Thursday, April 17, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேர்தல் திருவிழாவின் ரெக்காடு டான்ஸ் பார்ட்டி யார் ?

தேர்தல் திருவிழாவின் ரெக்காடு டான்ஸ் பார்ட்டி யார் ?

-

ரசியல் ரீதியாகச் சொன்னால், எல்லா ‘கமிசன்’களையும் ஒழுங்குபடுத்தும் ஒரு அரசு உறுப்புதான் தேர்தல் கமிசன். இதில் எல்லை தாண்டி விளையாடாமல் கட்சிகள் வரவு செலவு பண்ணி, மக்கள் காறித்துப்பி எத்தி எறிந்த இந்த போலி ஜனநாயகத்தின் மீது புதுப்புது கவர்ச்சிக் காட்டி சுண்டி இழுக்கும் திருவிழா டான்ஸ் பார்ட்டிகள்தான் தேர்தல் கமிஷன் எனும் இந்த அதிகாரவர்க்கக் கும்பல்.

வாகன சோதனைலஞ்ச, ஊழலற்ற ஆட்சி – நிர்வாகத்தை நடத்த எந்த உத்திரவாதமும் இல்லாத இந்த ஜனநாயகத்தில், தேர்தலையாவது நாங்கள் சுத்தபத்தமான முறையில் நடத்திக் காட்டுகிறோம் என்று வாகனத் தணிக்கை கைகளில் அமுக்கியது போக ஊடகங்கள் வாயிலாக தினம், தினம் தனது திரில்லர் மசாலா படங்களை ஓட்டிக் காட்டுகிறது தேர்தல் கமிசன். வழக்கம் போல ஊர் சொத்தை தனதாக கைவைத்து இரண்டு எஸ்.ஐ.க்கள் மாட்டிக் கொண்டது தனி காமடி ட்ராக்!

ஏற்கனவே உள்ள அதிகாரவர்க்க கட்டமைப்பு மூலம் ஊழல் பெருச்சாளி, தேர்தல் செலவாளி யார்? யார்? எனத் தெரியாதது போலவும், சுரண்டிக் கொள்ளையடிப்பவனை வீட்டில் வெண்சாமரம் வீசி விட்டு, ரோட்டில் மடக்குவது போல பறக்கும் படை, அமுக்கும் படை என்று இந்த கறக்கும் படையில் கடமையாற்றும் புலிகள் யார்? அன்றாடம் மக்களிடம் ரூம் போட்டு மிரட்டி சம்பாதிக்கும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், தாசில்தார்கள், வி.ஏ.ஓ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள், என்ற மாமூலான பேர்வழிகள் தான் இந்த திடீர் தேர்தல்உத்தமர்கள்.

சமூக வாழ்க்கையில் அன்றாடம் பல ஊழல் காண்ட்டிராக்டர்கள், போர்ஜரி முதலாளிகள் போன்றவர்களிடம் கல்லாகட்டும் இந்த யோக்கியர்கள்தான் தேர்தல் பணப்பட்டுவாடாவை மடக்குகிறேன் பேர்வழி என்று மாட்டு வியாபாரியிலிருந்து, மளிகை சாமான் வியாபாரி வரை முறையாக ஆவணத்தை சோதிக்கிறார்களாம். வரி ஏய்ப்பு செய்து விட்டு, ஊரறிய ரோட்டு மேலேயே கடையை போட்டுக்கொண்டு உள்ளூரில் எல்லா ஓட்டுக் கட்சிகளையும் சேர்த்து அசெம்பிள் செய்து திமிராக உட்கார்ந்திருக்கும் நோக்கியா முதலாளியிடம் ஒரு சல்லிக்காசைக் கூட பிடுங்க முடியாத அதிகாரவர்க்கம் மாட்டு வியாபாரியிடம் போய் மடியைப் பார்க்கிறது. இருநூறு வாய்தா வேகத்தோடு மேலே பறக்கும் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ளும் இந்த கண்ணியவான்கள் தான் கால் டாக்சிகளை மடக்கி கடமையாற்றுகின்றனர்.

தேர்தல் பணம்நேர்மையாகவும், முறையாகவும் தேர்தலை நடத்தி மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காக கடமையாற்றுவதாக சீன்போடும் தேர்தல் கமிசனிடமிருந்தே இருக்கிற போலி ஜனநாயகத்தையும் காப்பாற்றிக் கொள்ள கட்சிகளே முனகுகின்றன. தேர்தல் நடத்தை என்ற பெயரில் பெரியார், அம்பேத்கர் சிலைகளையே கோணி போட்டு மூடுவது, பிரியாணி கடைகளை கிளறுவது, கல்யாண மண்டபங்களை நோட்டம் பார்ப்பது, பத்து மணிக்கு மேல கூட்டம் போட்டு பேசக் கூடாது, அதை பேசக் கூடாது, இதை பேசக்கூடாது என்று அரசியலில் தலையிடுவது ஒருபுறம்.

