அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்(டிசி)-க்கும் உக்ரைன் தலைநகர் கீவ்-க்கும் இடையேயான தூரம் 7,800 கிலோமீட்டர். இருப்பினும் இவ்வளவு தொலைவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அமெரிக்க அரசு குய்யோ முய்யோவென பறக்கிறது. அமெரிக்க அதிபர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அணி திரட்டுகிறார், சவுதி அரேபியாவுக்கு போய் ஷேக்குகளின் பண மூட்டையையும் உத்தரவாதப் படுத்திக் கொள்கிறார்.

என்ன நடக்கிறது?
‘உலகத்தில் எங்கெல்லாம் ‘தரும’த்தின் தடம் எப்போதெல்லாம் மறையத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் அங்கு நான் வருவேன்’ என்பதுதான் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கீதை. அப்படி ஒரு புனித கடமையுடன் அமெரிக்க குடியரசு ஏற்படுத்தப்பட்டதாக அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் எப்போதும் ஜபித்து வருகின்றன. பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட அந்த தருமம் எப்போதும் ஓய்வதில்லை.
“படையெடுப்புகள் மூலம் நாடுகளின் எல்லைகளை மாற்றக் கூடாது, பன்னாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்க உரிமை உண்டு போன்ற ஐரோப்பிய நாடுகள் அனைவரும் ஏற்றுக் கொண்ட அறங்களை ரசியா உடைத்திருக்கிறது” என்கிறார் ஒபாமா.
ஆனால், அமெரிக்க ஆதரவு கட்சிகளால் பதவி இறக்கப்பட்ட உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவர். உக்ரைன் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தை நிராகரித்து ரசிய ஆதரவு நிலையை அவர் எடுத்திருந்தார். இப்படி உக்ரைன் மக்கள் தமது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களது பிரதிநிதி மூலம் தீர்மானிப்பது விரோதமானது என்று முடிவு செய்த அமெரிக்கா ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு அளித்தது. இதுதான் பன்னாட்டு சட்டங்களையும், ஜனநாயகத்தையும் அமெரிக்கா மதிக்கும் இலட்சணம்.
உக்ரைன் நெருக்கடியை பற்றி எழுதும் நியூஆர்க்கின் ரட்கர்ஸ் பல்கலைக் கழக பேராசிரியரான அலக்சாண்டர் மோடில் “உக்ரைன், போஸ்னியா, தாய்லாந்து, வெனிசுலா முதலான பல நாடுகளில் பெரும்பான்மையினரின் ஆட்சி என்ற பொருளிலான ஜனநாயகத்தை ‘மக்கள்’ விரும்பவில்லை. நடுத்தர வர்க்கங்கள் தமது ஒளிமயமான எதிர்காலத்தை தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் ஊழல் அரசுகள் என்று தாம் கருதுபவற்றை எதிர்த்து போராடுகிறார்கள்” என்று நடுத்தர வர்க்கத்தை பாசிசமயப்படுத்தும் ‘ஜனநாயகத்தை’யே அமெரிக்கா ஆதரிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

யனுகோவிச் அரசை எதிர்த்து போராடிய, பாசிச கட்சிகள் உள்ளிட்ட நடுத்தர வர்க்க சிறுபான்மைக்கு, அமெரிக்கா நிதி உதவியும், அரசியல் ஆதரவும் கொடுத்து ஊக்குவித்தது. 4 மாத தெரு போராட்டங்களுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நடந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான தரப்பு ஆட்சியைப் பிடித்தது.
மொத்தத்தில் அமெரிக்கா முன் வைக்கும் பொருளாதார பாதையை ஏற்றுக் கொண்ட கட்சிகளை ஒரு நாட்டின் மக்கள் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்ந்தெடுத்து விட்டால் பிரச்சனையில்லை. இல்லா விட்டால், அமெரிக்க உளவுத் துறை, அமெரிக்க நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் ஆதரவுடன் சிறுபான்மை நடுத்தர வர்க்க மக்கள் ஊழலை எதிர்த்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார்கள். இரண்டும் நடக்கவில்லை என்றால் அமெரிக்க ராணுவம் இருக்கவே இருக்கிறது.
