வசிஷ்டன்கள், விசுவாமித்திரன்கள், சாணக்கியன்கள் அனைவருக்கும் ஷத்ரிய சக்கரவர்த்திகள்தான் போஜனம் இடுகிறார்கள். பதிலுக்கு ராஜகுருக்கள் ‘ஞானம்’ அளிக்கிறார்கள். அது என்ன ஞானம்? வருண தருமம் எனும் பார்ப்பன நெறிக்கு பங்கம் விளையும் போது, அவர்கள் வாயும், வார்த்தைகளும் அனிச்சை செயலாய் எச்சரிக்கும். ஒருக்கால் அந்த அனிச்சை செயலே அஸ்தமிக்குமானால் கிருஷ்ண பரமாத்மாக்கள் அவதரித்து கீதை சொல்லி, தருமம் காக்க ‘கலகக்காரர்களை’ வதம் செய்வார்கள்.

இன்று கலகக்காரர்களுக்கு தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள் என்று பெயர்கள் மாறியிருக்கின்றன. கூடவே வருண தர்மத்தின் ஆன்மாவானா பொருளாதார ஒடுக்குமுறையின் பாதுகாவலர்களாக முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பார்ப்பனியத்தின் கூட்டாளிகளாக பரிணமித்திருக்கின்றனர். வரலாற்று வழியிலும், வர்க்க அணியிலும் பார்ப்பனிய மற்றும் முதலாளித்துவ வர்க்கங்களை ஆதரிக்கும் தினமலர், அத்தகைய ஞான குருக்களின் கோபம் கொண்ட மரபு வீரியத்தோடும் அதே நேரம் அம்மா எனும் பயத்தின் மரியாதையோடும் எழுதியதே இன்றைய நாளிதழின் தலைப்புச் செய்தி.
“சோவியத் யூனியன்! – விரைவில் மாறப்போகிறது தமிழகம்? எல்லா தொழில்களையும் அரசே நடத்த முடிவு, அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் நழுவல்” என்ற தலைப்பில் ஆவேசத்துடனும் அதே நேரம் பணிவாகவும் எழுதியிருக்கிறது தினமலர். நாளிதழ்களில் செய்திகள்தான் முதல் பக்கத்தில் வரும், கருத்து – கண்ணோட்டமெல்லாம் உள்ளே இருக்கும் என்பதான முதலாளித்துவ போலி ஊடக அறமும் கூட ராஜரிஷியான தினமலர் போன்ற ஊடகங்களுக்கு பொருந்தாது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
இப்படி முதல் பக்கத்தில் பொங்க வேண்டிய அளவுக்கு தமிழகத்தில் என்ன நடந்து விட்டது? நேற்று 19.02.2014-ல் நடந்த சென்னை மாநகராட்சி வரவு-செலவு நிதியறிக்கையில் “அம்மா திரையரங்குகள், அம்மா பயணியர் தங்கும் விடுதிகள், அம்மா 20 லிட்டர் கேன் குடிநீர்” போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, தினமலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

தா.பா கட்சி, பிரகாஷ் காரத் கட்சிகளெல்லாம் கூட்டணியில் இருப்பதாலோ என்னமோ “அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா காய்கறி கடை” என புதிய தொழில்களை துவங்குவதில் ஜெயலலிதா ஒரு அதீத கம்யூனிச பாதிப்போடு முனைப்பு காட்டி வருவதாக தினமலர் பொருமுகிறது. அப்போதும கூட இதெல்லாம் தங்கத் தலைவி மூளையில் சுதந்திரமாக உதித்தவை அல்ல, போலிக் கம்யூனிஸ்டுகளின் பழக்கத்தால் தோன்றிய தேவையற்ற எச்சங்கள் என்று விமரிசனத்தை போலிகள் மீது தள்ளுகிறது ராமசுப்பையரின் வார்ப்பில் உருவான தினமலர்.
