஸ்சாலும் ஈர்க்கப்பட்டிருந்தனர். எம்.எஸ். கோல்வால்கரின் தலைமையின் கீழ் அதன் பாணியிலான சமூக சேவையும் வளர்ந்து தளைத்துக் கொண்டிருந்தது.
“என்னுடைய இளமையில் நானும் சித்தாந்தங்களை தேடிக் கற்று அவற்றை பின்பற்றி வாழ்ந்திருக்கிறேன். எனவே, நீங்கள் ஒரு சித்தாந்தத்தால் கவரப்பட்டு அதை பின்பற்ற நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் காந்தியைக் கொன்ற அமைப்பு. எனவே அது குறித்து உங்களை எச்சரிப்பது என்னுடைய கடமை” என்று தன்னுடைய தந்தை சொன்னதை அசீமானந்தா நினைவு கூர்கிறார். இருப்பினும், சர்க்கார் வீட்டுப் பையன்கள் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சர்க்கார் வீட்டில் அண்ணன் தம்பிகளுடன் சாப்பிடுவதும், சகோதரர்கள் ஷாகாவில் பங்கேற்பதும் அடிக்கடி நடந்தது. அசீமானந்தாவின் அண்ணன் ஆர்.எஸ்.எஸ்சில் முழு நேர ஊழியராக சேர்ந்தார். ஆனால், தனக்கு சங்கத்தின் எந்த உறுப்பினரையும் அறிமுகம் செய்து வைக்கக் கூடாது என்று அவர்களது தந்தை கடும் எச்சரிக்கை விடுத்திருந்ததாக அசீமானந்தாவும், நான் கமர்புக்கூரில் சந்தித்த அவரது தம்பி சுஷாந்த் சர்க்காரும் கூறினார்கள்.

நபகுமாரின் நம்பிக்கைகளின் சமநிலை அவரது இருபது வயதுகளில் இரண்டு சங்க உறுப்பினர்களின் வழிகாட்டலின் கீழ் தீர்மானகரமாக திரும்பியது. அவர்களில் முதலாமவர் அவரை தீவிரவாத இந்து அரசியலை நோக்கி செலுத்திய பிஜோய் ஆத்யா என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர். தற்போது அவர் ஆசிரியராக பணியாற்றும் வங்காள ஆர்.எஸ்.எஸ் செய்தி வார இதழ் ஸ்வஸ்திகா அலுவலத்தில் அவரை நான் சந்தித்த போது 1971-ம் ஆண்டு தான் நபகுமாரை சந்தித்ததாக ஆத்யா கூறினார். நபகுமார் அந்த நேரத்தில் உள்ளூர் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டத்துக்கு படித்துக் கொண்டிருந்தார். (அவர் பிற்காலத்தில் முதுகலை பட்டமும் படித்து முடித்தார்). இருப்பினும், “தங்களது மற்ற மகன்களிலிருந்து நபகுமார் மாறுபட்டவர் என்பதை அவரது பெற்றோர்கள் எப்போதுமே புரிந்து வைத்திருந்தனர். அவரது மற்ற சகோதரர்களைப் போல ஒரு இயல்பான வாழ்க்கையை அவரால் நடத்த முடியாது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது” என்று ஆத்யா கூறினார். அப்போது கூட நபகுமார் ராமகிருஷ்ணா மிஷனுக்கு தவறாமல் போய்க் கொண்டிருந்தார். “அவரது வீட்டில்தான் விவேகானந்தர் பற்றிய முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் நான் படித்தேன்” என்று ஆத்யா சொல்கிறார்.
சர்க்காரின் புத்தக சேமிப்பில் ஏக்நாத் ரானடேவால் தொகுக்கப்பட்ட விவேகானந்தரின் எழுத்துக்களும், உரைகளும் அடங்கிய “ஒரு இந்து தேசத்துக்கான எழுச்சி அழைப்பு” என்ற புத்தகம் இருந்தது. அரசு நிதி உதவி பெறும் நோக்கத்தோடு விவேகானந்தரை மதச் சார்பற்ற நபராக ராமகிருஷ்ண மிஷன் உருவாக்கி வைத்திருந்தது என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. அந்த பிம்பத்தை மாற்றி நேர் செய்தது ரானடேவால் தொகுக்கப்பட்ட இந்த புத்தகம். “எழுமின்! விழிமின்! இலக்கை அடையும் வரை நிற்காதீர்கள்!” என்று விவேகானந்தர் இந்துக்களுக்கு விடுத்த அழைப்புக்கு அழுத்தம் கொடுத்து பேசியது.
காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட கால கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்சிற்கு ஏகநாத் ரானடே வழங்கிய தலைமறைவு தலைமையின் அடிப்படையில சக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களால் “தலைமறைவு சர்சங்சாலக்” என்று அவர் அழைக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரின் வேண்டுகோளின்படி ரூ 1.35 கோடி செலவில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவகத்தை கட்டுவதையும் ரானடே ஒருங்கிணைத்தார். அது 1970-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
ரானடேவின் விவேகானந்தர் பற்றிய புத்தகத்தை படிக்கும்படி ஆத்யா அசீமானந்தாவை ஊக்குவித்தார்.
“ராமகிருஷ்ண மிஷன் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்கிறது. எனவே அவர்கள் ஈத் பண்டிகையையும், கிறிஸ்துமசையும் கூட கொண்டாடுவது வழக்கம். எனவே, நானும் அதே போல கொண்டாடி வந்தேன். விவேகானந்தா பிரச்சாரம் செய்தது இது அல்ல என்று ஆத்யா என்னிடம் சொன்ன போது அதை நான் நம்பவில்லை.” என்கிறார் அசீமானந்தா. அதன் பிறகு அவர் ரானடேவின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். “இந்து மத வட்டத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரும் ஒரு நபர் குறைவு என்று மட்டுமில்லை, ஒரு எதிரி அதிகம் என்றும் பொருள்படும்” என்று விவேகானந்தர் சொன்னதாக அதில் இருந்த வாக்கியம் அவரது மனதை ஆக்கிரமித்தது.

“இதை வாசித்ததும் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்ப்பட்டது. தொடர்ந்து வந்த நாட்களில் நான் இதைப் பற்றி ஆழமாக சிந்தித்தேன். ஒரு கட்டத்தில் விவேகானந்தரின் போதனைகளை முழுவதுமாக புரிந்து கொள்வதோ, ஆய்வு செய்வதோ என் வரம்புக்குட்பட்ட திறனுக்கு அப்பாற்பட்டது என்று நான் உணர்ந்தேன். ஆனால், அவர் இப்படி சொல்லியிருப்பதால், அதை நான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவேன்” என்று முடிவு செய்ததாக அசீமானந்தா கூறுகிறார். அதன் பிறகு அவர் ராமகிருஷ்ண மிஷனுக்கு போவதை நிறுத்தி விட்டார்.
ரானடேவால் வழங்கப்பட்ட விவேகானந்தாவின் கருத்துக்கள் அசீமானந்தாவின் அரசியல் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருந்தது என்றால் 1956-ம் ஆண்டு ரானடேவின் கீழ் பணி புரிவதற்கு நாக்பூரிலிருந்து கல்கத்தாவுக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டரும் துறவியுமான பசந்த் ராவ் பட் என்பவரால் அதற்கு வடிவம் தரப்பட்டது. பட் ஆர்.எஸ்.எஸ்சின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தாலும் மென்மையான நம்பிக்கையூட்டும் ஆளுமையை கொண்டிருந்தார். “பட் போன்ற தொண்டர்கள் வேலை செய்யும் ஒரு அமைப்பு மோசமாக இருக்க முடியும் என்று நம்புவது சிரமமாக இருக்கிறது” என்று அசீமானந்தாவின் தந்தை ஒரு முறை கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்சின் சித்தாந்தத்தையும், ராமகிருஷ்ண மிஷனின் துறவிகள் பின்பற்றிய பிரச்சார சேவையையும் எப்படி ஒன்றிணைப்பது என்பதற்கான உதாரணத்தை பிற்காலத்தில் மேற்கு வங்காளத்தின் ஆர்.எஸ்.எஸ் செயல் தலைவராக உயர்ந்த பட் இடம் அசீமானந்தா கற்றுக் கொண்டார்.