ஈரானில் 1951-ம் ஆண்டு பெட்ரோலிய துறையை நாட்டுடைமையாக்கிய பிரதமர் முகமது மொசாதின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து தனது தனது கைப்பாவையாகிய ஷாவின் ஆட்சியை ஏற்படுத்தியது. அதே போல 1973-ல் தென் அமெரிக்க நாடான சிலியில் ஜனநாயக முறையில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிஸ்டு பிரதமர் சால்வடார் அலண்டே சிலியின் சுரங்கங்களை நாட்டுடமை ஆக்கியதைத் தொடர்ந்து அவரைக் கொன்று ஜெனரல் பினோசெட்டை ராணுவ சர்வாதிகாரியாக ஆட்சியில் அமர்த்தியது அமெரிக்கா. 1980-களில் ஈரானுக்கு எதிரான போரில் தான் ஆதரவளித்த சதாம் உசைனை 1990-களில் ஈராக் மக்கள் கலவரம் செய்து பதவி இறக்க முன் வராமல் போகவே, 2002-ல் தனது இராணுவத்தை அனுப்பி ஆட்சி மாற்றத்தை நடத்தியது. அமெரிக்க ‘ஜனநாயக’த்துக்கான சேவையெனும் பெயரில் அமெரிக்க ஆதிக்கம் தொடர்ந்து நடக்கிறது. இது போன்று பல டஜன் சர்வாதிகார ஆட்சிகளை உலக நாடுகளில் தூக்கிப் பிடித்து வந்திருக்கிறது அமெரிக்கா.
அதாவது, அமெரிக்க முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் சக்திகள் அதிகாரத்தில் நீடிக்கும் வரையில் ஒரு ஆட்சி நீடிக்கலாம் என்பதே அமெரிக்காவின் அறம். இதற்கு மனிதாபிமானம், ஜனநாயகம், சுதந்திர சந்தை, கம்யூனிச எதிர்ப்பு என்று பல பெயர்கள் சூட்டினாலும் சாராம்சம் ஒன்றுதான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு எங்கெல்லாம் தீங்கு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அமெரிக்காவின் நிதி, அரசியல், ராணுவ கரங்கள் நீளும் என்பதுதான் கொள்கை.
1990-களில் சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியன் உடைந்து 15 குடியரசுகளாக பிளவுபட்ட போது, ரசியாவில் அதிகாரத்துக்கு வந்த ரசிய முதலாளிகள், ரசிய மக்களையும், அண்டை குடியரசுகளையும் சுரண்டி தாம் கொழுக்க அமெரிக்க பாணி ஜனநாயகம் வந்து விட்டதாக கொண்டாடினார்கள். ஆனால், அமெரிக்காவோ தனது ஆதிக்கத்தை ரசிய செல்வாக்குப் பகுதியாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நீட்டியதோடு நில்லாமல், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்துக்குள்ளும், நேட்டோ இராணுவ கூட்டணிக்குள்ளும் இழுக்க ஆரம்பித்தது. இப்போது அதன் ஆதிக்கம் ரசியாவின் கொல்லைப்புறமான உக்ரைன் வரை நீண்டிருக்கிறது.

ரசிய ஆளும் வர்க்கத்திற்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உக்ரைன் ஆதாரமான பகுதியாக உள்ளது. ரசியாவின் இயற்கை எரிவாயு குழாய்கள் உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றன. உக்ரைனின் வளமான விவசாய நிலங்கள் முழுமையாக மேற்கத்திய கட்டுப்பாட்டில் போவதை ரசியா ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
மேற்கத்திய ஆதரவு சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து உக்ரைனின் தென்கிழக்கில் ரசியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான கிரீமியா சுயாட்சி பகுதி உக்ரைனிலிருந்து பிரிந்து ரசியாவுடன் சேர்வதற்கான கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 96.7% மக்கள் ரசியாவுடன் சேர்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற இந்த முடிவு உக்ரைனின் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அமெரிக்கா எதிர்க்கிறது.
