பதில்களுக்கு வழியில்லாத கேள்விகளால் துளைப்போரை ஓயாமல் ”வாங்கடா விவாதிக்கலாம்” என்று பணிவோடு அழைக்கும் தவ்ஹீதுவாதிகளையும் அவர்களின் ‘ஜனநாயக மாண்பையும்’ நாம் அறிவோம். பகிரங்க விவாதம் எனும் ஜனநாயக வழிமுறையை மதமோ இல்லை மார்க்கத்தை பின்பற்றும் இசுலாமிய நாடுகளோ அனுமதிப்பதில்லை. ஏன் அனுமதிப்பதில்லை என்று கேட்டால் அப்படிக் கேட்பது மதத்தை இழிவுபடுத்துவது என்கிறார்கள்.

இவர்களே இப்படியென்றால் இவர்களுக்கு ஜனநாயக ’விழுமியங்களை’ கற்றுக் கொடுத்த சித்தாந்த மூலவர்களான சவுதி அரேபியாவின் அரசியல் சூழல் எப்படியிருக்கும்? சவுதியில் குழந்தைகள் மண்ணில் குழி தோண்டி விளையாடினாலே பெட்ரோலும் டீசலும் பீறிட்டு அடிக்கும் என்கிற அம்புலிமாமா கதைகளை விடுத்து அங்கே ஜனநாயகம் என்கிற வஸ்து கிலோ என்ன விலைக்கு விற்கிறது என்ற இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.
கடந்த ஜனவரி 31-ம் தேதி சவுதி அரசு தீவிரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ’தீவிரவாதம்’ என்றால் என்னவென்று அமெரிக்கா துவங்கி இந்தியா வரை உழைக்கும் மக்களை இனம், மொழி, மதத்தின் பெயரில் ஒடுக்குவதறத்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், சவுதி அரசு தீவிரவாதத்திற்கு புதிய விளக்கங்களை அளிக்கிறது. மேற்படி சட்டப் பிரிவின் முதல் ஷரத்தின் படி “சவுதி நாட்டின் அடித்தளமான இசுலாமிய மதத்தின் அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குவதோ, நாத்திக கருத்தை எந்த வடிவத்திலாவது கொண்டிருப்பதோ” தண்டனைக்குரிய குற்றம் என்றாகிறது.
தீவிரவாத தடுப்பு சட்டம் என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் இந்த கேலிக்கூத்தில், எது தீவிரவாதம் என்பதற்கான குறிப்பான விளக்கங்களே இல்லை. மாறாக, அரசை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, அரசரை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, நாத்திக கருத்துக்களை கொண்டிருப்பது, இசுலாத்தை விமர்சிப்பது போன்ற இயல்பான கருத்து சுதந்திரம் சார்ந்த நடவடிக்கைகளை தீவிரவாத செயல்களாக சித்தரிக்கிறார்கள். சவுதி அரசால் ’தீவிரவாதி’ என்று முத்திரை குத்தப்பட்டவர் என்றால் ’குற்றத்தின்’ தன்மைக்கேற்ப தலையைக் கூட இழக்க நேரிடலாம் என்பதை நினைவில் கொள்க.
கடவுள் மறுப்பு மட்டுமல்ல, இசுலாத்தை மறுத்து வேறு மதங்களைத் தேர்ந்தெடுத்தாலும் (apostasy), சவுதியில் ஏற்கனவே நடப்பில் உள்ள ஷரியா சட்டங்களின் படி மரண தண்டனை தான். இசுலாத்தை உள்ளிருந்தே விமர்சிப்பதும் கூட மத விரோதம் என்கிற பிரிவுக்குள் அடங்கி உயிரை பலிவாங்கி விடக்கூடும். சுதந்திரம் என்கிற வார்த்தை மூளைக்குள் நுழையும் முன்பே தலை துண்டிக்கப்பட்டிருக்கும்.
