ப்ளஸ் டூ தேர்ச்சி : மண் பூரிக்கும் மலர்கள் – அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்!
- துத்திப் பூக்களின்
எளிமையும், ஈர்ப்பும்
எங்கள் மாநகராட்சி
அரசுப்பள்ளி மாணவர்கள்
பாதைகள் மறிக்கும்
முட்களைத் தாண்டி
வெற்றிக்கொடி கட்டிய
வேலிப் பூக்கள்!
- புலர் பொழுதின் ஊக்கம்
விடிவானின் அமைதிப் பேரழுகு
எங்கள்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.
வசதிகள் குறைவு
எனினும், நூலாம் படைகள் தாண்டி
ஓட்டை, உடைசல்களுக்கிடையே
மங்கியத் தாழ்வாரங்களை
ஒளிபூசி உயிர்ப்பிக்கும்
சூரிய மலர்கள்
எங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
மினுக்கும் கவர்ச்சி இல்லை…
மீடியாக்களின் பீற்றல் ஒளி இல்லை…
ஆடம்பர விளம்பரமில்லை…
அருகிய ஈரத்தில்
இறுகிய மண்பசையில்
கிடைத்த வாய்ப்பில்
முளைத்த விதைகளாய்
எழுந்த மணிகளே…
அரசுப்பள்ளி மாணவர்களே!
உங்கள் தேர்ச்சியில்
உவக்கும் கிழக்கும்!
- கட்டாய நன்கொடை இல்லாமல்,
களவாட பல ட்யூசன் இல்லாமல்,
உறவாடும் உழைப்பின் தரத்தால்
கல்வித் தரத்தை களத்தில் மலர்வித்த
அரசுப்பள்ளி ஆசிரியர்களே…
உங்கள் மகத்தான சாதனைக்கு
மக்களின் மனதினிய வாழ்த்துக்கள்!
– துரை.சண்முகம்