Saturday, April 19, 2025
முகப்புஉலகம்அமெரிக்காவெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !

வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !

-

மெரிக்க மேலாதிக்க எதிர்ப்புப் போராளியும், வெனிசுலாவின் முன்னாள் அதிபருமான ஹியுகோ சாவேஸ் மறைந்து ஓராண்டாகிவிட்ட சூழலில் இன்று வெனிசுலா அமெரிக்காவின் சதிகளால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மாணவர் போராட்டம் என்ற பெயரில் பயிற்றுவிக்கப்பட்ட ஆயுதக் குழுக்களைக் கொண்டு மிகப்பெரிய கலவரத்தை அமெரிக்கா அங்கே கட்டவிழ்த்துள்ளது. தலைநகரான காரகாஸும், மெரிடா, டத்சிரா உள்ளிட்ட எல்லைப்புற நகரங்களும் கலவரக்காரர்களின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

எதிர்ப்புரட்சி கலகக் கும்பல்
அமெரிக்கா பின்னிருந்து இயக்கும் வெனிசுலாவின் மேட்டுக்குடி மாணவர்களைக் கொண்ட எதிர்ப்புரட்சி கலகக் கும்பலின் தாக்குதல்.

வெனிசுலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்க அரசு சதி செய்வது இது முதல் முறையல்ல. சாவேஸ் உயிருடன் இருந்தபோது அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும், அவரைக் கொலை செய்வதற்கும் அமெரிக்கா பலமுறை முயன்றுள்ளது. 2002-ம் ஆண்டில் சாவேஸுக்கெதிராக ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி அவரைக் கைது செய்யும் அளவிற்குச் சென்றது. ஆனால், சாவேஸுக்கு ஆதரவாக இலட்சக் கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராடியதன் விளைவாக இரண்டு நாட்களுக்குள் இராணுவம் சாவேஸை விடுவித்துப் பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டிலும் 2007-ம் ஆண்டிலும் மாணவர் போராட்டங்கள் என்ற பெயரில் சாவேஸுக்கெதிரான சதிகளை அமெரிக்கா அரங்கேற்றியது. ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் சதிகளை, மக்களின் ஆதரவுடன் சாவேஸ் முறியடித்தார்.

தற்போது சாவேஸ் இல்லாத வெனிசுலாவில் அமெரிக்காவின் சதிகள் புத்துயிர் பெற்றுள்ளன. வெனிசுலா மீது அமெரிக்கா இந்த அளவிற்குத் தீராப்பகை கொள்ளக் காரணங்கள் பல உள்ளன. எக்ஸான் மொபில் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்த எண்ணெ வயல்களை வெனிசுலா நாட்டுடைமையாக்கியுள்ளது; பொதுத்துறை நிறுவனங்கள் முதற்கொண்டு இயற்கை வளங்கள் வரை அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குத் திறந்துவிடக் கோரும் உலகவங்கி மற்றும் ஐ.எம்.எப். போன்ற ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களிலிருந்து வெனிசுலா விலகிக் கொண்டதுடன், மின்சாரம், தொலைதொடர்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தியை அரசுடைமையாக்கியுள்ளது; அமெரிக்காவின் வர்த்தக வலையத்தில் சிக்கித் தவித்த தென் அமெரிக்க நாடுகளுக்கென்று தனியான வர்த்தக வலையத்தையும் வெனிசுலா உருவாக்கியுள்ளது; அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானுடன் இணைந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மேலாதிக்கத்துக்குச் சவால் விடும் இந்த நடவடிக்கைகள்தான், வெனிசுலாவில் எப்படியேனும் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றுவதற்கு அமெரிக்கா வெறிபிடித்து அலைவதற்குக் காரணம்.