சவுதியைச் சேர்ந்த ராயீஃப் பதாவி சொந்தமாக இணையதளம் ஒன்றை நடத்தும் இணைய எழுத்தாளர். ’சவுதியின் தாராள சிந்தனையாளர்களை விடுவி’ (Free Saudi Liberals) என்ற இணையதளத்தில் இசுலாத்தை விமர்சித்து எழுதிய ‘குற்றத்திற்காக’ 2012 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். மத விரோத (apostasy) குற்றச்சாட்டை எதிர்கொண்ட ராயீஃப் பதாவி, சர்வதேச அழுத்தங்கள் மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் தொடர்ச்சியான அவதானிப்பை அடுத்து கடந்த ஏழாம் தேதி 10 ஆண்டு சிறை வாசத்தையும் ஆயிரம் சவுக்கடியையும் ஒரு லட்சம் ரியால் அபாரதத்தையும் தண்டனையாகப் பெற்று தலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
அரசரை கேலியாக பேசியவர்கள், இசுலாத்தை கிண்டலடித்து எழுதியவர்களெல்லாம் ஒன்று முதுகுத் தோல் உரிக்கப்பட்டு அலைகிறார்கள் அல்லது தலையைத் தொலைத்து விட்டு மண்ணுக்குள் உறங்குகிறார்கள். உலக சுதந்திரத்தின் ஒரே காவல் தெய்வமான அமெரிக்காவோ அதன் இன்னபிற அடிவருடி அறிவுஜீவிகளோ, இது வரைக்கும் சவுதியில் சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் அரசர் அணிந்து வீசிய கிழிந்த ஜட்டி போல பாலைவன புயலில் பறப்பதைப் பற்றி மூச்சு விடுவதில்லை.

வானத்தில் துப்பிய எச்சில் ஏன் மூஞ்சியில் விழுகிறது என்று அதிசயப்பட்ட முல்லாவின் கதையை படித்திருப்போம். அது புவியீர்ப்பு விசையின் அடிப்படை விதி என்பதைப் புரிந்து கொள்ள அவரிடம் அறிவும் இல்லை, அதிகாரமுமில்லை – பின்னது இருந்திருக்குமானால் சவுதி அரசைப் போல், எச்சில் மூஞ்சியில் விழுவதைத் தவிர்க்க சட்டமியற்றியிருப்பார். சவுதி அரசு நாத்திகத்தைக் குறித்து அஞ்சுவதற்கும் இந்த தீவிரவாத அச்சத்திற்கும் காரணமில்லாமல் இல்லை.
சவுதியில் வஹாபிய பாணி இசுலாமிய மதமும் அதிகாரமும் வேறு வேறல்ல. சவுதி போன்ற நாடுகளில் அதிகாரத்திற்கு எதிரான எந்த சிந்தனையும் மதத் துறப்பிலிருந்தும் இறை மறுப்பிலிருந்தும் தான் இயல்பாகவே துவங்குகிறது – இந்தியாவில் பார்ப்பனிய படிநிலை சாதி அமைப்பைத் தொடாமல் ஜனநாயகம் குறித்து பேசவே முடியாது என்பதைப் போல.
சமீபத்தில் கல்லப் என்கிற வலைத்தளம் எடுத்த இணைய வாக்கெடுப்பில் சவுதியில் சுமார் 5 சதவீதம் நாத்திகர்கள் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ‘நாத்திகம் என்றாலே ஆபாசமானது, தீங்கானது, சபிக்கப்பட்ட பரலோக வாழ்வுக்கு இட்டுச் செல்லக் கூடியது’ என்றெல்லாம் சவுதி மதகுருமார்களால் விளக்கமளிக்கப்படுகிறது. உலகிலேயே முத்தவீன்கள் எனப்படும் மத போலீசைக் கொண்டு தடிக்கம்பாலும் தலைவெட்டி தண்டனைகளாலும் மதப் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் வெகு சில நாடுகளில் ஒன்றான சவுதியில், ஐந்து சதவீதம் பேர் தங்களை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்றால், அடக்குமுறைகள் விலகினால் அந்த சதவீதத்தின் அளவு எந்தளவுக்கு கூடும் என்பதை நாம் அனுமானிக்கலாம்.
சவுதியில் நாத்திகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
”யாரேனும் தங்களை இறை நம்பிக்கையற்றவர் என்று அறிவித்துக் கொண்டால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, குடும்பத்திலிருந்து முதலில் வெளியேற்றப்படுவார். அவரது வேலை பறிபோகலாம். அவரைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பற்றியே பேசுவார்கள் – பிறரிடமும் அவரைக் குறித்து எச்சரிப்பார்கள். ஒருவேளை அவர் தாக்கப்படலாம், ஏன் கொலை கூட செய்யப்படலாம்” என்கிறார் ஜாபிர்.
ஜாபிர் இருபதுகளின் இறுதியில் இருக்கும் துடிப்பான இளைஞர். சவுதியின் மதிப்பு வாய்ந்த பல்கலைக் கழகம் ஒன்றில் உயர் கல்வி படித்தவர். கடுமையான இசுலாமிய நெறிமுறைகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்டவர். சொந்த முறையில் குரான் மற்றும் பிற ஹதீதுகளைப் படித்து அதன் முரண்பாடுகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் நாத்திகராக மாறியவர்.