போலிக் கம்யூனிஸ்டுகள், கூட்டணியில் இருந்தாலும் அம்மாவுக்கு இப்படிப்பட்ட யோசனைகளை தைரியமாக சொல்லும் அளவு நிமிர்ந்த முதுகு கொண்டவர்கள் அல்ல. கூட்டணி சேர்ந்தாலும் ஒரு சீட்டாவது கிடைக்குமா என்று, பாய் கடை மட்டன் துகளுக்காக ஏங்கும் பைரவர்களான அந்த அப்பாவிகள் குறித்துத்தான் இப்படி ஒரு அபாண்டம். இனி இதற்கு கண்டனம், சுவரொட்டி, போயஸ் தோட்டத்திற்கு தன்னிலை விளக்கம், தோப்புக்கரணம், மாப்புக் கடிதம் என்று போலிகளின் இன்றைய ஒரு வார பொழுதை போகிற போக்கில் அடிக்கும் ஒரு காமடி விமரிசனத்தால் காலி செய்து விட்டது தினமலர்.
ஜெயாவின் இந்த அதிரடித் திட்டங்களெல்லாம் “நம்மவா” இயல்புக்கு மாறானது என்பதே தினமலரின் ஆதங்கம். அதனால்தான் போலிகளை இழுத்து வந்து பிறகு சோவியத் யூனியனுக்கும் போகிறது தினமலர்.
அதாவது சோவியத் யூனியனிலும் இதே போன்று அனைத்து தொழில்களையும் அரசே ஏற்று நடத்தி பின்னர் அந்தக் கொள்கை தோல்வி அடைந்து சோவியத் நாடு சிதைந்து, உலகமும் சுதந்திர சந்தை, உலகமயமாக்கம் எனும் முதலாளித்துவக் கொள்கைகளில் நிலை பெற்றுவிட்ட பிறகு தமிழகத்தின் இந்த பாதை சரிதானா என்று கேள்வி எழுப்புகிறது, தினமலர். 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ‘கம்யூனிச’ ஆட்சி இருந்தாலும் அந்த அரசு கூட தமிழக அரசு போல அனைத்து தொழில்களையும் துவங்க முனையவில்லையாம்.

இதனால் அல்லிராணிக்கு வரலாறு தெரியவில்லை என ராஜ குரு தலையில் குட்டுவதாக நினைக்காதீர்கள். மாறாக “இலவசம், மானியம், அரசே தொழிலில் இறங்குவது என்ற பாதையில் தமிழகம் சென்று கொண்டு இருப்பது சரிதானா என்ற ஐயம் ஏற்படுகிறது” என்று சரியாக பாயிண்டுக்கு வருகிறது தினமலர்.
முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள், வரி விலக்குகளை ஆதரிக்கும் இந்த ராஜரிஷிக்கள், மக்களுக்கு நேரடியாகவோ இல்லை மறைமுகவாகவோ தரப்படும் இத்தகைய திட்டங்களை, சேர்த்து வைத்த வெறுப்போடு பார்க்கிறார்கள். தமிழக அரசின் ஆண்டு வருமானம், 1.27 லட்சம் கோடி ரூபாய், இதில் இலவசம், மானியங்களுக்கும் 48,000 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடுவதாக கவலைப்படுகிறது தினமலர்.
விவசாயம், கல்வி, எரிபொருள், சுகாதாரம், மின்சாரம் முதலியவற்றுக்கு மானியங்கள் தரக்கூடாது, அவை சந்தை விலையில் காசு கொடுத்து வாங்குபவருக்கு மட்டுமே தனியார் நிறுவனங்களால் அளிக்கப்பட வேண்டும், என்று உலக வங்கி சொல்வதை விரைவாகவே நமது அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இத்தகைய மானியங்களின் குறைப்பால் அதிகரித்து வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு இன்னபிற பிரச்சினைகளை வைத்து மக்கள் போராடக் கூடாது என்பதற்கே நூறு நாள் வேலைத்திட்டம், உணவுப் பாதுகாப்பு திட்டம், மானிய விலை அரிசி மற்றும் இலவசப் பொருட்கள் அளிக்கப்படுகின்றன.
