Saturday, April 19, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்தோழர் சுனிதிகுமார் கோஷ்-க்கு வீர வணக்கம் !

தோழர் சுனிதிகுமார் கோஷ்-க்கு வீர வணக்கம் !

-

sunthi kumar ghoshம்யூனிசப் புரட்சியாளரும், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) யின் நிறுவனர்களில் ஒருவருமான தோழர் சுனிதிகுமார் கோஷ் கடந்த மே 11 அன்று தனது 96-வது வயதில் காலமாகி விட்டார்.  வாழ்நாள் முழுவதும் மார்க்சிய-லெனினியத்தை தனது உயிர்மூச்சாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர் அவர்.

வங்கத்தின் தெபகா குத்தகை விவசாயிகள் எழுச்சிக் காலத்தில் (1946-47) கம்யூனிச இயக்கத்தின் ஆதரவாளராக இருந்த தோழர் கோஷ், கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து ஊக்கமுடன் செயல்பட்டார். இருப்பினும், அக்கட்சியின் புரட்டல்வாதப் பாதையால் அதிருப்தியுற்று 1956-இல் அதிலிருந்து விலகி அரசியலிருந்தே ஒதுங்கியிருந்தார். இந்திய – சீனப் போரைத் தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பிளவுபட்டு சி.பி.எம். கட்சி உருவானபோது அதில் இணைந்து செயல்பட்டார்.

பின்னர் அக்கட்சியும் திருத்தல்வாதப் பாதையில் சென்று துரோகமிழைக்கத் தொடங்கியதும் 1966-ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகிய அவர், 1967-ஆம் ஆண்டு வசந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்த நக்சல்பாரி எழுச்சியை பேருற்சாகத்துடன் ஆதரித்து கம்யூனிசப் புரட்சியாளர்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அகில இந்திய பொதுவுடைமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டி (AICCCR) -இன் உறுப்பினராகச் செயல்பட்ட அவர், 1969-இல் உருவான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-இன் மத்திய கமிட்டி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

சுனிதி குமார் கோஷ் எழுதிய நூல்களில் ஒன்று
சுனிதி குமார் கோஷ் எழுதிய நூல்களில் ஒன்று

கட்சியின் பொதுச்செயலாளரான சாருமஜூம்தார் மறைவுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியானது பல குழுக்களாகப் பிளவுபட்ட நிலையில் 1974- இல் உருவான மத்திய அமைப்புக் கமிட்டியின் (சி.ஓ.சி. சி.பி.ஐ. எம்-எல்.) அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக அவர் இயங்கினார். 1977-இல் அக்குழு கலைக்கப்பட்ட பின்னர், இந்தியக் கம்யூனிசப் புரட்சி இயக்கத்தின் வரலாற்றை ஆவணங்களுடன் தொகுத்தளிக்கும் மிக முக்கியமான பணியை மேற்கொண்டார். அகில இந்திய பொதுவுடைமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டியாலும், பின்னர் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியாலும் வெளியிடப்பட்ட ”லிபரேஷன்” இதழில் 1967 முதல் 1972 வரையிலான ஆவணங்களின் தொகுப்பு அவரது மேற்பார்வையில் 1992 மற்றும் 1993-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தது.

இது மட்டுமின்றி, ”இந்தியப் பெரு முதலாளி வர்க்கம் – தோற்றம், வளர்ச்சி, பண்புகள்” என்ற இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிய விரிவான நூலை 1985-இல் எழுதினார். இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளே என்பதை ஆதாரங்களுடன் நிறுவினார். ”இந்தியாவின் தேசிய இனச் சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்”, ”இந்திய சீனப் போர் – இமாலய சாகசம்”, ”நக்சல்பாரி: முன்பும் பின்பும் – நினைவுகளும் மதிப்பீடும்”, ”இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (இரண்டு தொகுதிகள்)”, ”ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப் பிடியில் இந்திய வேளாண்மை”,  ”துயரம் தோய்ந்த வங்கப் பிரிவினை”  – ஆகிய மிக முக்கியமான நூல்களை அவர் எழுதினார். அவரது படைப்புகளும் கட்டுரைகளும் இந்திய மற்றும் வெளிநாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஏடுகளில் வெளிவந்துள்ளன.

”எனக்கு உணவும் உறைவிடமும் அளித்துப் பாதுகாத்து எனது லட்சியத்திற்குத் துணை நின்ற எனது தோழர்களுக்கு நான் பெரிதும் கடன்பட்டுள்ளேன். அது என்னால் திருப்பித் தர முடியாத கடன்” என்று அடக்குமுறைக் காலத்தில் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்த தோழர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் தான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார். புரட்சிகர குழுக்களுடன் தொடர்பு கொண்டு இயங்கியதோடு, அடக்குமுறைகளையும் பல்வேறு இடர்பாடுகளையும் இழப்புகளையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு, மார்க்சிய- லெனினியத்தைப் பற்றிப் பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தோழர் சுனிதிகுமார் கோஷ்-க்கு எமது வீரவணக்கம்!

சுனிதி குமார் கோஷுக்கு வீரவணக்கம்!ஆசிரியர் குழு

______________________________

புதிய ஜனநாயகம், ஜூன் 2014

______________________________