செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர் மர்ம மரணம் – போராட்ட அறிக்கை
கடலூர் மாவட்டத்தில் கடந்த 140 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் செயின்ட் ஜோசப் கல்வி குழுமம் மாணவர்களை ஆடுமாடுகளைப் போல நடத்தும் கொத்தடிமைக் கூடாரமாக மாறிவருகிறது. இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்கள் சிலர் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்துள்ளனர். செங்காடு போஸ், மோழாண்டிக்குப்பம் மாணவன், எறையூர் ஆல்வின் ஜோஸ், குறிஞ்சிப்பாடி பரதன் இப்போது சிறுதொண்டமாதேவி ராம்குமார் என மாணவர்கள் மரணம் தொடர்பான எந்த வழக்கிலும் ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை. ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளும் சாதி அமைப்பினரும் கல்லூரி நிர்வாகத்தை பாதுகாக்க சமரசம் செய்து கொண்டு தமது பிழைப்பு வாதத்தை நிலைநிறுத்தி வருகின்றன.

மாணவர் ராம்குமார் இந்த கல்லூரியில் பி.எஸ்சி வேதியல் பிரிவு இறுதியாண்டு படித்து வந்தார் . கடந்த 9.07.14 அன்று இரவு பத்து மணி அளவில் மாணவர் திருட்டுத்தனமாக செல்போனில் பேசியதாகவும் அதனை கண்டுபிடித்ததும் வார்டனுக்கு பயந்து ஓடி மாடியிலிருந்து விழுந்து விட்டதாகவும் கூறி அந்த மாணவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். அங்கு மருத்துவர் சோதித்து இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
ஆனால் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்காமல் சிகிச்சை தருவதாக நாடகம் நடத்த வசதியாக உடலை கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்து விட்டார்கள். தொடர்ந்து ரமணா திரைப்படத்தில் வருவதை போல கல்லூரி நிர்வாகம் நாடகத்தை துவக்கியது.
ராம்குமாரை புதுச்சேரியில் உள்ள (PIMS) தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவசர சிகிச்சையில் இருப்பதாக பெற்றோர்களிடம் இரவு பன்னிரண்டு மணிக்கு தகவல் கூறியிருக்கிறார்கள். அங்கு வந்த பெற்றோர்களிடம் மருத்துவ செலவாக ரூ 30,000 வரை வாங்கி இருக்கிறார்கள்.
மறுநாள் 10.07.14 அன்று காலை 8.48 மணிக்கு இறந்து விட்டதாக கூறி 10.35 மணிக்கு பிணவறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். 11.00 மணி அளவில் கல்லூரி நிர்வாகம் ராம்குமார் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக செய்தி ஊடகத்துக்கு பொய் தகவல் கூறியிருக்கிறார்கள்.
இந்த கல்லூரியில் தொடர்ந்து மர்மமான முறையில் நடக்கும் விடுதி மாணவர்கள் மரணங்களை விசாரிக்கக் கோரி போராடிவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் செய்தியை கேள்விப்பட்டவுடன் மாணவர்கள் பிரதிநிதியாக கல்லூரிக்கு சென்றுள்ளனர்.
பெற்றோர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்கு பிறகே காவல் துறையினர் விடுதிக்கு மோப்பநாய்களுடன் வந்து சோதனை செய்தனர். அந்த போலீசு நாய் பல இடங்களுக்கு சென்று இறுதியில் ஒரு அறையின் வாசல் முன்பு படுத்துவிட்டது. அந்த அறை மூடி வைக்கப்பட்டிருந்தது. தடயவியல் நிபுணர்கள் பல மாதிரிகளை எடுத்தனர். மாடிப் படிகளில் ரத்தக் கறைகள் இருந்தன. அதையும் சேகரித்து கொண்டார்கள்.
இறுதியாக அந்த அறையை திறக்கக் கோரினோம், நிர்வாகம் மறுத்தது. ஆனால் ஊர் மக்கள் அந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் அந்த அறை முழுவதும் ரத்தக் கறைகள் இருந்தன. பிறகு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது.