மறுபுறம் இந்த திட்டங்களின் மூலம் ரேசன் கடைகள், அரசு கொள்முதல், போன்றைவையும் மெல்ல மெல்ல மூடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் கல்வியை தனியார் மயமாக்கி விட்டு இலவச லேப்டாப் கொடுப்பதோ, பெப்சி-கோக் மற்றும் தண்ணீர் தனியார் மயத்திற்கு நாட்டின் நீர் வளத்தை விற்று விட்டு அம்மா குடிநீர் கொடுப்பதோ, பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் – தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிடியில் மக்களை தள்ளிவிட்டு அம்மா மருந்தகத்தை ஆரம்பிப்பதோ நிச்சயம் ஒரு ஏமாற்று வேலைதான் என்பதை ராஜரிஷிகளும் அறிவார்கள். ஆனால் அத்தகைய ஏமாற்றும் செயலில் கூட மக்களுக்கு உதவக்கூடாது என்பதுதான் இவர்களது முதலாளித்துவ வெறியின் விசேடம்.
தனியார் உற்பத்தி துறையை ஊக்குவிக்காமல் அரசே இப்படி தொழில்களை துவங்கினால் வேலை வாய்ப்பு அருகி மக்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயருவார்கள் என்று ஓதுகிறது தினமலர். அம்மா குடிநீரோ இல்லை அம்மா உணவகமோ, அம்மா காய்கறி கடையோ இங்கிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கார், கணினி, ஐ.டி, வங்கி, மின்னணுவியல் பொருட்கள், இன்னபிற தொழில்களுக்கு போட்டி என்றால் இவர்களை எதைக் கொண்டு அடிப்பது?
அம்மா உணவகத்தால் அண்ணாச்சியின் சரவண பவனுக்கு நட்டம் என்று எழுதினால் எப்படி சிரிப்பீர்களோ அது போலத்தான் இதுவும். உண்மையில் அம்மா உணவகத்தால் அந்த பகுதிகளில் இருக்கும் கையேந்தி பவன்களுக்கு வேண்டுமானால் நட்டமாக இருக்கலாம். ஆனால் அந்த கையேந்தி பவன்களே இருக்க கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்? சொல்லப் போனால் இப்படி கையேந்தி பவன்கள் நடத்தும் ஏழைகள் ஒழிக்கப்படுவதை தினமலர் மற்றும் அதன் நடுத்தர வர்க்க வாசகர்கள் எப்போதும் ஆதரிக்கவே செய்கிறார்கள். பிறகு எதற்கு இந்த ஓநாய் அழுகை?
தனியார் ஆம்னி பேருந்துகளை ஊக்குவிக்கும் முகமாக அரசு வேகப் பேருந்துகள் திட்டமிட்டு ஒழிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளை நலிவடைய வைப்பதின் மூலம் தனியார் மருத்துவமனைகள் செழிக்க வைக்கப்படுகின்றன. சுயநிதிக் கல்லூரி கொள்ளையர்களை வாழ வைக்கவே அரசு பள்ளிகள், கல்லூரிகள் எந்த வசதிகளுமின்றி நலிவடைய வைக்கிறார்கள். இப்படி ஆதாரமான அனைத்திலும் தனியார் மயம் வந்த பிறகு இந்த ஒரு ரூபாய் இட்லியும், பத்து ரூபாய் குடிநீரும் உற்பத்தி துறையை அழித்து விடுமென்றால் ராஜரிஷிக்களின் அற்பத்தனத்தையும் சதித்தனத்தையும் சேர்த்தே அறியலாம்.
கல்வி, மருத்துவமனையில் இலவசமும், மற்ற தொழில்களின் தனியாரும் வேண்டுமென தினமலர் கோருகிறது. எனில் சுயநிதிக் கல்லூரி முதலாளிகளை எதிர்த்து இவர்கள் எப்போது எழுதினார்கள் ? மாறாக கல்வி சீசனில் எல்லா தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை வாங்கிப் போட்டுத்தானே இலாபத்தை பார்த்தார்கள்? இல்லை ராமசுப்பையரின் குடும்பம் மட்டும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்கிறதா? எதற்கு இந்த நாடகம்?