ரசியா கிரீமியாவுக்குள் தன் படைகளை அனுப்பி அதன் மீது தனது ஆதிக்கத்தை ரத்தம் சிந்தாமல் நிறுவியிருக்கிறது. கிரீமியாவில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் கடற்படை கப்பல்களை ரசியப் படைகள் கைப்பற்றி உக்ரைன் வீரர்களை தலைநகர் கீவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். உக்ரைனுடனான தனது எல்லையில் படைகளை தொடர்ந்து குவித்து வருகிறது.
இதைக் கண்டித்து மேற்கத்திய நாடுகள் ரசியாவையும் சேர்த்து ஜி-8 என்ற வல்லரசுகள் கிளப்பிலிருந்து ரசியாவை நீக்கி அதை ஜி-7 ஆக மாற்றியிருக்கிறார்கள். ஜூன் மாதம் சோச்சியில் நடைபெறவிருந்த ஜி-8 உச்சிமாநாட்டை ரத்து செய்து, அதை ஜி-7 மாநாடாக பிரஸ்ஸல்சில் நடத்தப் போவதாக அறிவிக்கிப்பட்டது.
“ரசியா சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி சம்பாதித்துக் கொண்ட பன்னாட்டு நல்லெண்ணத்தை இழந்து விட்டிருக்கிறது. அதே சோச்சியில் ஜி-8 மாநாடு நடத்துவதை ரத்து செய்வதன் மூலம் ரசியாவை தண்டித்திருக்கிறோம்” என்று ‘போர்ப்பிரகடனம்’ செய்திருக்கிறார் ஒபாமா. அமெரிக்கா வகுத்த விதிகளுக்கு அடங்கி இருக்கும் நாடுகள் மட்டும்தான் இந்த வல்லரசுகளின் குழுமத்தில் இருக்க முடியும் என்று இதற்கு பொருள்.
“பல பத்தாண்டுகளாக சோவியத் யூனியனுடன் நடத்திய போட்டியில் நாம் வெற்றி பெற்றோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு நாம் நமது எச்சரிக்கையை தளர்த்திக் கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்று எச்சரித்திருக்கிறார் ஒபாமா. 20-ம் நூற்றாண்டில் உலகளாவிய தனது மேலாதிக்கத்துக்கு தடையாக இருந்த சோசலிச நாடுகளுக்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளில் தனது நலன்களுக்கு எதிரான தேசிய விடுதலை போராட்டங்களை ஒடுக்கி சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்தவும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற சக வல்லரசுகளின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவும் நடத்திய போட்டியைத்தான் ஒபாமா குறிப்பிடுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சில ரசிய அரசு தலைவர்கள் மீது பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதித்திருக்கின்றன.
ரசியா ஏற்கனவே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் உக்ரைன் பகுதியான கிரீமியாவைத் தாண்டி கிழக்கு அல்லது மேற்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்ப முயன்றால் எரிசக்தித் துறை, ஆயுதத் துறை, நிதி சேவைகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் இன்னும் கடுமையான, விரிவான பொருளாதாரத் தடைகளை விரிக்கத் தயங்க மாட்டோம் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் எச்சரித்திருக்கின்றன.
ஜி-8 விளையாட்டிலிருந்து விலக்கி வைப்பது, எச்சரிக்கை விடுப்பது, ஒரு சில நபர்களை தமது நாட்டுக்கு வர அனுமதி மறுக்கும் தடை போன்ற நடவடிக்கைகள் ரசியா மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் இவற்றைத் தாண்டி இதை விட காட்டமான முறையில் ரசியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியாத நிலையில் இப்போது அமெரிக்கா உள்ளது.