நோக்கோலஸ் மாதுரோமேற்கூறிய மாற்றங்கள் அனைத்தும் சாவேஸ் தலைமையில் சாதிக்கப்பட்டவை. சாவேஸின் மரணத்துக்குப் பின் அதிபர் பதவியேற்றிருக்கும் நிக்கோலஸ் மாதுரோ, சாவேஸின் வழியில் அமெரிக்க எதிர்ப்பில் உறுதியாக நிற்பதால், இவரது ஆட்சியையும் கவிழ்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா தீவிரமாக்கியிருக்கிறது. 2002-ம் ஆண்டில் சாவேஸுக்கெதிராக இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டுத் தோற்கடிக்கப்பட்ட, சி.ஐ.ஏ. கைக்கூலி லோபஸ் மென்டோசாவைத்தான் அமெரிக்கா மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறது. சி.ஐ.ஏ. வினால் இயக்கப்படும் ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை (National Endowment for Democracy ) என்ற அமைப்பும், யு.எஸ்.எய்டு என்ற அமைப்பும்தான் தற்போதைய எதிர்ப்புரட்சிக் கலகங்களை நடத்துவதற்கு நிதியளிக்கின்றன. 2002-ம் ஆண்டு முதல் சாவேஸின் ஆட்சிக்காலம் முழுவதும், வெனிசுலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மூலம் கள்ளத்தனமாக விநியோகிக்கப்பட்ட அமெரிக்க டாலரைத் தின்று வளர்ந்த இந்த குடிமைச் சமூக அமைப்புகள் (Civil Society Organizations) சமூகத்தில் குறிப்பிட்ட அளவு ஊடுருவியுள்ளன. சாவேஸ் அதிபரான பிறகு நடந்த 19 தேர்தல்களில் 18-ல் படுதோல்வியடைந்த போதிலும், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோற்ற போதிலும் என்.ஜி.ஓ. க்கள் என்ற இந்த நச்சுக்கிருமிகள் அமெரிக்காவின் தயவில் உயிர் பிழைத்திருந்தன. மக்கள் செல்வாக்குப் பெற்ற சாவேஸ் என்ற தலைவர் மறைந்தவுடன், இந்த வலைப்பின்னல் மென்டோசாவின் தலைமையில் கலவரத்தைத் தொடங்கியிருக்கின்றது.

மேட்டுக்குடி இளைஞர்களைக் கொண்ட இந்தக் கலவரக் கும்பல், விலைவாசி உயர்வு, பெருகிவரும் குற்றச் செயல்கள், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு, அதற்குத் தீர்வாக தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தக் கோருகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களும்தான் வெனிசுலாவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பிரச்சாரம் செய்கிறது.

லோபஸ் மென்டோசா
வெனிசுலாவின் எதிர்த்தரப்பு தலைவரும் சி.ஐ.ஏ. கைக்கூலியுமான லோபஸ் மென்டோசா.

போராட்டக்காரர்கள் அமைதிவழியில் போராடுவதாக அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஆனால் இந்தக் கும்பல், அரசின் அடக்குமுறையை வரவழைப்பதற்காகவே வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்றது. குறிப்பாக சமூக நல மருத்துவமனைகள், மானிய விலையில் உணவு வழங்கும் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுப் போக்குவரத்து சாதனங்கள் எனத் தொழிலாளர்களுக்கு அரசு செய்து தந்துள்ள வசதிகளைத் தாக்கி, தீயிட்டுக் கொளுத்துகிறது. மின் இணைப்புகளைத் துண்டித்து, மின்உற்பத்தி நிலையங்களைத் தாக்குகிறது.

