வா தல ! புறக்கணி தேர்தல!
நாம ரூட் அடிச்சா
தப்பாம் தல!
இவங்க ஓட்டடிக்கத்தான் –
தேர்தலே!

செட்டு சேர்ந்து
வெட்டு குத்து
நம்மில் சிலர் தப்புதான்,
செட்டு செட்டா
ரவுடி வர்றான்
கேட்டா நாடாளுமன்ற தேர்தலாம்!
கம்பிக்கு பின்னால
இருக்குறவனெல்லாம்
எம்.பி. எம்பி குதிக்குறான்,
தம்பி எனக்கொரு ஓட்டுண்ணு
நம்மையும்
ரவுடி லிஸ்ட்டுல சேர்க்குறான்.
புட் போர்டு
நீயும் நானும் அடிச்சா தப்பு,
அதையே
அம்மா வண்டியில அடிச்சா
பாதுகாப்பு!
படிக்கிற வயசுல
அரசியல் கூடாதுன்னு
நம்பள,
அமைப்பா சேரவிடாமல்
தடுக்குறான்,
இளைஞர்கள் ஓட்டு
எங்க கட்சிக்கேன்னு
எல்லா மொக்கையும்
பேஃஸ்புக்குல சொடுக்குறான்!

லட்சம் லட்சமா
பணத்தை வாங்கிட்டுத்தான்
கல்லூரி சீட்டே
கொடுக்குறான்,
இவன் லட்சியமே
இளைஞர்களை வாழ வைப்பதுன்னு
மச்சான்!
என்னமா ஊத்துறான்!
கல்லூரி விடுதிக்கு
ஒரு கக்கூசு கேட்டா
‘மாமாவ’ விட்டு அடிக்கிறான்,
நாம ஓட்டு போட்டா
நாட்டையே வல்லரசாக்குவேன்னு
மைக்கு வழியா
கழியுறான்!
பஸ் பாஸ் இல்லை
கல்ச்சுரல்ஸ் இல்லை
பட்டியில் ஆடாய்
அடைக்கிறான்,
இதுக்கு எந்தக் கட்சியும்
எட்டிப் பார்க்கல
இப்ப ஓட்டுக்கு வந்து
அரிக்கிறான்!
கல்வி, வேலைவாய்ப்பில்
இடஒதுக்கீட்டை எதிர்க்கிறான்,
இந்து, இந்துன்னு
ஒண்ணாயிருக்கும் மாணவர்கிட்ட
பார்ப்பன வெறியை பரப்புறான்!
நம்ம இளவரசன் – திவ்யா
காதலிச்சா
சாதியைச் சொல்லி எரிக்கிறான்!
இந்த கேடிங்க எல்லாம்
ஒண்ணா சேர்ந்து
மோடி வளர்ச்சியின் நாயகன்னு
மூலைக்கு மூலை திரியுறான்,
மச்சான்! உஷாரு
கூட்டத்தில் பாக்கெட் அடிக்கிறான்!

கேம்பஸ் இண்டர்வியூன்னு
அடிமாட்டு விலைக்கு
மாணவர்களை
மாட்டுச்சந்தையா மடக்குறான்,
ஃபோர்டும், ஹீண்டாயும்
போட்டு பிழியுறான்,
உரிமை கேட்டு
சங்கம் வைத்தால்
உள்ளூர் கட்சிக்கும்பலும்
சேர்ந்து தடுக்குறான்,
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புன்னு
நம்ம தோலை உரிக்கவே
தேர்தல் நாளை பாக்குறான்!
இந்தியாவை முன்னேற்றுவோம்னு
இளைஞர்கள்கிட்ட,
ஓட்டை கேக்குறான்,
எவன் வந்தாலும்
அமெரிக்காவுக்கு வேலை பார்க்க
ஐ.டி. அவுட் சோர்சிங்னு
நம்பள ராக்கோழியா அறுக்குறான்,
படிக்காதவன் பெட்டிக்கடை வச்சா
அதிலும்
பன்னாட்டு கம்பெனியை விட்டு
கருக்குறான்!
ஓட்டு வாங்குனவன்
உலகப் பணக்காரன் லிஸ்டில்,
ஓட்டு போட்டவன்
உள்ளூர் கடன்காரன் லிஸ்டில்,
இந்த ஓட்ட தூக்கி
போடு மச்சான் வேஸ்ட்டில்!

தல!
நாம பழைய கடனை
அடைக்க முடியாமல்
பரிதவிக்கிறோம் ரோட்டில்,
நம்பள
புதிய தலைமுறை வாக்காளரா
புடிச்சுப்போட
பொறி வைக்கிறான் ஓட்டில்,
என்னதான் நடக்குது நாட்டில்?
விவசாயமின்றி விரட்டப்படும் இளைஞன்
திருப்பூர் எக்ஸ்போர்ட்டில் கிழியுறான்,
சிறுதொழில், நெசவின்றி
விரட்டப்படும் இளைஞன்
போய் கல் குவாரியில் உடைகிறான்,
வைகை மண்ணை இழந்த இளைஞன்
போய் ஆந்திரா முறுக்கில் நெளிகிறான்,
வாலிபத்தை இழந்த இளைஞன்
போய் மலேசியாவில் ஒழிகிறான்,
வடக்கிருந்து வரும்
இளைஞனின் ரத்தம்
மேம்பாலம், கட்டிட பூச்சில்
உறையுது!
நாடு முழுக்க நாடோடியாகி
இளைஞனின் கண்களில்
இந்தியா இருண்டு மறையுது!
பீட்சா, பர்கர்
எவனோ திங்க
நம்ம தலைங்க உயிர்
பாஸ்ட்புட் பைக்கில் பறக்குது,
கூரியர், மார்க்கெட்டிங்,
பெட்ரோல் பங்க், கூலிக்கு லோடு தூக்கி
நம்ம
‘கேரியரே’ நிச்சயமில்லாமல் தவிக்குது!
பிடிச்ச லவ்வரு
பிடிச்ச வேலை
பிடிச்ச சம்பளம்
உரிய மரியாதை
இப்படி எதுவுமே கிடைக்காமல்
வாழ்க்கையே தெருவில் கிடக்குது!
ஒரு வாக்கை மட்டும்
போடுவது கடமையின்னு
தேர்தல் வந்து மடக்குது!

போட்ட ஓட்டுக்கு
நம்ப அப்பன் காலி,
இனியும் போட்டோம்னா
நம்ப வம்சமே காலி!
ஓட்டுப் போட்டாலே
ஒட்டிக் கொள்ளும்
எய்ட்ஸ் ஜனநாயகத்துக்கு
நாமளா ஆளு?
என்ன இருந்தாலும்
அந்தப் பொத்தானை
ஒரே ஒரு முறை
அழுத்திப் பார்க்க ஆசையாயிருந்தால்,
வா தல!
புறக்கணி தேர்தல!
அப்புறம்
மொத்த பொத்தானும் உன் காலுல!
– துரை.சண்முகம்