புமாஇமு தோழர்கள் பெற்றோர்கள் சார்பாக வந்த ஊர்மக்களிடம் கல்லூரி நிர்வாகிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை மாணவரின் உடலை வாங்க வேண்டாம் என்று கூறினர். இந்த கல்லூரியில் நடக்கும் அக்கிரமங்களுக்கு இனியாவது முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
“கல்லூரி நிர்வாகத்தையும், விடுதி வார்டனையும் கைது செய்ய வேண்டும். கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்” என்று முழக்கத்தை வைத்து சுவரொட்டி தயாரிக்கப்பட்டு கடலூர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது.
அன்று இரவு இறந்த மாணவர் வசிக்கும் கிராமத்துக்கு ஏற்கனவே அந்த பள்ளி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களையும் அழைத்து சென்று, “மாணவர் மரணம் மர்மமான முறையில் நடந்துள்ளது, கொலையாகவும் இருக்கலாம், உண்மை என்ன விசாரணை மூலமே தெரியவரும்” என்று விளக்கி பேசப்பட்டது. கல்லூரி நிர்வாகி மீதும் விடுதி வார்டன் மீதும் உரிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் உடலை வாங்க வேண்டாம் என்று பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
தோழர்கள் எடுத்த புகைப்படங்களை கொடுத்து ஊரில் உள்ள மற்ற கட்சிக் காரர்களுடனும் உறவினர்களிடமும் பிரச்சாரம் செய்யப்பட்டது. உறவினர்களும் பெண்களும் பெண்கள், “நாளை கட்டாயம் வருகிறேம்” என்று கூறினார்கள். ஊரில் உள்ள பெரியோர்களும் உறவினர்களும் நாளை தேசிய நெடுஞசாலையில் சாலை மறியல் செய்யப்போவதாக முடிவு செய்தார்கள்.
“சாலை மறியல் நடத்துவதன் மூலம் மக்கள் ஆதரவை பெறமுடியாது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் . இல்லையன்றால் நம்மை தடியடி நடத்தி கலைத்து விடுவார்கள். நமக்கு நீதி கிடைக்காது” என்று மக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் “செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் ரொம்ப பெரியது. அவர்களுடன் மோதி எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார். “யாரோ ஒருவர் பேச்சை கேட்டு போகிறீர்கள்” என்று திசை திருப்பப் பார்த்தார். ஆனால் பெற்றோர்கள் அவரை பொருட்படுத்தவில்லை. மறுநாள் காலை மக்கள் அனைவரும், தோழர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் சென்றனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட ஊர் மக்களும் 60 கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- கல்லூரி மாணவன் ராம்குமார் மர்மமரணத்திற்கு காரணமாக இருந்த விடுதி வார்டன் டோம்னிக் சேவியர், மற்றும் கல்லூரி தாளாளர் பீட்டர் ராஜேந்திரம் இருவரையும் கைது செய்ய வேண்டும்.
- தொடர் மர்ம மரணங்களுக்கு முறையான ஒரு நீதி விசாரணை நடத்தவேண்டும்.
- இந்த கல்லூரியை அரசுடைமையாக்க வேண்டும்
என்று முழக்கமிட்டனர்.
காலை 11 மணிக்கு தொடக்கிய ஆர்ப்பாட்டம் ஒருமணி நேரத்துக்கு பிறகு முற்றுகையாக மாற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் இருவரும் வெளியூருக்கு சென்றுவிட்டதாக கூறியதை அடுத்து சம்பவம் நடந்த கல்லூரியை முற்றுகை இடுவது என்று மக்கள் புமாஇமு தோழர்களும் பேரணியாக சென்றனர். சிறிது தூரம் சென்ற பின்பு காவல் துறையினர் தடுப்பு அரண் வைத்து தடுக்க முயற்சித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
ஆனால் மக்கள் குறிப்பாக பெண்கள் அந்த அரணையும் உடைத்துக் கொண்டு தொடர்ந்து முன்னேறினர்.