தெருவில் தடையரண்களை அமைத்துக் கொண்டு பொதுமக்களையும், அரசு ஆதரவாளர்களையும் தாக்குகின்றது. அரசு அலுவலர்களைத் துப்பாக்கியால் சுடுகிறது. ‘ஸ்நைபர்’ எனப்படும் தொலைதூரத்திலிருந்து மறைந்திருந்து சுடும் துப்பாக்கியுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சக போராட்டக்காரர்களையே தாக்கி அவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக பொப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதற்குத் தேவையான ஆயுதங்களையும் இவர்கள் ஏராளமாக வாங்கிக் குவித்துள்ளனர். வெனிசுலாவின் முக்கியமான இரு பல்கலைக் கழகங்கள் துணை இராணுவப் படைகளைப் பயிற்றுவிக்கும் கூடாரமாகவும், ஆயுதக் கிடங்குகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இது ஒரு பாசிசக் கும்பல் என்றும் இதனை நசுக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசிவந்த வெனிசுலாவின் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கேப்டன் ஜோஸ் கில்லன் ஆர்க்யூ, இந்த கலகக் கும்பல் அமர்த்திய கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைகள் மற்றும் நாசவேலைகளை நிறைவேற்றுவதில் தேர்ச்சி பெற்ற கொலம்பிய போதை மருந்து மாஃபியாக்கள் இதற்காகவே வெனிசுலாவுக்குள் இறக்கப்பட்டிருக்கின்றனர். கலவரத்தைத் தூண்டுவது, ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தூக்கியெறிந்துவிட்டு அமெரிக்க ஆதரவு பொம்மை அரசை நிறுவுவதுதான் இவர்கள் நோக்கம் என்பதால், பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு விடும் அழைப்புக்களை இந்தக் கலவரக் கும்பல் தொடர்ந்து மறுத்து வருகின்றது.

இந்தச் சிறு கும்பல் நடத்தும் போராட்டங்களை, மிகப் பெரிய மக்கள் எழுச்சி போல அமெரிக்க ஆதரவு சர்வதேச ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அமைதியான மக்கள் போராட்டத்தை வெனிசுலா அரசு கடுமையாக ஒடுக்குவதாகவும், மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாகவும் பரப்புவதன் மூலம் அமெரிக்கத் தலையீட்டை நியாயப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

அமெரிக்கா திரைமறைவில் நின்றுகொண்டு நடத்திவரும் இத்தகைய ஆட்சிக்கவிழ்ப்பு வேலைகளை வெனிசுலா அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் போராட்டக்காரர்களுக்குப் பண உதவியும், ஆயுத உதவிகளும் செய்வதாகக் கூறி பல அதிகாரிகளை வெனிசுலா வெளியேற்றியுள்ளது. குறிப்பாக, கெல்லி கெடர்லிங் என்ற தூதரக அதிகாரி சி.ஐ.ஏ.வின் உளவாளி என்பதும், வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதற்காகவென்றே அவரை சி.ஐ.ஏ. நியமித்துள்ளதாகவும் அம்பலமாகியுள்ளது. கெல்லி கெடர்லிங்கினால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களுள் ஒருவரான கியூபாவைச் சேர்ந்த முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளி ராவுல் கபோடி இதனை அம்பலப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அமெரிக்கா தனது உளவாளிகளை எப்படி உருவாக்குகிறது என்பதையும் விளக்கியுள்ளார்.

ஜென் ஷார்ப்
2002-ம் ஆண்டு வெனிசுலாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் இயங்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கழக நிறுவனரும், அமைதிவழி ஆட்சிக்கவிழ்ப்பு சித்தாந்த வழிகாட்டியுமான ஜென் ஷார்ப்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நிறுவனம், ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை, அகிம்சை வழிப் போராட்டங்களுக்கான சர்வதேச மையம் போன்ற பல நிறுவனங்கள் வெனிசுலாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது, பேராசிரியர்களுக்கு சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களை உருவாக்கித் தருவது எனப் பல வழிகளில் மாணவர்களையும் பேராசிரியர்களையும் தங்களது வலையில் விழவைக்கின்றனர்.

