Thursday, April 17, 2025
முகப்புசெய்திபேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய் - ஆர்ப்பாட்டம்

பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய் – ஆர்ப்பாட்டம்

-

“மனித உரிமைப் போராளி டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்!” என்ற முழக்கத்தின் கீழ் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் 18.06.2014 அன்று மதியம் 1.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளைச் செயலாளர் மில்ட்டன் தலைமை தாங்கினார். மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு கண்டன உரை நிகழ்த்தினார்.

தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளின் விளைவாக நாட்டில் உள்ள இயற்கை வளங்களெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு தாரை வார்த்தனர், அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசுகள். இந்த இயற்கைவள தாரை வார்ப்பால் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் தண்டேவாடா (மத்திய இந்தியா) காட்டுப்பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் தங்கள் மண்ணை மீட்பதற்கான கடுமையான போரட்டத்தை நடத்தி வருகின்றனர். சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்டு பல்வேறு அரசு படைகளை வைத்து சுற்றிவளைத்து பழங்குடிகளையும், அவர்களுக்கு தோள்கொடுக்கும் மாவோஸ்ட்டுகளையும் ’பசுமை வேட்டை’ என்ற பெயரில் ஒடுக்கி, அந்த இயற்கை வளமிக்க காடு, மலைகளை வேதாந்தா உள்ளிட்ட கொள்ளைக்கார நிறுவனங்களுக்கு தாரை வார்க்க துடிக்கிறது மத்திய அரசு.

பழங்குடி மக்களிடையே உள்ள கருங்காலிகளை வைத்து சல்வார் ஜூடும் என்ற குண்டர் படையை உருவாக்கி போராட்டத்தில் முன்னணியாக இருக்கும் பழங்குடி மக்களை கொல்வது, கிராமங்களை கொளுத்தி ஊரை விட்டே துரத்துவது எனவும், போலி மோதல் முதற்கொண்டு பல்வேறு வகையில் அம்மக்களை வதைத்து வருகிறது அரசு. இது போன்ற ஒடுக்குமுறையையெல்லாம் காடுகளிலும், மலையகளிலும் வைத்து செய்தால் யாருக்கும் தெரியாது என இறுமாந்து இருந்த அரசிற்கு டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபா பெரிய நெருக்கடியாக அமைந்தார்.அதனாலேயே அவரை அக்கிரமமாக கைது செய்திருக்கிறார்கள்.  மத்திய இந்தியாவில் நடக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை, பசுமை வேட்டை என்ற பெயரில் உள்நாட்டுப் போர் மற்றும் இது தொடர்பான அரசின் பல்வேறு மனித உரிமை மீறல்களை தலைநகர் டெல்லியிலேயே அம்பலப்படுத்தப்படுவதை பொறுக்க முடியாததின் விளைவே இக்கைது நடவடிக்கை.

பேராசிரியர் சாய்பாபா தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பை சார்ந்தவர் என்ற ஒற்றை குற்றச்சாட்டில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவருடைய கைதை மனித உரிமை ஆர்வலர்கள் உலகம் முழுவதும் கண்டித்துள்ளனர். FIFA கால்பந்து போதையையும் மீறி பிரேசிலில் கூட இக்கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் முழக்கம்

ஆள்தூக்கி கருப்பு சட்டத்தில்
சட்டவிரோதமாய் கைது செய்த
பேராசிரியர் சாய்பாபாவை
விடுதலை செய்! விடுதலை செய்!!

முறியடிப்போம்! முறியடிப்போம்!!
மனித உரிமை போராளிகளை
ஒடுக்க நினைக்கும் நடவடிக்கையை
முறியடிப்போம்! முறியடிப்போம்!!

பேராசிரியர் சாய்பாபா மீது
என்ன வழக்கு ? ஏன் கைது?
காரணம் தெரிவிக்கவில்லை
உச்ச நீதி மன்றத்தின்
டி.கே பாசு வழிகாட்டலை
மயிரளவுக்கும் மதிக்கவில்லை
மராட்டிய போலிசு!

சீருடையணிந்த ரவுடிகளாக
மராட்டிய போலிஸின்
சட்டவிரோத நடவடிக்கை
கைதல்ல! ஆள்கடத்தல்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!
நாட்டு வளத்தை கொள்ளையிடும்
கொள்கைகளுக்கு எதிராக
கொள்ளைக் கெதிராக
உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக
போராட நினைப்பவர்களுக்கு / விடப்பட்ட எச்சரிக்கை!!

நேற்று மருத்துவர் பினாயக் சென்
இன்று பேராசிரியர் சாய்பாபா
பன்னாட்டு கொள்ளைக்கு
எதிராக போராடினால்
கைது பெயரில் ஆள்கடத்தல்!

ஒடுக்காதே! ஒடுக்காதே!!
பன்னாட்டு நிறுவனங்களின்
இயற்கை வள கொள்ளைக்கு
எதிராக போராடும்
பழங்குடி மக்களையும்
மனித உரிமைப் போராளிகளையும்
ஒடுக்காதே! ஒடுக்காதே!!

போரை நிறுத்து! போரை நிறுத்து!!
பசுமை வேட்டை என்ற பெயரில்
உள்நாட்டு மக்கள் மீது
பழங்குடி மக்களின்
இரத்தம் குடிக்கும் போரை நிறுத்து!

பழங்குடி மக்களை ஒடுக்குவதை
எதிர்த்துப் போராடியதும்
பன்னாட்டு நிறுவனங்களின்
தேசவிரோத பகற்கொள்ளையை
துணிவுடன் எதிர்த்ததும்தான்
பினாயக் சென்னும் சாய்பாபாவும்
செய்திட்ட குற்றமாம்.

பன்னாட்டு கொள்ளைக்கு
காவலிருக்கும் துரோகிகள்தான்
காங்கிரஸ் பிஜேபி கட்சிகள்
இவர்கள்தான் நாடாள்பவர்கள்!
வளர்ச்சியின் நாயகர்கள்!

பன்னாட்டு கொள்ளையை
எதிர்த்து நின்று போராடினால்
அவர்கள் பெயர் தீவிரவாதகள்!
கனிமவளம் எல்லாத்தையும்
பன்னாட்டு நிறுவனங்கள்
கொள்ளையடிக்க, ஏற்றுமதிசெய்ய
தடையில்லா சுதந்திரம்.

தங்கள் மண்ணை
தங்கள் மலையை
பாதுகாக்க போராடினால்
துப்பாக்கியும், குண்டாந்தடியும்,
தீவிரவாதி பட்டமும்
பரிசாக கொடுக்கிறான்!

உ.பா(UAPA), தடா, பொடா
தேசத் துரோகம், என்.எஸ்.ஏ
எத்தனை எத்தனை அவதாரம்
அடக்குமுறை சட்டங்கள்!

இயற்கை வளங்களை கொள்ளையிடும்
பன்னாட்டு கொள்ளைக்கெதிராய்
சாய்பாபாவின் போராட்டத்தில்
தேசபக்தி போராட்டத்தில்
கைகோர்ப்போம் கைகோர்ப்போம்
சாய்பாபாவின் விடுதலைக்கு
இறுதிவரை போராடுவோம்.

துண்டறிக்கை

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க