1975-ல் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்து ஆர்.எஸ்.எஸ்சை தடை செய்து அதன் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். நபகுமார் (அசீமானந்தா) உட்பட ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பட் தனது குரு ரானடேவின் உதாரணத்தை பின்பற்றி தலைமறைவாக செயல்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வந்தார். அவசரநிலையின் இறுதியில் தடை நீக்கப்பட்ட பிறகு பட் வங்காளத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் செயல்படுவதற்காக வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் புதிய கிளை ஒன்றை ஆரம்பித்தார். வெகு விரைவில் அசீமானந்தா அவருடன் இணைந்து அமைப்பில் முழு நேரமாக வேலை செய்ய ஆரம்பித்தார். 1978-ல் அவர்கள் மேற்கு வங்காளத்தின் புருலியா அருகில் உள்ள பாக்முந்தி காடுகளில் நாட்டின் வடகிழக்கு பகுதியின் முதல் வனவாசி கல்யாண் ஆசிரமத்தை உருவாக்கினார்கள்.

வடகிழக்கை நோக்கிய விரிவாக்கம் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் நாடு தழுவிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலசாஹேப் தேஷ்பாண்டேவால் இப்போதைய சத்தீஸ்கரில் உள்ள ஜஷ்பூரில் ஓரவோன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குழந்தைகளுடன் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் தொடங்கப்பட்டது. கிருத்துவ மத போதகர்களின் தாக்கத்தை எதிர்க்கவும் பழங்குடி மக்கள் கிருத்துவர்களாக மாறுவதை தடுக்கவும் அது முயற்சித்து வந்தது. கிருத்துவ மதம் வடகிழக்கில் பல காலமாக செயல்பட்டு வரும் பிரிவினை இயக்கங்களை தோற்றுவித்து தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது. வனவாசி கல்யாண் ஆஷ்ரமின் செயல்முறைகள் கிருத்துவ மதபோதகர்களின் வெற்றிகரமான மாதிரியிலிருந்து உருவாக்கப்பட்டவை. மத மாற்ற மையங்களாக பயன்படும் நாடகக் குழுக்கள், ஆரம்ப நடுநிலைப் பள்ளிகள், தங்கும் விடுதிகள், மருத்துவ சேவைகள் ஆகியவற்றை நடத்துகிறது. இந்துத்துவத்தை வளர்ப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்சின் கலாச்சார மற்றும் அரசியல் அடித்தளத்தை அதிகரிப்பது அதன் நோக்கம்.
அடுத்த பத்து ஆண்டுகள் பெரும்பாலும் இந்த நோக்கங்களை பரப்புவதற்காக அசீமானந்தா புருலியாவில் பணி புரிந்து வந்தார். ஆனால், அவரது பெற்றோர் அவருக்காக திட்டமிட்டிருந்த துறவற வாழ்க்கையின் வடிவத்தையும் பின்பற்ற முடிவு செய்து 31-வது வயதில் துறவு ஏற்க உறுதி பூண்டார். “பழங்குடி மக்களுடன் வேலை செய்வதும் சங்கத்தின் நன்மைக்காக உழைப்பதும்தான் அவரது நோக்கம் என்றால் அவர் எந்த ஒரு துறவற பள்ளியையும் பின்பற்றத் தேவையில்லை” என்று பட் அவரிடம் கூறினார். ஆனால் நபகுமார் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி, புருலியாவிலிருந்து வங்காள குரு சுவாமி பரமானந்தாவின் ஆசிரமத்திற்கு போனார். “அவர் ராமகிருஷ்ணரின் போதனைகளை பின்பற்றியதால் அவரை எனது குருவாக ஏற்றுக் கொண்டேன். அவர் பெரும்பாலும் தலித் மக்கள் மத்தியில் பணி புரிந்து வந்தார். ஆனால் இந்து மதத்தை பரப்புவதிலும் அவர் ஈடுபட்டிருந்தார்” என்கிறார் அசீமானந்தா. நபகுமார் சர்க்காருக்கு துறவு வாழ்க்கைக்கான உறுதிமொழிகளை செய்வித்து அசீமானந்தா அல்லது “எல்லையற்ற ஆனந்தம்” என்ற பெயரையும் சூட்டினார் பரமானந்தா.