கல்லூரி வளாகத்து நுழைவாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசை குவித்து மக்களை தடுத்து நிறுத்தினர். அந்த வாயில் முன்பாக அமர்ந்து தோழர்கள் எழுச்சிமிகு முழக்கமிட்டனர்.
இதை அறிந்த மாவட்ட துணை ஆட்சியர் சர்மிளா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதனை எதிர் பார்த்து காத்திருந்த ஓட்டு கட்சி பிரமுகர்கள் உடனே பேச்சு வார்த்தைக்கு சென்றுவிட்டனர். ஆனால் புமாஇமு தோழர்கள் பேச்சுவார்த்தையை மக்கள் மத்தியில் செய்யவேண்டும் என்று கூறினர்.
மாணவனின் பெற்றோர்கள் நம்முடன் அமர்ந்து முழக்கத்தை தொடர்ந்தனர். அதில் ஒரு பெண்மணி “பெற்றோர்களை பாக்காம மத்தவங்கள தனியா அழைச்சு பேரம் பேசரானுவ. இவ்வளவு நேரமா இங்க வெயில்ல உக்காந்து இருக்கோம். அந்த கலக்டர் ஏசியில உக்காந்துக்கிட்டு என்ன புடுங்குறான்” என்றும் ஆவேசமாக கூறினார். மாணவரின் பெற்றோரை பார்த்து, “உம் புள்ளை இறந்துட்டான். இதுக்குமேல இப்படி ஒரு அக்கிரமம், உன்புள்ளைக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் நடக்கக் கூடாது” என்று உழைக்கும் மக்களுக்குரிய போர்க்குணத்துடன் பேசினார்.
போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில் எஸ்.எஃப்.ஐ (சி.பி.எம் மாணவர் அமைப்பு) மாவட்ட செயலாளர் அரசன் இடையில் வந்து நிர்வாகத்தை கண்டித்து முழக்கம் போட்டுவிட்டு, நீதி விசாரணை வேண்டும் என்று கூறிவிட்டு, “மாணவர்களின் ஜனநாயக உரிமையை தடுக்கக் கூடாது. பிராக்டிக்கல், இன்டெர்னல் மார்க் என்று மாணவர்களை நிர்வாகம் மிரட்டக் கூடாது” என்றும், ” போலிசு மாணவர்களை படம் எடுப்பது ஜனநாயக மீறல், நிர்வாகத்தை தண்டிக்க வேண்டும்” என்று நைச்சியமாகபேசினார்.
அவரது உரைக்கு பிறகு மாணவர்கள் கலைய தொடங்கிவிட்டனர். பிறகு எஸ்.எஃப்.ஐ அரசன் நமது தோழர் ஒருவரிடம், “ஏன் இன்னும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள்” என கேட்டார். “விடுதி வார்டனை இன்னும் கைது செய்யவில்லை” என்று கூறியதும், வார்டனை கைது செய்துவிட்டார்கள், இடத்தை காலி செய்யுங்கள் என்று அவசரமாக பேசினார். “எஃப்.ஐ.ஆர் எங்கே” என்று கேட்டதும் பதில் பேசாமல் ஓடிவிட்டார். போராட்டத்தை சீர்குலைக்க, மாணவர்களை பிரிக்க முயற்சி செய்யும் போலிக் கம்யூனிஸ்டுகளின் உண்மை முகம் வெளுக்க துவங்கியது
போராட்டத்தில் உறுதியாக இருந்த பெண்கள் மற்றும் பெற்றோர்களை வைத்துக்கொண்டு வாடகை பாத்திரம் வைத்து சமைத்து சாப்பிட்டு விட்டு போராட்டத்தை தொடரலாம் என்று முடிவெடுத்தனர்.
