Wednesday, April 23, 2025
முகப்புகலைகவிதைதேர்தலை விடுத்து புரட்சியை நடத்து !

தேர்தலை விடுத்து புரட்சியை நடத்து !

-

தேர்தலை விடுத்து
புரட்சியை நடத்து!

பல வருசம் ஆச்சு
ஆத்துல தண்ணிய பாத்து,

பல வருசம் ஆச்சு
வயல்ல பச்சையப் பாத்து,

இந்தியா விவசாயம் - நாடாளுமன்றம்பல வருசம் ஆச்சு
மரத்துல காய்ப்பை பாத்து,

பல வருசம் ஆச்சு
வீட்ல மாடு கத்தி

பல வருசம் ஆச்சு
வண்ணத்துப் பூச்சி வீட சுத்தி,

பல வருசம் ஆச்சு
தறியில நூலப் பாத்து

பல வருசம் ஆச்சு
வலையில மீனப் பாத்து

பல வருசம் ஆச்சு
பணமில்லாம மருத்துவம் பாத்து,

பல வருசம் ஆச்சு
காசில்லாம கல்வியப் பாத்து,

பல வருசம் ஆச்சு
பெட்டிக்கடை அக்காவிடம் சிரிப்பை பாத்து,

பல வருசம் ஆச்சு
எட்டு மணிநேர வேலை என்ற பேச்சை கேட்டு

பல வருசம் ஆச்சு
தெருக்குழாயில் தண்ணி பாத்து

பல வருசம் ஆச்சு
தெருவோட கவுன்சிலரப் பாத்து

பல வருசம் ஆச்சு
மனு கொடுத்த கலெக்ட்டர பாத்து

பல வருசம் ஆச்சு
மாமூல் வாங்காத போலீசைப் பாத்து

பல வருசம் ஆச்சு
யோக்கியனா நீதி பதியைப் பாத்து

பல வருசம் ஆச்சு
மனிதனை மனிதனாய் பாத்து

பல வருசம் ஓட்டுபோட்டு
பாராளுமன்றமே உளுத்துப்போச்சு

மாத்தி மாத்தி ஓட்டு போட்டு
ஊரும் நாடும் பாழாப் போச்சு

செத்த பொணத்த காப்பாத்துமா
தேர்தல் சென்ட்டு பூச்சு!

மொத்த சமூகத்தையும் நாறடிக்கும்
இந்த போலி ஜனநாயகத்தை

புதைப்பதுதான் ஒரே மூச்சு!

– துரை.சண்முகம்