சன்யாசம் வாங்கிய பிறகு அசீமானந்தா புருலியாவுக்கு திரும்பி வந்து பழங்குடி மக்களிடையே அவரது பணியை தொடர்ந்தார். ஆசிரமத்தில் அவர் செய்து வந்த பணி அவருக்கு வனவாசி கல்யாண் ஆஷ்ரமின் மூத்த தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தந்தது. இப்போது எந்த பிற மாநிலத்தையும் விட அதிகமாக, 4,000 ஷாகாக்கள் இயங்கி வரும் கேரளாவின் ஆர்.எஸ்.எஸ் தலைமைப் பொறுப்பு வகித்தவரான பாஸ்கர் ராவ் அப்போது வனவாசி கல்யாண் ஆஷ்ரமின் அனைத்திந்திய அமைப்பு செயலாளராக இருந்தார். அசீமானந்தாவின் பணியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த ராவும், வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைவர் ஜக்தேவ் ராம் ஓரேவோனும் வனவாசி கல்யாண் ஆஷ்ரமின் ஆன்மீக விழிப்புணர்வுக்கான பணியை அந்தமான் தீவுகளுக்கும் விரிவுபடுத்தும்படி அசீமானந்தாவை கேட்டுக் கொண்டனர்.
காலனிய ஆட்சிக் காலத்திலிருந்தே இந்திய மாநிலங்களிலிருந்து மக்கள் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்களின் 500-க்கும் மேற்பட்ட தீவுகளில் குடியமர்த்தப்பட்டார்கள். இந்த குடியேறிகளுக்கு நகரீயங்களை உருவாக்குவதற்கு இப்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடி பகுதிகளிலிருந்து இருந்து பழங்குடி மக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தமானுக்கு குடிபெயர்ந்த பழங்குடி மக்கள் கிருத்துவ மத போதகர்களால் மேலும் மேலும் கவரப்பட்டு, தீவுக்கூட்டத்தை இந்துக்களுக்கும், இந்துத்துவத்துக்கும் விரோதமாக மாற்றி வருவதாக 1970-களில் ஆர்.எஸ்.எஸ் அச்சப்பட ஆரம்பித்தது என்கிறார் அசீமானந்தா. அந்தமான் நாடாளுமன்றத் தொகுதியை பத்து ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசைச் சேர்ந்த மனோரஞ்சன் பக்தா என்பவர் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். அசீமானந்தா அங்கு போய் ஆர்எஸ்எஸ்சுக்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும்.
“நான் அந்தமானில் முதல் முதலில் போய் இறங்கிய போது தங்கி வேலை செய்வதற்கான இடமோ, சேர்ந்து வேலை செய்வதற்கான ஆட்களோ இல்லை” என்கிறார் அசீமானந்தா. எளிய கிராமப்புற நட்பு முறை, அப்பட்டமான மத நோக்கங்கள் இவற்றை இணைத்து அவர் அங்கு குடியேறியிருந்த பழங்குடி மக்களுடன் உறவை வளர்த்துக் கொண்டார். அவர் முழு விபரங்களை சொல்லா விட்டாலும், அந்தமானிலும் வன்முறை அச்சுறுத்தல்கள் பற்றி பேசியே அவர் பழங்குடி மக்களை இந்து மதத்தை தழுவத் தூண்டியிருக்கிறார். இந்த மதமாற்றங்களை அவர் “வீடு திரும்புதல்” என்று அழைக்கிறார். (பழங்குடி மக்கள் அடிப்படையில் இந்துக்கள் என்றும், இயற்கையை வழிபடுபவர்கள் அல்ல என்றும் சாதிக்கும் ஆர்.எஸ்.எஸ் “மறுமாற்றம்” என்று பேசுகிறது).

அசீமானந்தா மேலும் முன்னேறிய பிரச்சார முறைகளையும் கையாண்டார். பழங்குடி குடியேறிகள் மத்தியில் வசித்த அவர் புதிய மதத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தின் வயதான உறுப்பினர்களை தேடிப் பிடித்தார். “கிருத்துவ மதத்துக்கு மாறி விட்டாலும், அவர்கள் தமது பாரம்பரியங்களான நடனங்கள், திருவிழாக்கள் போன்றவற்றை பழக்கத்தில் வைத்திருக்க விரும்பினார்கள். அதை சாதித்துக் காட்டுவதுதான் எனது பணி என்று நான் அவர்களிடம் சொன்னேன்” என்கிறார் அசீமானந்தா.