இதற்காக பாத்திரத்தை ஏற்பாடு செய்தபோது ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட போலிசு கும்பல் பாத்திரத்தை எடுத்து வீசி எறிந்து புமாஇமு தோழர்களை கொலைவெறியோடு தடியால் அடித்து தாக்கி போலிசு வாகனத்தில் ஏற்றினர். பிறகு தடியடி நடத்தி அங்கு இருந்த மாணவர்களையும் ஊர்மக்களையும் கலைத்தனர். புமாஇமு தோழர்களை வேனில் ஏற்றி அடித்துக் கொண்டே சென்றனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் போலிசை காரி உமிழ்ந்தனர். போலிசின் அராஜகமான செயலை கண்டித்தனர். ஒரு வயதானவர், “போலிசு எந்த அளவுக்கு நிர்வாகத்துக்கு சார்பாக மாமா வேலை பார்க்கிறான்” என்று கூறினார்.
கல்வி தனியார் மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் புமாஇமு தோழர்களை ஒடுக்குவதற்கு தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த போலிசுக் கும்பலுக்கு இந்த போராட்டத்தின் மூலம் தோழர்களை சிறையில் அடைக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பெண் தோழர்கள் உட்பட ஆறு தோழர்கள் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பொய்வழக்கு போட்டுள்ளனர்.
மகனை இழந்த வயதான பெற்றோர் கைதான தோழர்கள் சென்ற பிறகும் உறுதியை இழக்கவில்லை. வெளியில் இருக்கும் தோழர்கள், வழக்கறிஞர்கள் உதவியுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை இறந்த மகனின் உடலை வாங்க போவதில்லை என்று உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதற்கு இடையே தோழர்களை கைது செய்து போலிசு நிலையத்தில் வைத்திருந்த போது தடியடியால் சிதறுண்ட ஊர் மக்கள் போலிஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டு, “தோழர்களை விடுதலை செய்” என்று முழக்கமிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி, நியாயம் கிடைக்க சமூக அக்கறையோடு போராடிய பு.மா.இ.மு தோழர்கள் நீதிபதியின் முன்பு நிறுத்தப்பட்ட போது, தோழர்கள் தங்கள் மீது போலிசு நடத்திய கொலைவெறி தாக்குதலை நீதிபதியிடம் விவரித்தனர். ஆனால், நீதிபதி காவல்துறை மீதே புகார் கூறுகிறீர்களா என்று எரிந்து விழுந்து காவல் துறை கேட்ட ‘நீதி’யை வழங்கினார். தாக்கப்பட்ட மாணவர்கள் கடலூர் மாவட்ட பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அங்கிருந்த மருத்துவர் தோழர்களை தொட்டும் பார்க்காமல், முகத்தையும் பார்க்காமல் சீட்டு எழுதிக் கொடுத்தார். பிறகு தோழர்களை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
அரசு, அரசாங்கம், போலிசு, நீதிமன்றம், ஊடகம், அரசியல் கட்சிகள் அனைவரும் தனியார் பள்ளி கல்லூரி கல்வி வியாபாரிகளின் மாஃபியாக்களின் அடியாள் படையாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்க வேண்டும், அரசு கல்வித் துறை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று போராடி வரும் பு.மா.இ.மு செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் பள்ளியில் சென்ற ஆண்டு நடந்த மர்மமரணத்தைக் கண்டித்து மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகிறது. எந்த அடக்குமுறைக்கும் புமாஇமு அஞ்சாமல், மாணவர்களை அணிதிரட்டி தொடர்ந்து போராடும்.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்.
மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில், செந்தில் குமார் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் தோழர்களை சந்தித்தனர். பு.மா.இ.மு. தோழர்கள் உண்ணாநிலை போராட்டத்தை தொடர்கின்றனர்.
திங்கள் (ஜூலை 14, 2014) அன்று மீண்டும் பார்க்க முயற்சித்த போது போராட்டத்தில் இருப்பவர்களை சந்திக்க அனுமதிக்க முடியாது என சிறை விதிகளை காரணம் காட்டி எழுத்து பூர்வமாக மறுத்து விட்டார் சிறை துறை கண்காணிப்பாளர்.
சிறையிலிருந்து தோழர்கள் எமக்கு அனுப்பிய மனுவை அனுப்புகிறோம்.
[மனுவை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]
தகவல் மனித உரிமை பாது காப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.