இதையெல்லாம் சேர்த்துக் கொள்வதற்கு காரணம் இத்தகைய இலவசங்கள் இருந்தால் தனியார் முதலாளிகளின் தொழிலாளி சேம நலச் செலவுகள் குறையும் என்பது தினமலரின் கணக்கு. அரசே கல்வி, மருத்துவத்தை பார்த்துக் கொண்டால் முதலாளிகள் தொழிலாளிகளை கசக்கி பிழிந்து வேலை வாங்குவதில் கவனம் செலுத்தலாமில்லையா?

“விஷன் – 2023” என்ற தொலைக்கு ஆவணத்தை வெளியிட்டு தொழிலதிபர்களின் பாராட்டை பெற்ற ஜெயலலிதா தற்போது “சிலரின் தவறான வழிகாட்டுதலால், கண்ணை விற்று சித்திரம் வாங்கும் படலத்தில் இறங்கி உள்ளார் என்ற, கருத்து எழுந்து உள்ளது.” என பாதுகாப்பாக முடிக்கிறார்கள் தினமலரின் ராஜரிஷிக்கள். இது அவதூறு வழக்கின் மீதான பயத்தோடு நம்மவாவ நாமே விட்டுக் கொடுக்கலாமோ எனும் பாசமும் கலந்தது.
தனியார் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி, குறைந்த விலையில் 24 மணிநேரமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் தமிழக அரசுதான், தினமலர் கவலைப்படும் உற்பத்தி துறையில் உள்ள தமிழகத்தின் சிறு, நடுத்தர முதலாளிகளுக்கு பல மணி நேர மின்தடை போட்டு அழித்து வருகிறது. இப்படி மின்சாரத்தில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தனியார் மயத்தை முடுக்கிவிடும் வேலையைத்தான் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.
இதை மறைக்கவே இலவச, கவர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நல உதவிகளை செய்கிறார்கள். இவையெல்லாம் ஏழைகளான மக்களுக்கு கிடைக்கும் சொற்ப உதவி என்பதைத் தாண்டி அவர்களது வாழ்வில் எந்த பாரிய மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. மறுபுறம் தமது வாக்குவங்கியை கவருவதற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கு இவை பயன்படுகின்றன. முதலாளித்துவ நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி செலவழித்து தமது விளம்பரங்களை மக்களிடம் கொண்டு செல்கின்றன. அதே போல ஓட்டுக் கட்சி அரசுகள் மக்கள் பணத்தை வைத்து தமது விளம்பரங்களை இத்தகைய நலத்திட்டங்களை வைத்து கொண்டு போகின்றன.
மேலும் போராடும் மக்களின் வாயை அடைக்க இந்த திட்டங்கள் கருத்தளவிலும், உணர்ச்சி அளவிலும் பயன்படும் என்பதால் இது ஊரைக் கொள்ளையடிக்கும் தாதா, ஊர்க்கோவிலுக்கு கொடை வைத்து கூழ் ஊற்றுவதற்கு ஒப்பானது.
டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது என்று தினமலரும் கவலைப்படுகிறது. ஆனால் இந்த டாஸ்மாக்கின் வருமானத்தை வைத்துத்தான் ஜெயாவின் இலவசத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இது மக்களிடமிருந்து பிக்பாக்கட் அடித்து அதில் கொஞ்சம் அதே மக்களுக்கு தரப்படுவதுதான். ஆனால் டாஸ்மாக்கின் கணிசமான வருமானம், மிடாஸ், மல்லையா போன்ற தினமலரின் மனம் கவர்ந்த முதலாளிக்குத்தானே போகிறது? அந்தப்படிக்கு தினமலரின் ‘உற்பத்தி துறை’ சேமமாகத்தானே செயல்படுகிறது?
எல்லாவற்றையும் விட இந்த அற்பத்தனத்தை போய் சோவியத் யூனியனுடன் ஒப்பிட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அக்ரகாரமோ, அமெரிக்காவோ, கம்யூனிசம் என்றால் இப்படித்தான் வன்மத்துடன் பார்ப்பார்கள் என்பதற்கு சான்று.
