Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கும்மிடிப்பூண்டி CRP, டால்மியாக்களை எதிர்த்து புஜதொமு சமர் !

கும்மிடிப்பூண்டி CRP, டால்மியாக்களை எதிர்த்து புஜதொமு சமர் !

-

கும்மிடிப்பூண்டி CRP, டால்மியா ஆலைகளின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!- கண்டனக்கூட்டம்!

  • கும்மிடிப்பூண்டி CRP மற்றும் டால்மியா ஆலைகளில் தலைவிரித்தாடுகிறது முதலாளித்துவ பயங்கரவாதம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழிக்க தேவை ’தொழிலாளி வர்க்க ஒற்றுமை’ எனும் ஆயுதம்!

என்ற தலைப்பில் திருவள்ளுர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 11.06.14 அன்று மாலை 6 மணிக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் கண்டனக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் K.M. விகந்தர் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், முதலாளித்துவ பயங்கரவாதம் என்பது தொழிலாளிகளின் பிரச்சனை என்று நினைத்து கொண்டிருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணர்த்தும் வகையில்  அது ஒவ்வொரு வர்க்கத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதை பதியவைத்தார்.

அடுத்ததாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

“இந்த கூட்டத்தை சென்ற மாதம் 21-ம் தேதி நடத்த வேண்டுமென அனுமதி கோரியிருந்தோம். ஆனால் பிரதமர் பதவியேற்பு விழா என்று சொல்லி தட்டிக்கழித்தனர். இம்மாதம் 11-ம் தேதி நடத்த அனுமதி கோரிய போது தங்களால் அனுமதி வழங்க முடியாது, மாவட்ட கண்காணிப்பாளரிடம் சென்று அனுமதி பெற்று வாருங்கள் என்றனர். ஆலையின் நடவடிக்கைகளை கண்டித்து ஒரு கண்டனக் கூட்டம் நடத்தவே மாவட்ட கண்காணிப்பாளரின் அனுமதி பெற வேண்டுமெனில், தொழிலாளிகளை டிஸ்மிஸ், சஸ்பெண்டு செய்து, அவர்களை வாழவிடாமல் சித்ரவதை செய்யும் CRP, டால்மியா முதலாளிகளுக்கு ஆதரவாக போலிஸ் முன்னைக் காட்டிலும் தீவிரமாக செயல்படுவதை உணர்ந்து கொண்டபின் மாவட்ட கண்காணிப்பாளரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் ஒரே நேரத்தில் மனு அளித்து, அதை பத்திரிக்கையிலும் வெளியிடச் செய்தோம்.

கண்டனக் கூட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கும் இந்த கேடுகெட்ட ஜனநாயகத்தை, நாம் அம்பலப்படுத்தி விடக்கூடும் என்றஞ்சிய போலிசு வேறு வழியின்றி 10-ம் தேதி இரவு 7 மணிக்கு அனுமதி வழங்கியது. இதுநாள் வரை அனுமதி மறுத்ததற்கான காரணத்தை மாவட்ட கண்காணிப்பாளரோ, துணை கண்கானிப்பாளரோ, காவல் துறை ஆய்வாளரோ கூறவில்லை.

ஏன் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது? அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணம் ஏன் சொல்லப்படவில்லை?

ஏனென்றால், அனுமதி கொடுத்தால் முதலாளிகளும், அவர்களின் அடிவருடிகளும் போட்டுக்கொண்டிருக்கும் ஜனநாயக முகமூடியை புஜதொமு கிழித்துவிடும் என்ற அச்சம் தான் காரணம்” என்று தோழர் சுதேஷ்குமார் போலிசை அம்பலப்படுத்தி பேசினார்.

“தமிழகத்தில் 2012-ம் ஆண்டில் புஜதொமு சங்கம் தான் அதிகப்படியான ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆலையை மூடுவதோ, உற்பத்தியை முடக்குவதோ எங்களின் நோக்கமல்ல, பிரச்சனைகளை பேசித்தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் முதலாளிகள் புஜதொமுவை முடக்கிவிட வேண்டுமென்றும் இல்லாமல் செய்து விட வேண்டுமென்றும் பகல் கனவு காண்கின்றனர். அது சாத்தியமில்லை. SRF கும்மிடிப்பூண்டியில் 2005-ல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தோழர் விகந்தர் இன்று மாவட்ட தலைவராகியுள்ளார். நீங்கள் டிஸ்மிஸ் செய்து, சஸ்பென்ட் செய்து புஜதொமு-வை இல்லாமல் செய்து விடலாமென கருதுவது பலிக்காது” என்று முதலாளிகளை எள்ளி நகையாடினார்.

“கும்மிடிப்பூண்டியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திலும், இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றவே இந்து மதவெறி பாசிஸ்டு நரேந்திர மோடி பிரதமராக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களை நீக்குவதும் அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்குவதும் முதலாளிகளின் நலன்களுக்காகவே தான். ஆக இந்த ஒட்டு மொத்த முதலாளித்துவ சித்தாந்தத்தையும் புவியில் இருந்து துடைத்தெறிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே மாற்று” என்று பதிய வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட பிரச்சாரக் குழு சார்பாக புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக ”புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, அது போகும் இடமெல்லாம் அதிருது கம்பனி” என்ற பாடல் உழைக்கும் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது.

இணைப்பு சங்க தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக்கூட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் உறுப்பினர் தோழர் சதீஷ் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.

கண்டனக் கூட்டம்

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்-9444213318