மறுபுறம் ஆளும் வர்க்க அரசியல் திட்டத்தோடு இயங்கிக்கொண்டு, ஏதோ அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்புபோல நம்ப வைக்க முயற்சி செய்கிறது தேர்தல் கமிசன். தேர்தலுக்காக மாட்டுச் சந்தையை மிரட்டும் இந்த ஆளும் வர்க்க கோமாரி கொசுக்கள் பங்கு சந்தை பண பரிவர்த்தனையை தடுக்கப் பறக்குமா? பாயுமா? தேர்தல் நடத்தைக்காக எத்தனை பிரியாணி பொட்டலம் என்று கணக்குப் பார்க்கும் இந்த கறார் அதிகாரிகள், தேர்தல் நேரத்தில் இத்தனை கோக், பெப்சிதான் முதலாளி விற்க வேண்டும், இத்தனை கார்தான் முதலாளி விற்க வேண்டும் இத்தனை செல்போன் தான் விற்கவேண்டும், என்று கட்டுப்பாடு விதிக்கத் தயாரா?

ஏற்கனவே இருக்கிற முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு ஒரு போலி ஜனநாயக அரசை தேர்ந்தெடுப்பதுதான் இவர்களின் மொத்த திட்டமே.  இதில் இடையில் போடும் சீன்கள்தான் இந்த கெடுபிடி காட்சிகள். கேவலம், தேர்தல் வரை இவர்களின் அறநெறிப்படி, மக்களை ‘நிதானமாக’ சிந்திக்க விட டாஸ்மாக் கடையை மூடக் கூட தயாராயில்லாத இந்த நிரந்தரக் கொள்ளைக் கும்பல்தான், தற்காலிக திருடன், போலீசு விளையாட்டு காட்டி ஜனநாயகம் போராடிக்காமல் கிலு கிலுப்பு ஊட்டுகிறது.

vehicle-check-2தேர்தல்னாலே பணம்புரளும், கட்சிகள்னாலே ஊழல் என்று கருத்து மக்களிடம் முழுதாக அம்பலமாகிப் போனதால், இதற்குக் காரணமான இந்த ஜனநாயக கட்டமைப்பையே மக்கள் தெரிந்து, புரிந்து தூக்கி எறியாதவாறு, ‘நான் அவனில்லை’, என்று நம்மிடம் ‘நல்ல தேர்தலை நடத்திக்காட்டும்’ இந்த அதிகாரவர்க்கம்தான் நாட்டில் உள்ள கட்சிகளின் மொத்த ஊழலுக்குமே உறை கிணறு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தேர்தல் ஜனநாயகத்தை கட்டிக் காப்பதற்கு இன்று தெருவுக்கு வந்திருக்கும் இந்த அதிகார வர்க்க படையின் உண்மையான ஜனநாயக யோக்கியதை என்ன?

மற்ற நேரங்களில் இவர்களின் அலுவலகம் தேடிப்போய் மக்கள் ஒரு குறைகளைச் சொல்லப்போனால் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வர்க்கம் மக்களை மதித்ததுண்டா? ஜனநாயகப்படி மக்களை கேள்வி கேட்க அனுமதித்ததுண்டா? மக்களுக்கு எட்டாத உயரத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு மனுவை வாங்கக்கூட இழுத்தடிக்கும் இந்த அதிகாரவர்க்க கும்பல் தான், ரோட்டில் இறங்கி மக்களுக்கு ஜனநாயகத்தை சலித்து, தூசு இல்லாமல் தரப்போகிறதாம், யாராலும் நம்ப முடியுமா?

நம்ம ஊர் போலீஸ் ஸ்டேசன் தான் என்று, எஸ். ஐ.யை இயல்பாக மக்கள் சந்தித்து ஒரு புகாரைக் கொடுக்க முடிகிறதா? ஊரறிய கல்விக் கொள்ளை அடிக்கும் ஒரு முதலாளி மேல் மக்கள் புகார் கொடுத்தால், நடவடிக்கை புகார் கொடுத்தவர்கள் மேலே அல்லவா பாய்கிறது!

