Tuesday, April 22, 2025
முகப்புசெய்திமோடி எதிர்ப்பு சுவரொட்டி - தோழர்கள் கைது !

மோடி எதிர்ப்பு சுவரொட்டி – தோழர்கள் கைது !

-

மணலி பகுதியில் போஸ்டர் ஒட்டினால், போஸ்டரை கிழித்து, ஒட்டியவர்களை கைது செய்யும் ‘கிழிந்த ஜனநாயகம்’

மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பை கட்டியெழுப்புவோம்!
கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!”

என்ற முழக்கத்தை தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் அதன் தோழமை அமைப்புகளும் முன்னெடுத்து செல்கின்றனர்.

இந்த தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை ஒட்டி மணலி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த போது, அதை தடுத்த போலீசு, பல்வேறு ஓட்டுக்கட்சிகள் பிரச்சனை செய்வதாகவும், அனுமதி பெற்றுதான் பிரச்சாரம் நடத்த வேண்டுமென்றும் கூறினர். ஓட்டுக்கட்சிகளின் பம்மாத்துக்கெல்லாம் அஞ்சும் அமைப்பு நாம் இல்லை என்பதை அறிந்த போலீசு, நிழல் போல் நம்மை கண்காணித்து வந்தது.

18.04.14 அன்று மேற்கண்ட முழக்கத்தைக் கொண்ட சுவரொட்டியை மணலி பகுதியில் ஒட்டியதை அடுத்து, பகுதியில் இரண்டு தோழர்களை, பிரிவு 3-ன் கீழ் தமிழ்நாடு பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுதல், மற்றும் 153(b)-ன் கீழ் கைது செய்து இரவோடு இரவாக புழல் சிறையில் அடைத்துள்ளது.

மறுநாள் காலையில் ஆய்வாளரை சென்று சந்தித்த போது இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் மனோகரன் என்பவரும், ஆர்.ஐ.யும் புகார் அளித்ததன் பேரில் கைது செய்ய நேர்ந்தது என்றும் கூறினார்.

இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் மனோகரன் ஆர்.எஸ்.எஸ் கொள்கைப் பிடிப்புடன் நரேந்திர மோடியை பிரதமராக்க செயல்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், போஸ்டர் ஒட்டுவதை கிழித்தும், ஒட்டியவர்களை கைது செய்தும், கொலைகார மோடிக்கெதிரான கருத்துக்களை முடக்கிவிட முடியும் என்று கருதுவதுதான் நகைப்புக்குரிய விஷயம்.

மதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலைக் காட்டிலும் மிகத் தீவிரமாக தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டியது தவறு என்றும் அதற்காக புகார் கொடுத்திருக்கும் ஆர்.ஐன் செயல்பாடுதான் கவனிக்கப்பட வேண்டியது. ஒட்டுப் போடு, ஓட்டுப் போடு என்று ஊர் ஊருக்கு சென்று ஊளையிடுவதும், “ஓட்டுப் போடுவது ஜனநாயக் கடமை” என்றும், “ஓட்டுப் போடாவிட்டால் செத்த பிணத்துக்கு சமம்” என்றும் பேனர் வைத்து “ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தவித்து கொண்டிருப்பது ஏன்?

ஏனென்றால் ஓட்டு போடுவதின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நம் பிரச்சனை தீரப் போவதில்லை என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இப்படி மக்கள் போலி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்திருக்கும் வேளையில்தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மக்களிடம் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை கொண்டு செல்கிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் ஆளும் வர்க்கமும், மதவெறியர்களும் கைகோர்த்துக் கொண்டு வழக்குகளை போட்டு பயமுறுத்தி முடக்கி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர்.

மிரட்டல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் அஞ்சியவர்களா நக்சல்பாரிகள்?

தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை தொடரவும், பெரியார் பிறந்த மண்ணில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மதவெறியை வேரறுக்கவும், தோழர்கள் அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம் – 9445389536