Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாநகராட்சி பள்ளிகளுக்கு பு.மா.இ.மு வாழ்த்து

மாநகராட்சி பள்ளிகளுக்கு பு.மா.இ.மு வாழ்த்து

-

2013 – 14 ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%. சென்ற ஆண்டை விட அதிகம். ஒரு பக்கம் தனியார் பள்ளிகள் தங்களின் தேர்ச்சி விகிதத்தைக் காட்டி அடுத்த கல்வியாண்டின் கொள்ளைக்காக தங்கள் விளம்பரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் , சாலைகளிலும் வைத்து ஆரவாரமாக ஆள்பிடிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டன.

உண்மையில், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி எப்படி சாத்தியமாகிறது?

புமாஇமு ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி பள்ளிகளுக்கு ஆதரவாக புமாஇமு ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

தில்லு முல்லு வேலைகளை அரங்கேற்றியே தேர்ச்சி விகிதத்தை அதிகமாக்கும் கலையில் தனியார் பள்ளிகளை விஞ்சுவதற்கு யாருமில்லை. மாணவர்களுக்கு பிட் எழுதிக் கொடுப்பது, தேர்வு அறையிலேயே நோட்ஸ் கொடுத்து எழுத வைப்பது, தங்கள் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் எங்கு திருத்தப்படுகின்றன என்பதை கண்டுபிடித்து, இலஞ்ச இலாவண்யங்கள் மூலமாக மதிப்பெண்கள் பெறுவது போன்ற திருப்பணிகளை செய்கின்றன. இதன் மூலம் தங்கள் பள்ளியின் ‘தரத்தை’ உயர்த்திக் கொள்கின்றன.

அதுமட்டுமல்ல, 10-ம் வகுப்பில் 450-க்கும் அதிகமான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு, அதன் மூலம் 12-ம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சியை உத்தரவாதப்படுத்தி, அதன் மூலம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளும் மோசடியை தனியார் பள்ளிகள் அரங்கேற்றுகின்றன. இதிலிருந்து படித்து மதிப்பெண் எடுப்பதில்ஆற்றல் குறைவான மாணவர்களை படிக்க வைத்து அவர்களை மதிப்பெண் எடுப்பவர்களாக மாற்றும் தகுதி தனியார் பள்ளிகளுக்கு கிடையாது என்பதை உணர முடியும்.

இப்படி, நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டும் தங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளும் தனியார் பள்ளிகள், சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தங்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றுகின்றன. ஊரப்பாக்கம் நீலன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்பு செல்லும் மாணவன் தமிழரசனை பள்ளி நிர்வாகம் கட்டாயமாக வெளியேற்றியது. காரணம், அம்மாணவன் 10-ம் வகுப்பு வந்தால் நன்றாக மதிப்பெண் எடுக்க மாட்டான் என்பதுதான். இதனால் மனமுடைந்த அம்மாணவன் அன்றே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். தனியார் பள்ளிகளின் யோக்கியதைக்கு, கொடுமைக்கு இந்த ஒரு சான்றே போதுமானது.

தனியார் பள்ளிகளைக் கண்டு தரத்திற்காக மயங்கும் பெற்றோர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். வட்டிக்கு கடன் வாங்கி, தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது, பிள்ளைகளையும் பறிகொடுக்கும் இந்நிலையைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.

மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி கற்பிக்கும் அம்சங்கள் தனியார் பள்ளிகளில் ஏதுமில்லை. தரமற்ற ஆசிரியர்களை நியமித்து, அவர்கள் மூலம் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து, வெறும் மதிப்பெண் மட்டுமே பெறுகின்ற இயந்திரங்களாக மாணவர்களை உற்பத்தி செய்கின்றன. அப்படிப் பெறுகின்ற மதிப்பெண்களை மூலதனமாக வைத்தே ஒவ்வொரு வருடமும் பல ஆயிரங்கள் கட்டணத்தை உயர்த்துகின்றன.