ஊரே குப்பை, சாக்கடை தெருவில் ஓடுது, பொது சுகாதாரமே சீரழிகிறது, போய் குறைகளைச் சொல்ல போனால், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளைப் பார்க்க முடிகிறதா? எப்போது போனாலும் மக்களை சந்திக்க நேரமில்லாமல் எந்த குப்பையில் கிடக்கிறானோ அந்த அதிகாரி! ஜனநாயகமாக ஒரு மனுவைக் கொடுத்தால் அதையும் குப்பையாக்கும் இந்த அதிகாரவர்க்கம், மக்களை மதிக்காத இந்த திருட்டுக் கும்பல், மக்களுக்கு நேர்மையான ஜனநாயகத்தை வழங்கத்தான் தேர்தல் பணியாற்றுகிறது என்பதை விஜயகாந்தைத் தவிர வேறு எந்த சுயநினைவில்லாதவனும் கூட நம்பத் தயாராயில்லை!

வாகன சோதனைஇந்த நேரத்தில் நேர்மை, நடத்தை, ஜனநாயகம் என்று இவ்வளவு பரபரப்பூட்டும் இந்த அதிகாரிகள்  மற்ற நேரத்தில் எங்கே போய் இருந்தார்கள்? இப்போதும் கிளைமாக்ஸ் காட்சிகள் முடிந்தபின்பு திரும்பிப்போய் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு என்ன கிழிக்கப் போகிறார்கள்? ஏற்கனவே இவர்கள் கையில் ஜனநாயகத்தை கொடுத்து கொள்ளைக்காரனை உள்ளே தள்ளு என்று சொன்னால், அவனோடு சேர்ந்து கொண்டு ஐ.பி.எல் சூதாட்டம் வரை பங்கு போட்டு திண்ணும் அதிகாரிகள் தான் இந்த போலீசுத் துறை! உனக்குள்ள அதிகாரத்தை வைத்து ஊர் சொத்தை காப்பாற்று! ஆறுகள், ஆற்றுமணலை காப்பாற்று என்று சொன்னால் அதற்கு வக்கில்லாமல் மணல், ரியல் எஸ்டேட், கிரானைட் மாஃப்பியாக்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஊரை அடித்து உலையில் போடுபவர்கள் தான் இந்த தாசில்தார், வி.ஏ.ஓ, கலெக்டர்கள்…

இப்படி ஒவ்வொரு துறையிலும் நாட்டையும் மக்களையும் சுரண்டி முதலாளிகளுக்கு எடுப்பு வேலை பார்ப்பதோடு மட்டுமல்ல, எதிர்க்கும் மக்களை தடி கொண்டு தாக்கும் இந்த அதிகார வர்க்க கும்பல்தான் குடியரசை குண்டுமணி குறையாமல் நம் கைக்கு வழங்கப் போகிற மகான்களாம்! இருக்கிற ஜனநாயகத்தை வைத்து பொறுக்கித் தின்பதையே தமது பிழைப்பாக கொண்டுள்ள இந்த ஒட்டுண்ணி வர்க்கம்தான் தேர்தலை உத்தமமாக நடத்தும் காவலர்கள் என்றால் கலெக்டர் வீட்டு நாய் கூட காலைத் தூக்கி சிரிக்கும்!

இருப்பினும், கலெக்டர், தாசில்தார், போலீசு என்று பெரிய அதிகார வர்க்க படையே தேர்தல் களத்தில் முன் நின்று வேலை பார்ப்பது நமக்கு ஜனநாயகத்தை வழங்கும் கடமைக்காக அல்ல, ”இவங்கள இப்படியே விட்டா அழுகி நாறும் ஜனநாயகத்தோட, அதுல புழுத்து நாறும் நம்மளையும் சேர்த்து புதைச்சுடுவாங்க! அதுக்கு முன்னால நாம இவங்கள ஓட்டுப் பெட்டியில புதைச்சுடுவோம்!”  என்ற முன் ஜாக்கிரதை தான். இது புரியாமல் இந்த அதிகார வர்க்கத்திடம் திரும்ப திரும்ப நம்மை மாட்ட வைக்கும் போலி ஜனநாயகத் தேர்தலை எச்சரிக்கையாக புறக்கணிப்பதும், மக்களுக்கு எல்லா நிலைகளிலும் அதிகாரமுள்ள ஒரு மாற்று புதிய ஜனநாயகத்தை பற்றி சிந்திப்பதும்தான் இந்த தேர்தலில் நமக்கான நல்ல நடத்தை விதியாகும்!

–          துரை.சண்முகம்