மேலும் ராஜிவ் கொலை வழக்கில் உள்ள எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஜெயாவின் முடிவு தினமலருக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயாவின் தேர்தல் ஆதாயத்திற்காக செய்யப்படும் இந்த நடவடிக்கையை அவர் தனது பார்ப்பன பாசிச மதிப்பீடுகளை மீறி செய்யலாமா என்பதே தினமலரின் கோபம். இது குறித்து பின்னர் எழுதுகிறோம். ஆனால் தினமலரின் நோக்கம் பார்ப்பன தர்மத்திலிருந்து விலகும் ராணியை மயிலிறகால் வருடி சுய நினைவுக்கு திருப்புவதே. அதற்காத்தான் சோவியத் யூனியனை இழுத்து வந்து இட்லி விற்பதை கண்டிப்பதாக கூறிவிட்டு, ராஜிவ் கொலை வழக்கு எழுவரை விடுதலை செய்யாதே என்று ஓதுகிறார்கள். இந்தச் செய்தி தலைப்புச் செய்தியின் கீழே வருகிறது.
மத்தியில் மோடியம், மாநிலத்தில் மாமியும்தான் பார்ப்பன ஊடகங்கள் விரும்பும் மனங்கவர்ந்த ஆட்சியாளர்கள். அதை ‘தருமம்’ மீறாமல் நிறைவேற்றுவது எப்படி? அதாவது இலக்கில் உள்ள தருமம் எப்போதும் மாறப்போவதில்லை. ஆனால் அதை அடையும் வழி எப்படி இருக்கலாம் என்பது இவர்களுக்கிடையே உள்ள மெலிதான வேறுபாடு. எழுவர் விடுதலை என்பது பார்ப்பன பாசிசத்தை சித்தாந்தமாக கொண்டிருக்கும் ஜெயாவுக்கு உவப்பானதல்ல. சொல்லப் போனால் ராஜிவ் கொலையை வைத்துத்தானே அவர் தனது முதல்சுற்று சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றினார்.
தற்போது எழுவர் விடுதலை என்பதன் பொறுப்பை மத்திய அரசுக்கு தள்ளிவிட்டிருக்கும் ஜெயா இதனால் இரண்டு விதங்களிலும் ஆதாயத்தை அடைவார். எழுவர் விடுதலை ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி இரண்டிலுமே அவரது பெருமை மகத்தானதாக கொண்டாடப்படும். அந்த கொண்டாட்டத்தை வாக்குகளாக மாற்றி வரும் தேர்தலில் வெற்றியை அதிகப்படுத்த வேண்டும் என்பதைத் தாண்டி ஜெயாவுக்கு வேறு நோக்கமில்லை. ஆனால் ‘தர்மத்தை’ மீறி இப்படி முடிவெடுப்பது சரியா என்பது தினமலரின் கேள்வி.
ராஜரிஷிக்களைப் பொருத்தவரை தர்மம் என்பது மக்களை அடக்கி ஒடுக்கும் தண்டனையோடுதான் அதிகம் தொடர்புடையது. பார்ப்பன இந்து தேசியத்திற்கு அடி கொடுப்பது போல எழுவர் விடுதலை அமைந்து விட்டால் என்ன செய்வது? இங்கே தண்டனைகளுக்கு என்ன பயம் இருக்கும் என்பதே தினமலரின் கேள்வி. அவதூறு வழக்குகளுக்காக அநாமதேயங்களைக் கூட விட்டு வைக்காத ஜெயா இந்த பயத்தை முன்னிலும் வீச்சாக செயல்படுத்துவார் என்பதால் தினமலர் பீதி அடையத் தேவையில்லை.
எனினும்இதே தினமலர் நேரடியாக ஜெயாவை கண்டிக்க முன்வரவில்லை. அதனால்தான் துதிபாடிகளின் பேச்சை கேட்டு ஜெயா செயல்படுகிறார் என்று மரியாதையுடன் எழுதுகிறது. என்ன இருந்தாலும் ஜெயா அவர்களது அப்பார்ட்மெண்டில் இருக்கும் அரச மாமிதானே? எந்த ஊரிலாவது ஒரு ‘மாமா’ ஆள்பவர்களை தைரியமாக திட்ட முடியுமா என்ன?