’உங்கள் மத்திய கிழக்கு’ (your middle east) என்கிற பத்திரிகையின் செய்தியாளருக்கு தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு ஜாபிர் (மாற்றப்பட்ட பெயர்) அளித்த பேட்டியில் ’இது போன்ற சமூக நிலைமைகளில் ஒரு சவுதிக்காரனாக இருப்பது குறித்து எவ்வாறு உணர்கிறார்’ என்று பேட்டியாளர் கேட்டதற்கு அவர் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார் –
”சவுதி ஒரு மதச்சார்பற்ற நாடல்ல என்கிற எதார்த்தம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. எனது நாடு ஒரு மதச்சார்புள்ள நாடு என்பதும் இசுலாத்தின் அதிதீவிரமான பிரிவு ஒன்றை முன்மொழிகிறது என்ற எதார்த்தமும் என்னை அச்சுறுத்துகிறது. நான் இந்தச் சமூகத்தில் மாற்றங்களைக் காணவில்லை, அரச குடும்பத்தில் மாற்றங்களைக் காணவில்லை. வெளியுலகைப் பொருத்தவரை, இங்கே தாம் பிறந்த மதத்தை நம்ப மறுத்த எளிமையான காரணத்தை முன்வைத்து எத்தனை பேர் கொல்லப்படுகின்றனர் என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம் எண்ணெய் மட்டும் தான்.”
“சவுதியில் ஒருவர் தனது சுதந்திரமான எண்ணத்தை வெளியிடுவதும் ஒன்று தான்; கழுத்தை வெட்டுக்கத்திக்கு முன் தானே முன்வந்து நீட்டுவதும் ஒன்று தான். ஆகவே, நவீன தொழில்நுட்பங்களான இணையதளமும், சமூக வலைத்தளங்களுமே நாத்திகர்களின் ஒரே தொடர்பு சாதனமாக உள்ளது. பல்வேறு நகரங்களில் நாத்திக குழுக்கள் இரகசியமான முறையில் இயங்கி வருகின்றன.”
”இறை நம்பிக்கையற்ற நாங்கள் பல்வேறு நகரங்களில் எங்களது சந்திப்புகளை நடத்தி வருகிறோம். அவை பிறரின் அவதானிப்புக்கு வருவது கடினம் என்றாலும் நீங்கள் அந்தக் கூட்டங்களுக்குச் சென்றால் அங்கே கூடுபவர்களின் எண்ணிக்கையும், பல்வேறு சமூகத்தட்டுகளைப் பிரதிபலிக்கும் உறுப்பினர்களையும் பார்த்து வியப்படைவீர்கள்” என்கிறார் ஜாபிர்.

மிர்ஸா காலிப் என்ற இந்திய முசுலீம் ஒருவரின் அனுபவமோ வேறு சில செய்திகளைச் சொல்கிறது. கடுமையான மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட மிர்ஸா காலிப், பணி நிமித்தமாக சுமார் பத்தாண்டுகளாக சவுதியில் வசித்துள்ளார். சவுதிக்குச் செல்லும் போது தீவிர மதப்பற்றாளராக சென்ற மிர்ஸா, திரும்பி வரும் போது நாத்திகராகத் திரும்பியுள்ளார். இங்கே வந்ததும் எழுபது வயதான தனது தந்தையிடம் சுமார் பத்தாண்டு காலம் விவாதித்து அவரது எண்பதாவது வயதில் அவரையும் நாத்திகராக மாற்றியுள்ளார்.
“நான் நாத்திகனாக மாறியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. என்னோடு பணிபுரிந்த அரபிக்கள் என்னை மிக மோசமான முறையில் கேலி பேசியது அதில் பிரதானமானது. நான் ஒரு சரியான முஸ்லீம் இல்லை என்றார்கள். அது எனது மத பெருமிதத்தை இழிவு படுத்தியது. ஏனெனில், நான் ஒரு சிறந்த முஸ்லீம் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். பின்னர் இந்த உளவியல் சித்திரவதைகளைத் தாள முடியாமல், நானே சொந்த முறையில் இசுலாத்தை ஆய்வு செய்யத் துவங்கினேன்” என்கிறார் மிர்ஸா.