வெனிசுலாவில் தற்போதும், இதற்கு முன்னரும் பல்வேறு மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் மாணவ தலைவர்கள் இத்தகைய நிறுவனங்களிடம் உதவி பெற்றுப் படித்தவர்களே. அமைதிவழி ஆட்சிக்கவிழ்ப்பு என்ற கோட்பாட்டை முன்வைத்து, பனிப்போர் காலத்துக்குப் பின் சி.ஐ.ஏ நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கெல்லாம் சித்தாந்த வழிகாட்டியாக இருந்த ஜென் ஷார்ப் என்பவரின் (சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு என்ற நூலின் ஆசிரியர்) ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நிறுவனம்தான் 2002-ம் ஆண்டு வெனிசுலாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் செயல்பட்டது.

தன்னார்வக் குழுக்கள், பல்கலைக்கழக வளாகங்கள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அடிவருடிகளின் கையில் இருக்கும் ஆயுதம், வெனிசுலாவின் ஊடகங்கள். ஊடகத்துறையின் சுமார் 70 விழுக்காடு முதலாளிகளிடமும், 20 விழுக்காடு மக்கள் கூட்டுறவிடமும், 5 விழுக்காடு அரசிடமும் உள்ளன. பொய்களையும் வதந்திகளையும் பரப்புவதிலும், தனியார்மய ஆதரவு பொதுக்கருத்தை தந்திரமாக உருவாக்குவதிலும் தனியார் ஊடகங்கள் முக்கியப் பாத்திரமாற்றுகின்றன. அன்னா ஹசாரே போராட்டத்தை இங்கே கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் ஊதிப் பெருக்கியதைப் போலவே, வெனிசுலாவின் எதிர்ப்புரட்சி கலகக் கும்பலின் நடவடிக்கைகளை அந்நாட்டின் தனியார் ஊடகங்கள் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போல சித்தரிக்கின்றன.

வெனிசுலாவில் அரங்கேறிவரும் சதிச்செயல்களை பின்னிருந்து இயக்குவது அமெரிக்காதான் என்பது உலகத்துக்கே தெரிந்திருந்தாலும், வழக்கம்போல அமெரிக்கா அதனை மறுக்கிறது. மறுபுறம் வெனிசுலாவில் நேரடியாகத் தலையிடுவதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அமெரிக்கா பகிரங்கமாகவே செய்து வருகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ‘வெனிசுலா அரசு தனது மக்களுக்கெதிராக நடத்திவரும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என எச்சரிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையை உடனடியாக இதில் தலையிட வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ‘வெனிசுலாவில் நடைபெறும் சம்பவங்கள் கவலையளிப்பதாகவும், அதிபர் மாதுரோ உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்‘ எனவும் எச்சரிக்கிறார். வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பையும், ஐ.நா.வையும் அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்திக்கிறது.

வெனிசுலா சுவர் சித்திரம்
அமெரிகாவின் சதிகளுக்கு எதிராக வெனிசுலாவின் உழைக்கும் மக்கள் குடியிருப்புப் பகுதியில் வரையப்பட்டுள்ள சித்திரம்.

அமெரிக்காவின் இதுபோன்ற சதிகளைத் தங்களது சோந்த அனுபவத்தினூடாக வெனிசுலாவின் மக்கள் உணர்ந்திருப்பதால், இதனை அவர்கள் முறியடிப்பார்கள் என்பது திண்ணம். ஆனால், அமெரிக்காவால் அடுத்தடுத்து இதுபோன்ற கலவரங்களையும், மாணவர் போராட்டங்களையும் வெனிசுலாவில் நடத்த முடிவதற்கு வேறொரு அடிப்படையும் இருக்கிறது. 21-ம் நூற்றாண்டின் சோசலிசம் என்ற பெயரில் தரகு முதலாளிகள் உள்ளிட்ட அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய பல கட்சி ஜனநாயக அரசுதான் வெனிசுலாவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அமெரிக்க ஆதரவு தரகு முதலாளி வர்க்கம் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது. இவற்றையெல்லாம் மீறி, மக்களிடம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்து, அந்த அதிகாரத்தின் மூலம்தான் பல சீர்திருத்தங்களை அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறார் சாவேஸ். ஆகவே, கீழிருந்து மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட புரட்சி, அதிலிருந்து உருவாக்கப்பட்ட தொழிலாளர் – விவசாயிகள் கமிட்டிகளின் அரசியல் அதிகாரம் என்ற நிலை அங்கு இல்லை.

