Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்டியூப் புராடக்ட்ஸ் : திமுக, சிபிஎம்மை தோற்கடித்த புஜதொமு

டியூப் புராடக்ட்ஸ் : திமுக, சிபிஎம்மை தோற்கடித்த புஜதொமு

-

சென்னை ஆவடியில் உள்ள டியூப் புராடக்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் பிரபல முருகப்பா குழுமத்தைச் சேர்ந்ததாகும். இந்நிறுவனத்தில் செயல்பட்டு வரும் பொதுத் தொழிலாளர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த மே’2013-ல் நடந்தது. அந்த தேர்தலில் பு.ஜ.தொ.மு அணித் தோழர்கள் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சி.ஐ.டி.யூ மற்றும் தி.மு.க சார்புடைய அணியினரை விட அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றனர். பு.ஜ.தொ.மு அணியின் தலைமையை ஆலை நிர்வாகம் அரைகுறை மனதுடனே அங்கீகரித்தது. நமது தலைமையை ஏற்ற தொழிலாளர்களுக்கு ’பாடம்’ புகட்ட வேண்டும் என்பதற்காக, தொழிலாளர்கள் இதுவரை அனுபவித்து வந்த பல்வேறு சலுகைகளை வெட்டி வந்தது. மாற்று அணி தொழிலாளர்களை நமக்கு எதிராக உசுப்பேற்றியும் வந்தது. எனினும், சமரசமற்ற நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் மத்தியில் நமது அரசியலை நிலைநாட்டி வந்தோம்.

ஆவடி டியூப் புராடக்ட்ஸ் இந்தியா
ஆவடி டியூப் புராடக்ட்ஸ் இந்தியா (படம் : நன்றி http://www.tiindia.com/article/events/360)

இந்நிலையில் மேற்படி நிறுவனத்தின் சேமநல நிதி டிரஸ்டுக்கான தேர்தல் இன்று (15.3.2014) நடைபெற்றது. 3 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் சி.ஐ.டி.யூ மற்றும் தி.மு.க அணிகளுடன் நமது அணியும் போட்டியிட்டது. பு.ஜ.தொ.மு அணியால் ஏற்கனவே நிர்வாகம் பல சலுகைகளை பறித்து விட்டதாகவும், அடுத்து வரும் தொழிற்சங்கத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பி..எஃப் தேர்தலை கருத வேண்டும் எனவும், நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க பு.ஜ.தொ.மு அணியைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் சி.ஐ.டி.யூ மற்றும் தி.மு.க அணியினர் பிரச்சாரம் செய்தனர்.

இந்தப் பிரச்சாரத்திலிருந்தே இவர்களது தொழிலாளர் துரோகம் தெரிகிறது. புஜதொமு சமரசமில்லாமல் போராடுகிறது. அதனால் நிர்வாகம் பயந்து கொண்டு உரிமைகளை பறிப்பதாக அச்சுறுத்துகிறது. ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் போராடுவதால் புஜதொமுவை தொழிலாளர்கள் வரவேற்கின்றனர். இதில் புஜதொமு போல நாம் போராடக்கூடாது, நிர்வாகத்தை அண்டிப்பிழைத்து காலத்தை ஓட்டலாம் என்பதையே தொழிற்சங்க உரிமையாக முன்வைக்கின்றன, திமுக மற்றும் சிபிஎம்மின் தொழிற்சங்கங்கள். தேர்தல் அரசியல் முதல் தொழிற்சங்க தேர்தல் வரை இந்தக் கட்சிகளின் யோக்கியதை இதுதான்.

நிர்வாகத்தின் மறைமுக அச்சுறுத்தல் மற்றும் சமரசவாத சங்கங்களின் அவதூறு ஆகியவற்றை டி.பி.ஐ தொழிலாளர்கள் தவிடுபொடியாக்கி விட்டனர். தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு பு.ஜ.தொ.மு தலைமையை ஏற்க வேண்டும் என்பதை உணர்ந்து நமது அணி சார்பில் போட்டியிட்ட 3 தோழர்களையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பு.ஜ.தொ.மு அணி
புவனேந்திரன் 237
சிறீதரன் 233
பாலமுருகன் 199

சி.ஐ.டி.யு அணி
ஜெயபால் 178
மேகவர்மன் 144
முருகன் 134

தொ.மு.ச
தனசேகரன் 107
ஸ்டீபன் 175
தணிகைவேல் 147

முருகப்பா குழுமத்தில் ஏற்கனவே டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆலையில் பு.ஜ.தொ.மு – வின் செங்கொடி ஆழமாக ஊன்றி விட்ட நிலையில் தற்போது டி.பி.ஐ நிறுவனத்தில் தொழிலாளர்களது நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். ஒட்டு மொத்த முருகப்பா குழுமத்திலும் பு.ஜ.தொ.மு-வின் செங்கொடி பறக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டக் குழு