திருவண்ணாமலையில் கவுத்தி-வேடியப்பன் மலை தகர்த்து, இரும்புத் தாது எடுத்து, தமிழக அரசு உதவியுடன் தமிழக மக்களை மொட்டை போட, துடிக்கிறது ஜிண்டால் குழுமம். அந்த ஜிண்டால் குழுமத்தின் லட்சணம் இன்னொரு ஊழல் வழக்கில் அம்பலமாகியிருக்கிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்த தாசரி நாராயண ராவ், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் தரகு முதலாளியுமான நவீன் ஜிண்டால் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களான ககன் ஸ்பான்ச் அயர்ன், ஜிண்டால் ரியாலிட்டிஸ், ஜிண்டால் ஸ்டீல், புதுதில்லி எக்சிம் பிரைவேட் லிமிடெட், சௌபாக்யா மீடியா லிமிடெட் ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம், சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.
சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த அமலாக்கத் துறையினர் சுரங்க ஒதுக்கீடு பெறுவதற்காக 2008-ம் ஆண்டு லஞ்சமாக கருப்பு பணம் கைமாறியிருப்பதற்கான ஆதாரங்களை திரட்டியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் நவீன் ஜிண்டால் மீதும் தாசரி நாராயண ராவ் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 35-வது ஒப்புதல் கமிட்டியின் பெயர் தெரியாத அதிகாரிகளும் இந்த முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல் நடைமுறைகளை மூடி மறைத்து நடத்திக் கொடுப்பதுதான் அதிகார வர்க்கத்தின் பணி என்பது இன்னொரு முறை ஊர்ஜிதமாகியுள்ளது.
இதில் ஹவாலா மோசடி ஏதும் நடைபெற்றுள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே சிபிஐ, சிறுசிறு ஆதாரங்கள் இல்லை என்பதற்காக வழக்குகளை ஊற்றி மூடும் வேலையை துவங்கியிருக்கும் நிலையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறையையும் நாம் முற்றிலும் நம்ப முடியாது என்றாலும் கார்ப்பரேட் கொள்ளையர்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள இந்த வழக்கு உதவி செய்கிறது.
2004 முதல் 2008 வரை அமைச்சராக இருந்த தாசரி நாராயண ராவ், தான் இணையமைச்சர்தான் என்றும் தனது பதவிக் காலத்தில் ஒரு பகுதியில் சிபு சோரன் காபினட் அமைச்சராகவும், மறு பகுதியில் பிரதமரும் தான் பொறுப்பில் இருந்தார்கள் என்றும் கூறியிருக்கிறார். அதாவது நடந்த ஊழலுக்கு தன்னை விட நிலக்கரித் திருடன் மன்மோகன்தான் பொறுப்பு என்று புலம்பியிருக்கிறார். அப்படி இல்லை என்றால், தான் தவறு செய்திருந்தால் பிரதமர் தன்னை பதவியில் இருந்து நீக்கியிருக்க முடியுமே என அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். இல்லையென்றால் நீங்கள் பிரதமரையும் குற்றம் சாட்ட வேண்டும் என்பதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஜார்கண்டு மாநிலம் அமர்கொண்டாவில் அமைந்துள்ள முர்காதாங்கல் நிலக்கரி வயல் ஒதுக்கீடு தொடர்பான முறைகேடுகளைப் பற்றி சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. அதில் நவீன் ஜிண்டால், தாசரி நாராயணராவ் இவர்களிருவருடன் முன்னாள் நிலக்கரிதுறை செயலர் எச்.சி குப்தாவின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. நிலக்கரி வயல் ஒதுக்கீட்டைப் பெற்ற ஒரு ஆண்டுக்குள், காங்கிரசு எம்.பி நவீன் ஜிண்டால் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தாசரி நாராயண ராவின் சௌபாக்யா மீடியா நிறுவனத்தில் ரூ 2.25 கோடி முதலீடு செய்திருந்தார்.
அமலாக்க துறை விசாரணையில், சந்தை மதிப்பு தலா பங்கு ஒன்றுக்கு ரூ 28 ஆக இருக்கையில் ரூ 100 கொடுத்து ஜிண்டால் அப்பங்குகளை வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் தங்களது பெயரை வெளியிடக் கூடாது என்பதற்காக ஜீ டிவி மேலாளர்களுடன் நவீன் ஜிண்டால் பேச்சு வார்த்தை நடத்தியது கடந்த அக்டோபர் மாதம் அம்பலமானது.
நவீன் ஜிண்டால் என்ற இந்த உத்தமரின் குடும்பத்திற்கு சொந்தமான ஜிண்டால் குழுமத்துடன்தான் அடுத்தடுத்த தமிழக அரசுகள் கூடிக் குலாவி திருவண்ணாமலை வேடியப்பன் மலையை சஜ்ஜன் ஜிண்டால் என்ற அவரது சகோதரரின் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்திற்கு தாரை வார்க்க உதவி வருகின்றன.
நிலக்கரிக்கே இத்தனை ஊழல் மோசடிகள் என்றால் இரும்புக்கு இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம். எனவே ஒதுக்கீடு வாங்குவதற்கு மாமுல் கொடுக்கும் ஜிண்டால், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மகா மாமூல் வீசும் என்பதில் ஐயமில்லை. ஆகவே திருவண்ணாமலையில் ஜிண்டாலுக்கு ஆதரவாக களமிறங்கும் அரசு, போலீசு, கலெக்டர், என் ஜி வோக்களை போராடி துரத்துவதை தமிழக மக்கள் இன்னும் வீச்சாக செய்ய வேண்டும்.
மேலும் படிக்க