Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்வி25,090 மாணவர்கள் - 157 குடிநீர் குழாய்கள் !

25,090 மாணவர்கள் – 157 குடிநீர் குழாய்கள் !

-

25 ஆயிரத்து 90 மாணவர்களுக்கு வெறும் 157 குடிநீர் குழாய்கள்; மாநகராட்சிப் பள்ளிகளின் சீர்கேட்டை மந்திரக்கோலால் மாற்றமுடியாது!

புமாஇமு – மாநகராட்சி கல்வி அதிகாரிகளின் ஆய்வறிக்கை பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்துவோம்!

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, ஆசிரியப் பெருமக்களே,

மாநகராட்சிப் பள்ளி
படம் : நன்றி timesofindia

“கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்று அவ்வைப்பாட்டியும், ”கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் ” என்று வள்ளுவனும் அனைவரும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். ஆனால், இன்று அரசோ அத்தகைய கல்வியை நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்களுக்கு மறுத்து வருவதை சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை பார்க்கும் எவராலும் மறுக்க முடியாது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை, போதிய வகுப்பறை, வாத்தியார், தரமான ஆய்வுக்கூடம், நூலகம் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து, தரம் உயர்த்த வேண்டுமென கடந்த ஓராண்டுக்கும் மேலாக  புமாஇமு பெற்றோர்கள் மாணவர்களைத் திரட்டி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்படிப்பட்ட தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகே மாநகராட்சி கல்வி அதிகாரிகளுடன் எமது பிரதிநிதிகளும் இணைந்து பள்ளிகளை ஆய்வுசெய்ய மேயரின் அனுமதியைப் பெற்றோம். ஜனவரி 17, 18, 20 தேதிகளில் 10 மண்டலங்களில் 57 பள்ளிகளில் ஆய்வில் இறங்கினோம். பள்ளிகளின் உண்மை நிலையைப் பற்றி கண்ட காட்சிகளையும், ஆசிரியர், மாணவர்களின் உள்ளக் குமுறல்களையும் விரிவான அறிக்கையாக 24 பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்.

புள்ளிவிபரம்
படம் : நன்றி timesofindia

ஏழை கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தரமானக் கல்வியை கொடுக்க போதிய நிதியை ஒதுக்கி, காலதாமதமின்றி உடனுக்குடன் திட்டமிட்டு நிறைவேற்றத்தான் உள்ளூராட்சி நிர்வாகமான மாநகராட்சி பள்ளிகளை நடத்துவது அவசியமாகிறது. ஆனால், ’சிங்காரச்’ சென்னையிலோ மாநகராட்சிப் பள்ளிகள் ’தீண்டத்தகாத சேரிகளாகவே’ நடத்தப்படுகின்றன. மாணவர் எண்ணிக்கை குறைவதைக் காரணம் காட்டி இரண்டு பள்ளிகளை ஒன்றாக இணைப்பது, பள்ளிகளை இழுத்து மூடி வணிக வளாகமாக்குவது, அரசு – தனியார் கூட்டு ஒப்பந்தம் என தனியாரிடம் ஒப்படைப்பது இவையெல்லாம் எப்படி என திட்டம் தீட்டுவதில்தான் தீவிரம் காட்டி வருகிறது மாநகராட்சி.

  • ஆண்டு தோறும் மாநகராட்சியில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் போவது எங்கே?.
  • கல்விக்காக மட்டும் செலவிட அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் 2% செஸ் வரியில், கடந்த 8 ஆண்டுகளில் செலவிடப்படாமல் மாநகராட்சியில் வைத்திருக்கும் தொகை ரூபாய் 175 கோடி. மாநகராட்சியின் 284 பள்ளிகளுக்கு கழிவறை, குடிநீர், வகுப்பறை வசதிகள் செய்துகொடுக்க இந்தப் பணத்தை ஏன் பயன்படுத்தவில்லை?
  • 20 மாணவர்களுக்கு ஒரு குடி நீர் குழாய் இருக்க வேண்டும் என்கிறது அரசு விதி (பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் : 270). ஆனால் 25 ஆயிரத்து 90 மாணவர்களுக்கு வெறும் 157 குடிநீர் குழாய்கள்தான் உள்ளனவே ஏன்?
  • சுமார் 8 மணிநேரம் பள்ளிக்கூடத்தில் அடைந்துகிடக்கும் மாணவர்கள் தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் எப்படி கல்வி கற்க முடியும்?