மேற்கத்திய நாடுகளுக்கு தனது எணணெய் கிணறுகளைத் திறந்து விட்டு, அவர்கள் அளிக்கும் எச்சில் காசில் கொட்டமடித்து வரும் சவுதி ஆளும் வர்க்கத்துக்கு மக்களின் அதிருப்தி தங்களை நோக்கித் திரும்பாமல் தடுக்கும் தடுப்பணையாக இசுலாம் பயன்படுகிறது. ஓரளவுக்கு வசதி வாய்ப்புகளைப் பெற்றுள்ள நடுத்தர மற்றும் உயர் வர்க்க சவுதிகளோ தடித்தனத்தில் ஊறி வேறு நாடுகளைச் சேர்ந்த இசுலாமியர்களையே கூட மிக இழிவாக நடத்துகிறார்கள். இந்த இனவெறியாலேயே சுயமரியாதை கொண்ட பிறநாட்டு முசுலீம் மக்கள் மனதளவில் இசுலாத்தை விட்டு இயல்பாகவே விலகுகிறார்கள்.
நடுத்தர வர்க்க சவுதிகளுக்கு அந்நிய நிறுவனங்களில் வேலைக்கான ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நிதாகத் என்கிற சட்டம் நடப்பில் உள்ளது. இது வேலையே செய்யாமல் கையெழுத்துப் போட்டு சம்பளம் மட்டும் வாங்கும் ஒரு பிரிவினரை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அமெரிக்காவின் எச்சில் காசில் சவுதி அரசு மக்களிடமிருந்து எதிர்ப்புகள் ஏதும் வராமலிருப்பதை உறுதி செய்ய அறிவித்துள்ள ஏராளமான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு உள்ளது. மொத்த நாடும் அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டிருப்பது குறித்து இவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. சொரணையின் நெருப்பு தோலைச் சுடாதபடிக்கு வஹாபியம் அரணாக போர்த்திக் கொள்கிறது.
உள்ளூரில் விறைப்பு காட்டும் அதே வஹாபிய அதிகாரத் திமிர், பணக்கார சவுதிகளுக்கு நாட்டின் எல்லைகளை மத்திய கிழக்கின் விபச்சார சொர்க்கங்களை நோக்கி இருபத்து நான்கு மணி நேரமும் திறந்து வைத்திருக்கிறது. நாட்டிற்கு வெளியே விபச்சாரத்தில் மூழ்கித் திளைத்து விட்டு, நாட்டிற்கு உள்ளே ஐந்து வேளை தவறாமல் தொழுது தங்கள் ஈமானைக் காத்துக் கொள்ள, வசதியான ஷேக்குகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் பணக்கார ஷேக்குகளின் முதலீட்டு இலக்கே அமெரிக்கா தான் எனும் போது தனது சொந்த நாடு தொடர்ந்து அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் இயல்பான விருப்பம்.

ஆனால், சமூகத்தின் நிலைமை, சக மக்களின் இழிந்த வாழ்க்கை, ஏழை சவுதிகளை வாட்டும் வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் சுதந்திரம் பறிபோய் மேற்குலகங்களின் செருப்பாக சவுதி மாற்றப்பட்டிருப்பது என்கிற எதார்த்தமான உண்மைகளுக்கு முகம் கொடுத்து, நேர்மையாக பரிசீலிக்கும் திறன் உள்ளவர்கள் சவுதியில் அதிகாரமும் மதமும் பிரிக்கவொண்ணாதபடிக்கு இணைந்திருப்பதை சுலபமாக புரிந்து கொள்வார்கள்.
அதிகாரத்திற்கு எதிரான அமைப்பாக திரளவோ, ஒரு கட்சியின் தலைமையில் சவுதி அரச குடும்ப சர்வாதிகார அரசை வீழ்த்தவோ சாதகமான சூழல் உடனடியாக இல்லை. ஆகவே இயல்பாகவே மதக் கடுங்கோட்பாட்டு வாதத்தின் பிடியில் இருந்து விடுபடுவதே சுதந்திரத்தை நேசிப்பவர்களின் முன் உள்ளே முதல் தேர்வாக உள்ளது. அடிவருடி அதிகார வர்க்கத்தின் மேலான கசப்பின் உடனடி விளைவாக அவர்கள் எடுத்து வைக்கும் முதல் அடியே வஹாபிய இசுலாத்தின் எதிர் திசையை நோக்கி இருக்கிறது.
இது சவுதியின் பாசிச மன்னர் குடும்பத்திற்கும் தெரியும். அதனால் தான் நாத்திகர்களைத் தீவிரவாதிகள் என்று அறிவித்த முதல் ஷரத்தை தொடர்ந்து வரும் 2-வது ஷரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது –
”ஆட்சியாளர்கள் மேல் விசுவாசம் வைக்காதவர்கள் மற்றும் வேறு கட்சிகள், இயக்கங்கள், சிந்தனை போக்குகள், நாட்டிற்கு உள்ளே – வெளியே உள்ள தனிநபர்களையோ குழுவையோ உணர்வுப்பூர்வமாக ஆதரிப்பவர்கள்” – இவர்களெல்லாம் தீவிரவாதிகள் என்கிறது சவுதி.