10-6அமெரிக்க எதிர்ப்பு, தனியார்மய எதிர்ப்பு, மக்கள்நல நடவடிக்கைகள் பலவற்றை சாவேஸ் எடுத்திருந்த போதிலும், அவை ஏற்கெனவே இருந்த முதலாளித்துவ அதிகார வர்க்க அரசமைப்பின் மூலம்தான் நிறைவேற்றப்படுகின்றன. இந்த முதலாளித்துவ அதிகார வர்க்கமும் சாவேஸின் கட்சியைச் சேர்ந்த முதலாளித்துவப் பேர்வழிகளும்தான் பதுக்கல் முதல் ஊழல் வரையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நாம் போலி கம்யூனிஸ்டு என்று இங்கே கூறுவதைப் போல, அங்கே பொலி பூர்சுவா (பொலிவாரியன் பூர்சுவா) என்று ஏளனமாக இவர்களை அழைக்கிறார்கள் வெனிசுலா மக்கள். கட்டுச் சோற்றுக்குள்ளிருக்கும் பெருச்சாளி போல வெனிசுலா அரசை உள்ளிருந்து அழிக்கும் வேலையை இவர்கள்தான் செய்து வருகின்றனர். அமெரிக்க ஆதரவு எதிர்ப்புரட்சி சதிக் கும்பல் செல்வாக்கு பெறும் வாய்ப்பை இவர்கள்தான் ஏற்படுத்தித் தருகின்றனர்.

வெனிசுலாவில் அமெரிக்கா தற்போது அரங்கேற்றி வரும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை, இராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள், தலையீடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய வண்ணப்புரட்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கது என்கிற அதே நேரத்தில், இதற்கொரு கூடுதல் முக்கியத்துவமும் இருக்கிறது. கம்யூனிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவமும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நிலைநாட்டப்பட்டு விட்டன என்று ஏகாதிபத்தியவாதிகள் கொக்கரித்து வந்த காலத்தில், பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்படும் நாடுகளின் மீது மறுகாலனியாக்க தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படும் இந்தக் காலத்தில், அலையை எதிர்த்து நீந்த முடியும் என்ற நம்பிக்கையின் சின்னமாக வெனிசுலா ஒளிர்கிறது. கல்வி, மருத்துவம், பொதுச்சேவைகள் ஆகிய அனைத்தையும் தனியார்மயமாக்கும் போக்கு உலகெங்கும் நிகழ்ந்துவரும் நிலையில், இவற்றையெல்லாம் மக்களின் அடிப்படை உரிமையாக்கியிருப்பதுடன், மிகக் குறுகிய காலத்தில் மக்கள் அனைவருக்கும் இச்சேவைகளை வழங்கியுமிருக்கிறது சாவேஸின் அரசு. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகளின் அச்சத்திற்கும் ஆத்திரத்துக்கும் அதுதான் காரணம். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கம் வெனிசுலாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியதற்கான காரணமும் இதுதான்.

வெனிசுலாவில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டின் சரியான தன்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறது. ஏகாதிபத்திய கைக்கூலிகள் மற்றும் தரகு முதலாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யாமல், ஆலைகள், தொழில்கள் முதல் ஊடகங்கள் வரையிலானவற்றை அவர்கள் கட்டுப்பாட்டிலேயே விட்டுவைத்து, நாடாளுமன்ற அதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு அரசு அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதற்கு வெனிசுலாவின் நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

-கதிர்
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________