சமூகத்தின் முதியவர்களின் நல்லெண்ணத்தை ஆயுதமாகத் தரித்துக் கொண்ட அவர் அரை டஜன் இளம் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்துக்கு அனுப்பி பஜனை பாடல்களை கற்பிக்கவும், ஹனுமான் மீது நம்பிக்கை ஊட்டவும் ஏற்பாடு செய்தார். அதன் பிறகு அவர்களை ஜஷ்பூரில் உள்ள வனவாசி கல்யாண் ஆஷ்ரமத்துக்கு அவர் அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் இந்து கலாச்சாரம் குறித்து மூன்று மாதங்களுக்கு கற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு அசீமானந்தாவும் அந்த பெண்களும் அந்தமான் கிராமங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பஜனைகளை தலைமை வகித்து நடத்துவதையும் புதிதாக குழந்தைகளை சேர்த்துக் கொள்வதையும் தொடர்ந்து செய்தார்கள். திருமணமாகாத இளம் பெண்களுடன் பயணம் செய்வது சரியில்லை என்று அசீமானந்தா கருதியதால், அந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து அனுப்பி விட்டு, அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட சுமார் 8 வயதிலான சிறுமிகளை அடுத்த குழுவாக அமைத்துக் கொண்டார்.
இந்து சமூகத்தை முறைப்படுத்தும் விதமாக நிரந்தர வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்தி அவற்றை நிர்வகிப்பதற்கான அதிகாரபூர்வ அமைப்புகளை உருவாக்குவதில் அசீமானந்தா இறங்கினார். போர்ட் பிளேரில் ஆர் தாமோதரன் என்பவர் உள்ளூர் கோயில் கமிட்டியின் தலைவராகவும், பிஷ்ணு பாத ரே என்ற வங்காளி அதன் செயலராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.

1990-களின் தொடக்கம் வரை அசீமானந்தா அந்தமானில் முழுநேரமும் வசித்து வந்தார். 1999-ல் ரே அந்த பிரதேசத்தின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக ஆவதற்கான அடித்தளத்தை அவரது பணிகள் உருவாக்கின என்று அசீமானந்தா சொல்கிறார். “அவர் அரசியலில் நுழைவது நல்லது என்று நான் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர் டெல்லிக்குப் போய் வாஜ்பாயியை சந்தித்தார். அரசியலும் நமது பணியின் ஒரு பகுதி” என்கிறார் அசீமானந்தா. 2007-ம் ஆண்டு தாமோதரன் போர்ட் பிளேர் நகராட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தமானை விட்டு வந்த பிறகும், இயற்கை சீற்றங்களுக்குப் பிறகு மருந்துகளையும் உணவையும் வினியோகிப்பதற்காக அசீமானந்தா அவ்வப்போது அங்கு போய் வந்தார். ஆனால், அவர் கல் நெஞ்சத்தோடு தம்மை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்பவர்களுக்கு மட்டும்தான் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என கறாராக செயல்பட்டார். 2004 சுனாமிக்குப் பிறகான ஒரு நிகழ்வு குறித்து அவர் என்னிடம் சொன்னார். “ஒரு கிருத்துவ பெண் தனது குழந்தைக்கு பால் வேண்டி வந்தார். அவருக்கு பால் தருவதற்கு என்னுடைய ஆட்கள் மறுத்து விட்டார்கள். அந்த குழந்தை 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை என்றும் நாங்கள் பால் கொடுக்கவில்லை என்றால் செத்துப் போகும் என்றும் அவள் மன்றாடினாள். தயவு செய்து கொஞ்சமாவது கொடுங்கள் என்று கேட்டிருக்கிறாள். ஸ்வாமிஜியிடம் போய்க் கேளு என்று அவளை என்னிடம் அனுப்பினார்கள். அவர்கள் செய்வதுதான் சரி என்று நான் சொல்லி விட்டேன். உனக்கு இங்கு பால் கிடைக்கப் போவதில்லை”. இந்த நிகழ்வை திரும்பத் திரும்ப சொல்லி அவர் மகிழ்ச்சியடைகிறார்.
– தொடரும்
நன்றி : லீனா கீதா ரகுநாத், கேரவான் (விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்)
தமிழாக்கம் – பண்பரசு