பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திலுள்ள கே.வி.ஆர். சாயத் தொழிற்சாலையில் மீத்தேன் வாயு தாக்கி ஏழு தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் போபால் விஷவாயு படுகொலைக்கும் இடையே அநேக ஒற்றுமைகள் உள்ளன; விழுந்த பிணங்களின் எண்ணிக்கையைத் தவிர. இவ்விரண்டு படுகொலைகளுமே முதலாளியின் இலாபவெறி மற்றும் அலட்சியம் காரணமாகவே நடந்துள்ளன. போபால் படுகொலை வழக்கு போலவே பெருந்துறை வழக்கிலும் கொலைக்குற்றமாகாத, ஆனால், மரணத்தை விளைவிக்கக்கூடிய பிரிவின் கீழ்தான் கே.வி.ஆர் ஆலை முதலாளி மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. யூனியன் கார்பைடு ஆலை முதலாளி ஆண்டர்சன் கைது செய்யப்படாமல் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். கே.வி.ஆர். ஆலை முதலாளி தலைமறைவாகிவிட்டதால், அவரைக் கைது செய முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறது, தமிழக போலீசு.

இரசாயனக் கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது; அப்படிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், பயிற்சி பெற்ற தொழிலாளிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; தக்க பாதுகாப்பு உபகரணங்கள் தரப்பட்டிருக்க வேண்டும்; முதலுதவி அளிப்பதற்கு மருத்துவர் இருக்க வேண்டும் என இவை போன்ற பல வேண்டும்”களைக் கொண்ட விதிமுறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால் இந்த விதிமுறைகளை மீறியது யார்?
“விபத்து நடந்த அன்று பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல், ஆலை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் பணியாளர்கள் கழிவுத் தொட்டியில் இறங்கியதே இறப்புக்குக் காரணம்” எனத் தமிழக அதிகாரிகள் விளக்கமளித்திருப்பதோடு, “விபத்து நடந்த ஆலையில் பெரும்பாலான பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதாக” நற்சான்றிதழும் வழங்கியுள்ளனர். “தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு கழிவுத் தொட்டிக்குள் குதித்தார்கள்” என்று நாக்கூசாமல் சொல்வதற்குக்கூடத் தயங்காதவர்கள்தான் அதிகார வர்க்கத்தினர் என்பதால், அவர்களின் இந்த அயோக்கியத்தனமான விளக்கம் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
இதே ஆலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்து போனதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். இந்த சிப்காட் வளாகத்தில் மட்டும் இதுவரை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முதலாளிகளின் இலாபவெறிக்குப் பலியாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறது, நக்கீரன் இதழ். இந்தப் படுகொலைகளெல்லாம் சிப்காட் வளாகத்தைத் தாண்டாதபடி அமுக்கப்பட்டு விட்டன. வெளியே தெரிந்த இந்த ஏழு தொழிலாளர்களின் படுகொலைக்கு அற்ப நிவாரணம், மொன்னையான வழக்கு, ஆலைக்கு சீல் என வழக்கமான பாணியில் மங்களம் பாடிவிட்டது, ஜெயா அரசு.
இப்படுகொலையைக் கண்டித்து பெருந்துறையில் நடந்த சாலை மறியலைத் தாண்டி, இச்சம்பவம் வேறெந்த சலனத்தையும் தமிழகத் தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்படுத்தவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதி எனப் பீற்றிக் கொள்ளும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளோ இந்தப் படுகொலையையும் நெய்வேலி சம்பவத்தையும் கண்டித்துத் தமிழகம் தழுவிய அளவில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தாத அதேசமயம், ஓட்டுப் பொறுக்கும் வேலைகளில் மும்மரமாகச் சுற்றி வருகின்றன. தாமும் பிழைப்புவாதத்தில் மூழ்கிப் போயிருப்பதோடு, தமது சங்கங்களில் அணிதிரண்டுள்ள தொழிலாளர்களையும் வர்க்க உணர்வின்றி மழுங்கடித்து வைத்துள்ளனர், இப்போலிகள். தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமின்றி உயிரையும் பறித்துவரும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வீழ்த்த வேண்டுமானால், தொழிலாளி வர்க்கம் தன்னிடமுள்ள இந்த மரத்துப் போன உணர்வுகளைத் தூக்கியெறிவதுதான் முதல் தேவையாகும்.

___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________