இந்த கேள்விகளை கேட்க பெற்றோர்கள், மாணவர்கள் யாரும் முன் வருவதில்லை என்ற காரணத்தால்தான் மாநகராட்சிப் பள்ளிகளின் அவலம் ஒழியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் கல்வி தரமாக கிடைக்கவில்லை.

எங்கள் மதிப்புக்குறிய பெற்றோர்களே, மாநகராட்சிப் பள்ளிகள் நம் பள்ளிகள். அதை பாதுகாப்பதும், தரம் உயர்த்தப் போராடுவதும் நம் கடமை. கடந்தாண்டு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சியின் 32 மேனிலைப் பள்ளிகளில் 12 பள்ளிகள் 100% தேர்ச்சியை காட்டி சாதித்துள்ளன. அடிப்படை வசதிகளே இல்லாத மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர் பெருமக்களின் கடுமையான உழைப்பினால் பெற்ற இந்த வெற்றி நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய மிகப்பெரிய சாதனை இல்லையா?

தமிழகத்திலுள்ள சுமார் 11,000 தனியார் பள்ளிகளில் பல ஆயிரங்களை பிடுங்கிக் கொண்டு, ஸ்பெசல் கிளாஸ், சுமார்ட் கிளாஸ் என கதையளந்துவிட்டாலும் ஓரிரு பள்ளிகள்தானே 100% தேர்ச்சியை பெறுகின்றன. இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாநகராட்சிப்பள்ளிகளுக்கு என்ன குறைச்சல்? ஏன் இந்த பள்ளிகளை தவிர்த்துவிட்டு தனியார்பள்ளிகளில் பல ஆயிரங்களை கொட்டியழ வேண்டும்?

தனியார் பள்ளிகளில் கேட்கும் பணத்திற்காக ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் ஓய்வின்றி கடுமையாக உழைத்து ஓடாய் தேய்வதை நிறுத்துவோம். நாம் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைத்து கொடுத்த வரிப்பணத்தில் இயங்கும் மாநகராட்சிப் பள்ளிகளை ஒழுங்குபடுத்த சற்று கவனம் செலுத்துவோம். மாநகராட்சிப் பள்ளிகளின் சீர்கேட்டை மந்திரக்கோளால் மாற்றமுடியாது; நம்முடைய போராட்டம்தான் நம் பிள்ளைகளின் தரமானக் கல்விக்கு கலங்கரை விளக்கமாகும்.

ஆம், உங்கள் ஆதரவோடு போராடினோம். மாநகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கையை மாநகராட்சியிடம் கொடுத்திருக்கிறோம். மேயரும், ஆணையரும், உதவி ஆணையரும் (கல்வி) பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்துள்ளார்கள். அதை கண்காணிப்பதும், அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி மாநகராட்சிப் பள்ளிகளை தரம் உயர்த்தப் போராடுவதும் நம் அனைவரின் கடமையாகும்.

பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை மனித வாழ்க்கைக்கு அவசியமென்றால், அந்த மனிதன் அன்பு, கருணை, இரக்கம், நீதிநெறி ஒழுக்கங்கள் எனும் மனித மாண்புமிக்கவனாக, எதையும் சாதிக்கும் பேராற்றல் கொண்டவனாக சமூகத்தோடு இணைந்து வாழும் முழு மனிதனாவதற்கு அவசியமானது கல்வி. விலங்கிடமிருந்து மனிதனை பிரித்துக்காட்டுவது கல்விதான். அது வியாபாரப் பண்டமல்ல. ஒரு உன்னதமான சேவை. எனவே, அரசே தன் சொந்த செலவில் அனைவருக்கும் இலவசமாக, தரமாக கல்வியை வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனியார்மயமாக்குவது, நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு சமம். எனவே, எந்தக் காரணத்தைச் சொல்லியும் மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முயன்றால் அதை முறியடிப்போம். அதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்.

பத்திரிகை செய்திகள்

rsyf-schools-toi

செய்தி :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க