Tuesday, April 22, 2025
முகப்புசெய்திகிட்னியை பழுதாக்கிய வெக் நிறுவனம் - புஜதொமு ஆர்ப்பாட்டம்

கிட்னியை பழுதாக்கிய வெக் நிறுவனம் – புஜதொமு ஆர்ப்பாட்டம்

-

சூர் சிப்காட்-2ல் வெக் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) பி.லிட், என்ற ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 3 ஆண்டுகளாக வேலை செய்த பெயின்ட் அடிக்கும் நிரந்தர தொழிலாளி விஜயசந்திரன்-க்கு 2 கிட்னியும் செயல் இழந்து விட்டது.  நான்கு மாதகாலமாக மருத்துவமனையில் உள்ளார். இன்னும் நிறைய தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்தம் போன்ற பல வியாதிகள் உள்ளன. இதற்கெல்லாம் காரணம் ஆலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாதது ஆகும்.

விஜயசந்திரன்  உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இரண்டு தினங்களுக்கு ஒரு முறை இரத்த சுத்திகரிப்பு செய்வதற்காக அவரிடமிருந்த நகை, நட்டுகளை விற்றும், வட்டிக்கு பணம் வாங்கியும்தான் மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும் அவருடைய மருத்துவ செலவுக்கோ, குடும்ப பராமரிப்புக்கோ நிர்வாகம் ஏதும் செய்யவில்லை.

இதனால்  அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து இவ்வாலையில் கிளைச்சங்கமாக இயங்கி வருகின்றனர். இச்சங்கத்தின் மூலம் ஊதிய உயர்வு பொது கோரிக்கையும், விஜயசந்திரனின் உயிரை காப்பாற்ற மருத்துவ செலவை ஈடு செய்யக் கோரியும் நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் பலன் இல்லாததால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் தோழர் வேல்முருகன் தலைமை தாங்கினார். தோழர் இராஜேஸ்வரன், கிளை இணைச்செயலாளர், செந்தில் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இறுதியாக தோழர் சாது சுந்தர் சிங் நன்றி உரையாற்றினார். அருகில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் இரா சங்கர், அசோக் குமார், சின்னசாமி கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்