திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் கடந்த புதன் கிழமை (ஜூன் 18, 2014) அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்துவிட்டு, குமாரின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்ற இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவினர், இதற்குத்தான் காத்திருந்தோம் என்பதாக, மதவெறியுடன் கோஷங்களை எழுப்பியும், திறந்த மற்றும் பூட்டியிருந்த கடைகள் மீது தாக்குதலை நடத்தியும் சென்றுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகில் சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ்கள் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் கபாலி என்ற பஸ் டிரைவரும், அசோக்குமார் என்ற போலீஸ்காரரும் காயம் அடைந்தனர். கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், பாடி, கொரட்டூர் வழியாக சென்றது. அப்போதும் ஆங்காங்கே பஸ்கள் மீதும் வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன.
இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலில் 9 அரசு பஸ்களும், 25 மோட்டார் சைக்கிள்களும், 10 கார்களும் உடைக்கப்பட்டன. ஒருசில இடங்களில் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுமட்டுமின்றி சென்னை அமைந்தகரையில் உள்ள கிறித்தவ தேவாலயம் ஒன்றை தாக்கியதோடு, தேவாலயத்தின் போதகர், அவரது வாகனம் மற்றும் அங்குள்ள பெண்களையும் பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. மத்திய அரசுடன் தொடர்புடைய இந்த மதவெறியர்கள் மீது காவல்துறை முன்னெச்செரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காவிக் கும்பலின்வெறியாட்டத்துக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளது.

சுரேஷ்குமாரின் சொந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்து முன்னணி ரவுடி கும்பல் கல்வீசி தாக்கி பல பேருந்துகளை சேதப்படுத்தியது.
கோத்ரா ரயில் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அகமதாபாத் வரை ஊர்வலமாக கொண்டு வர அனுமதித்த மோடியின் அரசைப் போல சுரேஷ்குமாரின் உடலை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டிலிருந்து திங்கள் சந்தை வரையிலும் ஊர்வலமாக கொண்டு போக அனுமதித்தது மாநில அரசு. இந்த அனுமதிகள் இந்துமதவெறியர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஊக்குவிப்பு என்பதால் அவர்கள் எல்லா இடத்திலும் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். சுரேஷ் குமார் ஊர்வலத்திலும் இந்து முன்னணியினர் முசுலீம் மக்களுக்கு எதிரான கோஷங்களை ஊளையிட்டவாறே சென்றனர்.
குமரி மாவட்டத்தில், வில்லுக்குறி எனும் இடத்துக்கு அருகே வரும் போது, தக்கலையிலிருந்து நாகர்கோவிலுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த பைசல் என்ற அப்பாவி இளைஞரை இந்து முன்னணி கும்பல் தாக்கியது. அவரை கேவலமாக திட்டியதோடு , கொலைவெறியோடு உருட்டுக் கட்டை மற்றும் கற்களால் அவரது மணிக்கட்டு, முகம், தலை மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையாகத் தாக்கினர்.
அங்கு பணியில் இருந்த கன்னியாகுமரி ஆய்வாளர் முத்துராஜ் தமது ஜீப்பில் பைசலை ஏற்றும் போது, இந்துமுன்னணியினர் காவல் ஆய்வாளரையும் கேவலமான முறையில் திட்டி அவரையும் அவரது ஜீப்பையும் தாக்கினர். படுகாயம் அடைந்த பைசல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கம் போல இந்துமதவெறியர்கள் இதுவரை கொல்லப்பட்ட சங்க பரிவார நபர்களின் பட்டியலை போட்டு மதவெறியைக் கிளப்பி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இந்த நபர்களில் பலர், சொத்து பிரச்சினை உள்ளிட் பல்வேறு சொந்த விவகாரங்களுக்காக கொல்லப்பட்டவர்கள் என்று போலிசே விரிவாக அறிக்கை கொடுத்திருந்தது. ஆனாலும் கோயாபல்ஸ்கள், பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மை போல சித்தரிக்கும் கயமையில் கை தேர்ந்தவர்கள் அல்லவா?
சுரேஷ் குமார் எதற்கு, யாரால் கொலை செய்யப்பட்டார் எனும் முதல் தகவல்கள் கூட இன்னமும் வெளிவராத நிலையில் இவர்களே முசுலீம் மக்களை குறி வைத்து நடத்தும் விசமப் பிரச்சாரத்தை தமிழக அரசு கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மோடியின் அன்புச் சகோதரி ஜெயலலிதாவும் சரி, அவரை நம்ம முதல்வர் என்று கருதும் இந்து இயக்கங்களுக்கும் சரி கண்டிப்பாக ஒரு ஒத்த அலைவரிசை உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இந்துமுன்னணி மற்றும் சங்க வானர இயக்கங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று நாம் அனைவரும் போராட வேண்டும். இந்துமதவெறியரை தடை செய்யும் போது அதன் எதிர்விளைவான முசுலீம்களிடையே செல்வாக்கில்லாமல் இருக்கும் தீவிரவாதக் குழுக்கள் மறைந்து போகும். இதன்றி இந்தியாவிலோ இல்லை தமிழகத்திலோ நிம்மதியான சமூக வாழ்வு கிடையாது. மோடி ஆட்சிக்கு வந்திருப்பது நமது போராட்டத்தை அதிகப்படுத்தும் அவசியத்தையும் கோருகிறது.
மேலும் படிக்க
- இந்து முன்னணி தலைவர் படுகொலை: வன்முறையில் ஈடுபட்ட 13 பேர் கைது
- இந்து முன்னணியினர் வன்முறை – வாலிபர் நிலை கவலைக்கிடம்
சங்க பரிவார அமைப்புகள் இந்து மதவெறியை தூண்டி விட்டு, கலவரங்களை நடத்தும் தமது பாசிச திட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கின்றன. இதை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் சென்னை நகரில் சுவரொட்டி பிரச்சாரம் நடத்தப்பட்டது.
உழைக்கும் மக்களே
இந்து முன்னணி செய்தது என்ன?
கொலைக்கு காரணமானவர்களை எதிர்க்காமல்
KMC முதல் அமைந்தகரை வரை
அரசு பேருந்துகள், சர்ச், மசூதி, பொதுமக்கள் மீது
கல்வீசி தாக்கி வன்முறை வெறியாட்டம் போட்டனர்!
“இந்துக்கள்” என்ற பெயரில் தமிழகத்தை கலவர பூமியாக
மாற்றும் இந்த பயங்கரவாத கும்பலை முறியடிக்க
உழைக்கும் மக்களாக களமிறங்குவதே தீர்வு
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை