Thursday, April 17, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?

கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?

-

கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?

(2006 உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை ஒட்டி, புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரை)

FIFA (Federation de international football associations) என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனம் ஸ்விட்சர்லாந்தில் இலாப நோக்கமற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த சுவிட்சர்லாந்து? அதிகார வர்க்கமும், முதலாளிகளும் லஞ்சப்பணம், கள்ளப்பணம், கறுப்புப்பணம் இன்னபிற ஊழல் பணத்தை இரகசியமாக சேமிப்பதற்கு நம்பிக்கையான வங்கிகளைக் கொண்ட அந்த சுவிட்சர்லாந்து.

ஃபிஃபா

உலகக்கோப்பை மற்றும் இன்னபிற சர்வதேச போட்டிகளை நடத்தும் ஃபிஃபா ஒரு வெறும் விளையாட்டுச் சங்கம் மட்டுமல்ல, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பெரும் வர்த்தக நிறுவனமும் ஆகும். அதில் மோசடி செய்த பணத்தை காப்பாற்றுவதற்கென்றே சுவிட்சர்லாந்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் இந்தப் பதிவினால் ஃபிஃபா வெறும் 4.5% வர்த்தக வரி செலுத்தினாலே போதும். ஃபிஃபாவின் தலைவராக இருக்கும் ஸ்லெப்பிளெட்டர் இவரும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்தான். கடந்த எட்டாண்டுகளாக தலைமைப் பதவியில் இருக்கும் இவர் ஃபிஃபாவை மாபெரும் பணம் சுரக்கும் ஊற்றாக மாற்றியிருக்கிறார். 1930-ம் ஆண்டு முதல் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி வருகிறது.

1906-ம் ஆண்டு ஃபிஃபாவின் வருமானம் வெறும் 20,550 ரூபாய் மட்டுமே. ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மைதானம் முதலான கட்டுமானச் செலவுகளைப் பார்த்துக் கொள்கின்றன. பன்னாட்டு – உள்நாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் தொகையாக பல்லாயிரம் கோடிகளைத் தருகின்றன. இது போக போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கான உரிமத் தொகையாக பல்லாயிரம் கோடி ரூபாய் வருகின்றது.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் எவ்வித முதலீடோ, செலவோ இன்றி ஃபிஃபா கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றது. 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஃபிஃபாவின் நிகர இலாபம் 1,300 கோடி ரூபாயாகும்.

2006-ல் செலவு போக 4,290 கோடி ரூபாய் வருவாய் வருமென மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இத்தொகையில் ஏழை நாடுகளின் சிறு நகரங்களில் பத்து இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் உருவாக்குவதாக இருந்தால் 42,900 நகரங்களில் எளிய முறையில் மைதானத்தைக் கட்டமுடியும்.

ஆனால் ஃபிஃபாவோ கால்பந்தை வளர்ப்பதற்குப் பதில் காசை அள்ளுவதிலும் மோசடி செய்வதிலும் குறியாக இருக்கிறது. அப்படி சமீபத்தில் ஒரு ஊழல் விவகாரம் அம்பலமாயிருக்கிறது. ஐ.சி.எல். எனப்படும் ஃபிஃபாவின் பினாமி நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறது. இதற்கு ஃபிஃபாவின் கால்பந்துப் போட்டிகளினால் வரும் வர்த்தக நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. கட்டணச் செலவாக 1,500 கோடி ரூபாயும் தரப்பட்டது. இறுதியில் ஐ.சி.எல் திவால் என அறிவிக்கப்பட அத்தனை ரூபாயும் சுருட்டப்பட்டது. இதில் ஃபிஃபாவின் அதிகார வர்க்கம் மோசடி செய்துள்ளதை பி.பி.சி. தொலைக்காட்சியின் பனோரமா நிகழ்ச்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. ஃபிஃபாவின் தலைவரோ இதை ஒரு அறிக்கையில் பொய்யென மறுத்து விட்டு தன் வேலையைச் செவ்வனே செய்து வருகிறார்.

கோல் போடாமலேயே வென்றது அடிடாஸ்

ர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தைத் தனது விளம்பரக் கம்பெனியாகவே மாற்றி விட்டது அடிடாஸ் என்கிறார்கள். ஷூ மற்றும் விளையாட்டு உடை உபகரணங்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம்தான் அடிடாஸ். இந்நிறுவனம் இந்தப் போட்டிக்கென்றே ஜோஸ்+10 என்ற விளம்பரத்தைத் தயாரித்திருக்கிறது.

இதில் மாநகரச் சேரியின் தெருவொன்றில் ஜோஸூம் அவனது நண்பர்களும் கால்பந்து விளையாடுகிறார்கள். தத்தமது அணிக்கு உலகின் பிரபலமான கால்பந்து வீரர்களை அழைக்கிறார்கள். வீரர்களும் வந்து ஆடுகிறார்கள். ஜோஸின் தாயார் “விளையாடியது போதும் வீட்டுக்கு வா” என்று அவனை சத்தம் போடுகிறாள். “முடியாதது ஒன்றுமில்லை” என்ற தத்துவ விளக்கத்துடன் முடியும் இந்த விளம்பரம் இந்தி உட்பட பத்து உலகமொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

விளம்பர கால்பந்து

அர்ஜென்டினா, ஜெர்மனி உட்பட முக்கியமான ஆறு அணிகளின் உடை, உபகரணங்களையும் அடிடாஸ் ஸ்பான்சர் செய்திருக்கிறது. இதே போன்று நைக் நிறுவனம் 8 அணிகளுக்கும், பூமா நிறுவனம் 12 அணிகளுக்கும் உபயம் அளித்திருக்கின்றன. இதில் கேலிக் கூத்து என்னவென்றால் போட்டி நடுவர்களின் உடையைக்கூட அடிடாஸ்தான் அளித்திருக்கிறது.

ஆக உலகப்போட்டி ஓடுவது இந்தச் செருப்புக் கம்பெனிகளின் கைங்கர்யம் என்றாகி விட்டது. மேலும் அடிடாஸ் நிறுவனம் இந்தப் போட்டியை வைத்து ஒரு கோடி கால்பந்துகள், 10 இலட்சம் ஜோடி பிரிடேட்டர் ஷூக்கள், 5 இலட்சம் ஜெர்மன் அணிச்சட்டைகள் விற்பதற்கு இலக்கு தீர்மானித்திருக்கிறது. அவ்வகையில் சென்ற ஆண்டை விட 37% நிகர லாபம் அதிகரிக்குமாம். மொத்தத்தில் அடிடாஸின் கால்பந்து தொடர்பான விற்பனை இவ்வாண்டு மட்டும் 6,600 கோடியைத் தொடும். இதே தொகையில் ஏழை நாடுகளின் பள்ளிக்கூடங்களுக்கு தலா 10,000 ரூபாய் மதிப்பிலான குறைந்தபட்ச விளையாட்டு உபகரணங்கள் அளிப்பதாக வைத்துக் கொண்டால் சுமார் 66 இலட்சம் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கலாம்.

கால்பந்து: நவீன கிளாடியேட்டருக்கு பல்லாயிரம் கோடி கேளிக்கைச் செலவு

ண்டைய ரோமாபுரி ஆட்சியில் மக்களை கேளிக்கையில் மூழ்க வைக்க கிளாடியேட்டர் எனப்படும் அடிமைகளை சாகும் வரை சண்டையிட வைப்பார்கள். வருடம் முழுவதும் நடக்கும் இந்தப் போட்டிகளுக்காக நகரின் மத்தியில் பிரம்மாண்டமான மைதானத்தை பெருஞ்செலவு செய்து கட்டுவார்கள். தற்போது கால்பந்து போட்டிகளும் ஏறக்குறைய அப்படி மாற்றப்பட்டு விட்டன.

உலகக் கோப்பை

2002-ல் ஜப்பானும் கொரியாவும் சேர்ந்து நடத்திய உலகக் கோப்பை மொத்த ஆட்டங்களையும் பார்த்த மக்களின் கூட்டுக் கணக்கு 3,000 கோடியாகும். இந்தப் போட்டிக்காக இரு நாடுகளும் மைதானங்கள் கட்டுவதற்காக மட்டும் 35,000 கோடி ரூபாயைச் செலவழித்தன. இதே தொகையை ஒரு இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிசைமாற்று வாரிய வீட்டைக் கட்டுவதாக இருந்தால் 35 இலட்சம் வீடுகளைக் கட்டலாம். அதாவது ஒன்றரை கோடி மக்களுக்கு வீடு கிடைக்கும். அல்லது சென்னை மாநகரைப் போன்று மூன்று மாநகரங்களைக் கட்டலாம்.

இவ்வாண்டு உலகக் கோப்பையை நடத்தும் ஜெர்மனி இதற்காக செலவழித்த தொகை 10,000 கோடி ரூபாயாகும். இதே தொகையில் ஐந்து வகுப்பறை கொண்ட ஒரு ஆரம்பப் பள்ளியை ஐந்து இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதாக இருந்தால் சுமார் இரண்டு இலட்சம் பள்ளிகளைக் கட்டலாம்.

இப்படி மைதானம் கட்டுவதற்காக பல்லாயிரம் கோடி செலவழிப்பதால் இந்தப் போட்டிகளை நடத்தும் நாடுகளுக்கு என்ன பயன் என்று கேட்கலாம். கட்டுமானத் தொழில், ஓட்டல், உணவக விடுதிகள், சுற்றுலா, விபச்சாரம், சிறுவர்த்தகம் என்று பல வழிகளில் இந்நாடுகளுக்கு வருமானம் வருகிறது.

ஜெர்மனியில் நடக்கும் போட்டியைக் காண மட்டும் சுமார் 30 இலட்சம் இரசிகர்கள் வந்து போவார்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்கள் போட்டி நடக்கும் ஒரு மாதத்திற்கு தினசரி 3,000 ரூபாய் செலவழித்தால் ஜெர்மனியின் இலாபம் என்னவென்று தெரியவரும்.

– இளநம்பி
புதிய கலாச்சாரம், ஜூலை – 2006

படங்கள் : நன்றி http://www.cartoonmovement.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க