முதலாவதாக, முன்னாள் சோவியத் யூனியனின் வாரிசாக ஐ.நா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் தகுதி, அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதங்கள், அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணைகள் போன்ற கூர்மையான பற்கள் ரசியாவிடம் இருப்பதால் ராணுவ ரீதியில் தாக்கி அடிபணிய வைக்க முடியாத நிலை உள்ளது.
இரண்டாவதாக, ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்காவுக்கு பெருமளவு இழப்புகளை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு போர்களைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகளை புதியதொரு ஆக்கிரமிப்பு போருக்கு அனுப்புவதற்கு பெரும்பான்மை அமெரிக்க மக்களிடையே ஆதரவு இல்லை. அமெரிக்காவில் நடந்த கருத்துக் கணிப்பு ஒன்றில் 80% மக்கள் அமெரிக்கா ராணுவ ரீதியாக உக்ரைனில் தலையிடுவதை எதிர்த்துள்ளனர்.
மூன்றாவதாக, ஐரோப்பிய நாடுகள் தமது எரிசக்தி தேவைகளுக்கு ரசியாவின் இயற்கை வாயுவை சார்ந்து இருப்பதால் ரசியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தால் ரசிய எரிவாயு வழங்கல் தடைப்பட்டு நெருக்கடி ஏற்படும் என்று பயப்படுகின்றன.

மேலும் அமெரிக்க ஆதிக்கம் ஐரோப்பாவுக்குள் மேலும் அதிகரித்து தமது செல்வாக்கு குறைவதை ஐரோப்பிய வல்லரசுகள் விரும்பவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் தமது காலனி பகுதிகளை இழந்த முன்னாள் ஏகாதிபத்தியங்களில் இங்கிலாந்து அமெரிக்காவின் அடிவருடியாகி விட, பிரான்ஸ் ஐரோப்பாவுக்குள் அமெரிக்க ஆதிக்கத்தை மட்டுப்படுத்த முயற்சிக்கிறது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்தி வாய்ந்த நாடான ஜெர்மனி தனது செல்வாக்கு மண்டலத்துக்குள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வரம்புக்குள் வைத்திருக்கவே விரும்புகிறது.
எனவே, உக்ரைன் எல்லையில் ரசிய படை குவிப்பை குறித்து கருத்து சொன்ன ஒபாமா “தனது எல்லைக்குள் படைகளை நிறுத்திக் கொள்ள ரசியாவுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டி வரக் கூடாது” என்று எச்சரித்திருக்கிறார்.
ரசியாவும் மேற்கத்திய நாடுகளை ஒரு அளவுக்கு மேல் முறைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. பொருளாதார ரீதியாக மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கும் ரசியா தீவிரமான பொருளாதார தடைகளை எதிர் கொள்ளத் தயாராக இல்லை. அதனுடைய பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு சவால் விடுமளவு இல்லை. கிரீமிய நெருக்கடியைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் $70 பில்லியன் மதிப்பிலான அன்னிய முதலீடு ரசியாவிலிருந்து போயிருக்கிறது என்று ரசியாவின் பொருளாதார துணை அமைச்சர் புலம்பியிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 29-ம் தேதி ஒபாமாவும் புடினும் 1 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றனர். ரசியா படைக்குவியலை நிறுத்த வேண்டும், கிரீமியாவிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும், உக்ரைனில் ரசிய மொழி பேசும் மக்களுக்கு பாதுகாப்பு தருவது இவை குறித்து அவர்கள் விவாதித்தாக செய்தி வெளியிடப்பட்டது.
ராணுவ ரீதியாக ரசியாவை விட்டு வைத்தாலும், தான்தான் உலக தாதா என்று ஒபாமா தெளிவுபடுத்தியிருக்கிறார்.
“ரசியா ஒரு பிராந்திய சக்தி மட்டுமே, எங்கள் உலகளாவிய செல்வாக்கை எதிர்த்து ரசியா போட்டியிட முடியாது” என்றும் “ரசியா பலவீன நிலையிலிருந்து தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வலிமையின் அடிப்படையில் அல்ல.” என்றும் இதை விளக்கியிருக்கிறார் ஒபாமா. ‘உங்க பேட்டைக்குள்ள மட்டும் உன் அதிகாரத்தை வெச்சிக்கோ, உலகம் முழுக்க நான்தான் ரவுடி’ என்கிறார் அவர்.
ஈராக்குக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா “ஈராக் பகுதிகளை இணைக்கவோ, அதன் வளங்களை தனது பயன்பாட்டுக்கு அள்ளவோ செய்யவில்லை” என்று சிரிக்காமல் ரசியாவுக்கு நல்லொழுக்க பாடம் எடுக்கிறார் ஒபாமா.
ராணுவத்தை அனுப்பாமலேயே பிற நாடுகள் மீது எப்படி ஆதிக்கம் செலுத்துவது என்பதையும் ஒபாமா விளக்கியிருக்கிறார். “அமெரிக்காவும் தனது அண்டை நாடுகள் மீது கணிசமான ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், அவர்களுடன் வலிமையான உறவை பராமரிக்க ராணுவ ரீதியாக ஆக்கிரமிப்பு நடத்துவது இல்லை” என்று அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் கொள்கை இராணுவ வலிமையோடும், அதன் தயவில் இராணுவமற்ற முறையிலும் நிலவுவதை விளக்குகிறார் அதிபர் ஒபாமா.
புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் உக்ரைன் இடைக்கால அரசோ ஐ.எம்.எஃப் கடன் உதவியை கோரியிருக்கிறது. அந்த கடனுடன் சேர்ந்து வரும் பொருளாதார நிபந்தனைகளுக்கு நாட்டை உட்படுத்தி உக்ரைன் பொருளாதாரத்தை மேற்கத்திய கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு சமர்ப்பித்திருக்கிறது.
அமெரிக்காவின் அண்டை நாடுகள், ஈராக், உக்ரைன் மட்டுமின்றி இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் அனைத்தின் மீதும் ஐ.எம்.எஃப்/உலக வங்கி மூலம் கொடுப்பது, நிதித்துறையை உலகமயமாக்கி கட்டுப்படுத்துவது, வர்த்தக சந்தையை திறந்து விட்டு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை உறுதி செய்வது என்று தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது அமெரிக்கா. பொருளாதார ஆதிக்க நடவடிக்கைகளுக்கு அடிபணிய மறுக்கும் நாடுகளைப் பணிய வைப்பதற்காக தனது ராணுவத்தின் உலகளாவிய தாக்கும் சக்திகளை வளர்த்துக் கொண்டே போகிறது.
தற்போது உலகின் இயற்கை வளங்கள், உற்பத்தி சாதனங்கள் மற்றும் சந்தைகளை சில நூறு பெரு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. முதலீட்டின் மீதான லாபத்திற்கான போட்டிதான் முடிவுகளை தீர்மானிக்கின்றது. வெவ்வேறு நிறுவனங்கள் சந்தையை தமக்குள் பங்கு போட போட்டியிடுகின்றன. சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களால் விழுங்கப்படுகின்றன.
உதாரணமாக, 1990-களில் கணினி இயங்குதளம் தயாரிக்கும் சந்தையில் நுழைந்த மைக்ரோசாப்ட், இயங்கு தள சந்தையில் ஏகபோகத்தை நிறுவிய பின், இயங்கு தளத்தில் மட்டுமின்றி அலுவலக மென்பொருள் சந்தையிலும் போட்டியாளர்களை ஒழித்துக் கட்டி தனது ஏகபோகத்தை நிறுவிக் கொண்டு அடுத்தடுத்த சந்தைகளில் விரிவாக்க முயற்சித்தது. அதன் முயற்சியை ஐ.பி.எம், ஆப்பிள் முதலான மற்ற பெரு நிறுவனங்கள் சட்ட ரீதியாகவும், பிற தொழில்நுட்ப முறைகளிலும் தடுத்து நிறுத்த முயற்சித்தன.