இன்னொரு புறமோ அரசுப்பள்ளிகள் அமைதியாக சாதித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டை (79%) விட இந்த ஆண்டு (84%) ஐந்து சதவிகிதம் கூடுதலான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. ‘எல்லா அடிப்படை வசதிகளும் உள்ளன, ஸ்மார்ட் கிளாஸ் உள்ளது, கட்டிடங்கள் பளபளப்பாக உள்ளன’ என்று பீற்றிக் கொள்ளும் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், அரசுப்பள்ளிகளின் சாதனை மகத்தானதாகும்.

அடிப்படை வசதிகள் இல்லாமல், கழிவறை, குடிநீர் வசதிகள் மிக அவசியமான வசதிகள் இல்லாமல், கற்கும் சூழல் மிக மோசமாக உள்ள நிலையிலும், எந்த வசதியும் செய்து கொடுக்காமல், பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர்களை நியமிக்காமல் அரசு திட்டமிட்டே அரசுப் பள்ளிகளை புறக்கணித்து, கல்வி தனியார்மயத்தை ஊக்குவித்து வரும்நிலையிலும் இந்தச் சாதனையை அரசுப் பள்ளிகள் நிகழ்த்தியுள்ளன என்பதே குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அரசுப் பள்ளிகள் தரமில்லையென்றாலும், தரமான ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே உள்ளனர். அவர்களின் கடுமையான உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலுமே இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்பதே உண்மை. சென்னையில் மட்டும் நான்கு மாநகராட்சி பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகள் 90%-க்கும் மேல் தேர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளன.

இதுவே அரசுப்பள்ளிகள் தரமாக இருந்தால், மாணவர்களுக்கு பிடித்தமான கற்கும் சூழல் இருந்தால் எந்த தனியார் பள்ளியும் அரசுப்பள்ளிகளின் அருகில் நெருங்க கூட முடியாது. கட்டணமில்லாமல் மாணவர்கள் தரமான கல்வியை பெற முடியும். அதைத்தான் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி காட்டுகிறது. பல பெற்றோர்கள், தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி, “மாநகராட்சி பள்ளிகளில் நன்றாக கற்பிக்கிறார்கள் என்பதற்காக மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கின்றோம்” என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்ல, “தனியார் பள்ளிகளில் தாங்கள் சுயமரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறோம். ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எங்களை மதித்து நடக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளையும் அவர்களின் பிள்ளைகளைப் போல பார்த்துக் கொள்கிறார்கள்” என்று மாதவரம் சாலை, பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் முதல் மதிப்பெண் (1143) எடுத்த சுகந்தி என்ற மாணவியின் அப்பா கூறுகிறார்.

தனியார் பள்ளிகள் என்றால் தரம் என்று மயங்கும் பெற்றோர்கள், தனியார் பள்ளிகளின் தரத்தைப் புரிந்து கொள்ள மேற்சொன்ன ஒரு உதாரணம் போதாதா?

அரசுப் பள்ளிகள் நமது பள்ளிகள். அங்கு நம் பிள்ளைகளை சேர்ப்போம். தரம் இல்லையென்று தனியார் பள்ளிகளுக்கு ஓடி, அங்கு தரமற்ற கல்வியை, காசு கொடுத்து பெறுவதை விட , தரமான ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உயர்த்தப் போராடுவோம். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைவதன் மூலம் கண்டிப்பாக நாம் இதை சாதிக்க முடியும். தரமான இலவசக் கல்வியை பெற முடியும். மனப்பாடக் கல்விக்கு பதிலாக உண்மையான அறிவியல்பூர்வமான கல்வியைப் பெற முடியும். ஒற்றுமையின் மூலம் இந்த அரசைப் பணிய வைக்க முடியும்.

இந்த நோக்கத்தை வலியுறுத்தி, பரவலாக மக்களிடையே இந்தக் கருத்தை பதிய வைக்கும் நோக்கத்தோடு, அரசுப்பள்ளிகளின் சாதனைக்கு வித்திட்ட ஆசிரியர்களை வாழ்த்தி சென்னை முழுக்க புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

+2 தேர்வு முடிவுகள் - புமாஇமு சுவரொட்டி

நீதிமன்ற வாயில்கள், அரசு அலுவலகங்கள், கல்வித்துறை அலுவலகங்கள், அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் என பரவலாக தோழர்கள் மக்களிடையே சுவரொட்டிப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளனர்.

இவண்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னைக் கிளை.