அரசரைத் தவிர, வஹாபியத்தைத் தவிர வேறு ‘சிந்தனைப் போக்குகள்’ கொண்டவர்களை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்பது தான் இதில் உள்ள கோணங்கித்தனத்தின் உச்சம். என்னதான் வல்லமை கொண்டதாயினும், மண்டையோட்டைத் துளைத்துக் கொண்டு மூளைக்குள் ஊடுருவி, அதன் நியூரான்கள் அல்லாவையும் அரசனையும் விடுத்து வேறு எதை யோசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை பீராய்ந்து வந்து மதக் கோர்ட்டின் விசாரணைக் கூண்டுக்குள் நிப்பாட்டும் ஆற்றல் இசுலாத்திற்கு இல்லை. அதற்காகத்தான் வஹாபிய தடிக்கொம்பை வைத்திருக்கிறார்கள்.
இசுலாத்தால் இயலாதது எல்லாவற்றையும் வஹாபிய வெறி சாதிக்கும். ஏனெனில், மத நீதிமன்றத்தில் குருமார்கள் சொல்வது தான் சட்டம். எந்த அடிப்படையும் இன்றி சர்வதேச மனித உரிமை இயக்கங்களின் அழுத்தங்களைக் காலில் போட்டு மிதித்து விட்டு அப்பாவிப் பெண் ரிசானா நபீக்கின் தலையை ஊரே பார்க்க அறுத்தெறிந்த வாட்களுக்கும் அறிவும் இல்லை அதை இயக்கும் அதிகாரத்திற்கு மனசாட்சியும் இல்லை.
மெல்லிய சலசலப்பைக் கூட இசுலாமியத்துக்கே ஏற்பட்ட ஆபத்தாக அறிவித்து நாத்திகர்கள் என்று முத்திரை குத்தி எத்தனை பேரை வேண்டுமானாலும் கொன்று குவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி நடந்தால் அதற்கும் கூட்டம் போட்டு சவுதி அரச பரம்பரைக்கு வக்காலத்து வாங்கி சொம்படித்து நியாயப்படுத்த உலகெங்கும் வஹாபியர்கள் உண்டு. நம்மூரிலும் கூட ’மண்ணடி மார்க்க அறிஞர்கள்’ படை ஒன்று உள்ளதை நீங்களே அறிவீர்கள் தானே.
வஹாபியத்தை வாயில் திணித்து, தொண்டைக்குழிக்குள் கம்பால் அடித்து இறக்க முயலும் ஒரு தேசத்தில் நாத்திகர்களாகவும் அதன் வழி அதிகாரத்திற்கு சவால் விடுபவர்களாகவும் இருப்பது அசாதாரணமானது. மதப் பிற்போக்குவாதத்தை எதிர்த்து நீண்டதொரு பயணத்தைத் துவங்கியுள்ள சவுதி நாத்திகர்களின் பயணம் அதிகாரத்திற்கு எதிரானதாக வெகு விரைவில் மிளிர வேண்டும்.
தங்கள் நம்பிக்கைகளுக்கான தனிப்பட்ட சுதந்திரம் என்பதும் சமூகத்திற்கான பொதுவான சுதந்திரம் என்பதும் வேறு வேறு அல்ல என்பதை அவர்கள் தங்கள் சொந்த அனுபவத்திலேயே உணர்வார்கள். அப்படி நடக்கும் போது ஜனநாயகத்துக்கான கோரிக்கை வலுப்பெற்று சவுதி அரச வம்சத்தினரை பாலைவனப் புழுதியில் விசிறியடிக்கும் நாள் வந்தே தீரும். அதைச் சாதிக்கப் போகும் அமிலத்தில் பூத்த அந்த மலர்களை நாம் வாழ்த்துவோம்.
– தமிழரசன்
- Saudi Arabia: New Terrorism Regulations Assault Rights
- Saudi Arabia: Terrorism Law Tramples on Rights
- Islam, Saudi and apostasy
- ‘Fighting Reality’: Life as an atheist in Saudi Arabia
- Interview with a Saudi atheist
- Saudi Arabia declares all atheists are terrorists in new law to crack down on political dissidents
- Supporting Islam’s apostates
- Enlightening My Father about the Real Islam and the Fatal Consequence