நவீன முதலாளித்துவத்தின் பெரிதும் மெச்சிக் கொள்ளப்படும் போட்டி என்பது இல்லாமல் ஒழிக்கப்பட்டோ, 2 முதல் 3 பெரு நிறுவனங்கள் மற்ற சிறு நிறுவனங்கள் அனைத்தையும் விழுங்கி சந்தையை தமக்குள் பங்கிட்டுக் கொள்வதாகவோ முடிகிறது. பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முதலான சமூக வலைத்தள சேவைகள் உட்பட 46 நிறுவனங்களை வாங்கி விரிவாகிக் கொண்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கார்ப்பரேட்டுகள் வளர வளர சொந்த நாட்டில் மட்டுமல்லாமல் இயற்கை வளங்கள், மலிவான உழைப்பு, மற்றும் சந்தைக்காக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டியிருக்கிறது.
இந்தப் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள், தமது உலகளாவிய விரிவாக்கத்துக்கு துணையாக தத்தமது நாட்டு அரசுகளை பயன்படுத்திக் கொள்கின்றன. ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் தமது சந்தை நலன்களை விரிவாக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதற்கான போட்டியில் இறங்குகிறார்கள்.
100 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டான், 200 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டானுடன் அடிமைகளை நியாயமாக பங்கிடக் கோரி நடத்துவதுதான் உலகப் போர் என்று முதல் உலகப் போர் குறித்து லெனின் வர்ணித்தார்.
இன்றைய ஒற்றைத் துருவ வல்லரசான அமெரிக்காவின் நிழலில் ஓய்ந்திருந்தாலும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்கத்திய வல்லரசுகள் அமெரிக்காவோடு முரண்படாமல் இல்லை. கிழக்கில் ஜப்பான் நலிந்திருந்தாலும் போட்டியில் இருந்து விலகி விடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் புதிய போட்டியாளராக உருவெடுத்திருக்கும் ரசியா ஏற்கனவே ஆயுத வலிமையில் அமெரிக்காவோடு போட்டி போடுவதால் தற்போது அந்த முரண்பாடு விரியத் துவங்கியிருக்கிறது. இந்த வல்லரசு நாடுகளின் போட்டியில் சிக்கிக் கொண்டு உலக நாடுகளும், மக்களும் சுரண்டப்படுவதோடு, போர் அழிவுகளையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
மேல் நிலை வல்லரசுகளுக்கிடையே முரண்பாடு வளர்வதையே உக்ரைன் பிரச்சினை தெளிவாக்கியிருக்கிறது. இந்த முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் பாட்டாளி வர்க்கம் பலமாக இல்லை என்பதோடு சோவியத் முகாம் என்ற ஒன்றும் இப்போது இல்லை. பாட்டாளி வர்க்கம் செல்வாக்கு அடையும் போதுதான் அமெரிக்கா மற்றும் இதர மேல் நிலை வல்லரசுகளின் கொட்டம் ஒடுக்கப்படும்.
– செழியன்
மேலும் படிக்க
- Ukraine crisis: Putin and Obama discuss diplomatic plan
- Ukraine prepares for war
- Ukriane crisis: Russia is a regional power – but US is most powerful nation in the world, Obama warns Putin
- Obama Renewing U.S. Commitment to NATO Alliance
- Answered: 7 questions you have about the situation in Ukraine
- Russia seizes Ukraine’s last Crimean ship
- Obama: U.S. and Europe united over Ukraine crisis
- America needs a new war or capitalism dies
- Is war inherent to capitalism?
- http://www.thehindu.com/opinion/lead/transitions-of-the-angry-middle-class/article5845213.ece
- Crimea’s growth a national priority: Dmitry Medvedev
- End of the USSR: visualising how the former Soviet countries are doing, 20 years on
- A Marxist Perspective of the Demise of the Soviet Union