Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்சூழலியல்சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !

சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !

-

பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் தரகு முதலாளிகளுக்குத் தெளிவானதொரு வாக்குறுதியை வழங்கியிருந்தது. குழப்பங்களுக்கு இடமில்லாத வகையிலும், திட்டங்களுக்கான அனுமதியை விரைந்து வழங்கும் வகையிலும் சுற்றுச்சூழல் சட்டங்கள் வடிவமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “எனது அமைச்சகம் முட்டுக்கட்டை போடும் வேலையைச் செய்யாது” என்று இதனை மேலும் தெளிவுபடுத்தினார்.

பாரதீப் போஸ்கோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தென்கொரியாவைச் சேர்ந்த ஏகபோக நிறுவனமான போஸ்கோவின் இரும்பாலைத் திட்டத்திற்கு எதிராக ஒரிசாவின் பாரதீப் துறைமுக நகரில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கோரி யாரும் நேரில் வரத்தேவையில்லை என்றும், பெருந்திட்டங்களுக்கான அனுமதிக்கு “ஆன்லைன்” மூலம் விண்ணப்பித்தால் போதுமானது என்றும் அறிவித்தார் ஜவடேகர்.

“பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளை அகற்ற வேண்டும்” என்பது மோடியின் பத்துக் கட்டளைகளில் ஒன்றல்லவா? இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் தடைகளில் முக்கியமானது சுற்றுச்சூழல் அமைச்சகம் என்பது மோடியின் கருத்து.

மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அப்படி முட்டுக்கட்டை ஏதும் போட்டுவிடவில்லை. மாறாக, கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக, அரசே நிலப்பறிப்பில் இறங்கி விவசாயிகள், பழங்குடியினரை விரட்டியடித்தது. ஒவ்வொரு ‘வளர்ச்சி’த் திட்டத்தாலும் அழிவை நோக்கித் தள்ளப்பட்ட மக்கள் போராடினர். மக்களுடைய எதிர்ப்பின் காரணமாகத்தான், சில திட்டங்களுக்கு அனுமதி மறுக்கலவேண்டிய கட்டாயமும், பிரிட்டிஷ் ஆட்சி இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்த வேண்டிய கட்டாயமும் மன்மோகன் அரசுக்கு ஏற்பட்டது.

இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும், காங்கிரசு ஆட்சியின் கீழ் 6 இலட்சம் ஹெக்டேர் காடுகள் சுரங்கங்களுக்காகவும், பிற தொழில்களுக்காகவும் அழிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 7,90,000 ஹெக்டேர் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாறியிருக்கின்றன. சுற்றுச்சூழல் விதிகளைக் காட்டித் தாமதமாக்குகிறார் என்று தரகு முதலாளிகளால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உடனே அகற்றப்பட்டு, வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே ரூ 75 ஆயிரம் கோடி போஸ்கோ திட்டம் உள்ளிட்ட ரூ 2.4 இலட்சம் கோடி பெறுமானமுள்ள திட்டங்களுக்கு விதிகளைப் புறக்கணித்து அனுமதி தந்தார். மன்மோகன் சிங்கோ, ரூ 500 கோடி வரையிலான திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியே தேவையில்லை என்றும் ரூ 1000 கோடி வரையிலான திட்டங்களுக்கு மாநில அரசுகளே அனுமதியளிக்கலாம் என்றும், கட்டிடங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதியே தேவையில்லை என்றும் அடுக்கடுக்கான உத்தரவுகளை 2012-13-ம் ஆண்டுகளில் பிறப்பித்தார்.

வேதாந்தா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேதாந்தா நிறுவனத்தின் பாக்சைட் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக ஒரிசாவில் நியாம்கிரி பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

இவையும் போதாதென்று கருதிய தரகு முதலாளிகள் மன்மோகன் அரசு செய்யலின்மையில் விழுந்து விட்டதாகச் சாடினர். தாங்கள் விரும்பிய வளங்களை விரும்பிய வண்ணம் சூறையாடுவதற்கு எந்தவிதமான சட்டத்தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது கோரிக்கை. முதலாளி வர்க்கத்தின் இந்தக் கோரிக்கையைத்தான் பாரதிய ஜனதா தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே வழிமொழிந்திருந்தது.

சுற்றுச்சூழல் சட்டங்கள், மத்திய, மாநில அமைச்சகங்கள், இவ்வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் இதற்கென தனி ஆயம் ஆகியவையெல்லாம் இருக்கின்ற சூழலிலேயே, உலகின் மிகவும் மாசடைந்த 20 நகரங்களில் 13 இந்தியாவில்தான் இருக்கின்றன. 150 ஆறுகளில் 76 ஆறுகள் கழிவு நீர்க் கால்வாகளாகியிருக்கின்றன. நீர்வளம் அற்றுப்போனதால், 60 பேருக்கு ஒன்று என்ற கணக்கில் நாடு முழுவதும் 2.1 கோடி ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அழிவின் பொருளாதார மதிப்பு இந்தியாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 5.7% என்று மதிப்பிடுகிறது உலகவங்கி. மோடி அரசு சாதிக்க விரும்பும் வளர்ச்சி வீதத்தைக் காட்டிலும் இந்த அழிவின் வீதம்தான் அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உலகின் மிக முக்கியமான பல்லுயிர்ச்சூழல் பகுதியும், 58 ஆறுகள் உற்பத்தியாகும் இடமும், இந்தியாவின் நுரையீரல் என்று கூறத்தக்க 1,64,280 சதுர கி.மீ. வனப்பகுதியுமான மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் 75% கடந்த 20 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. மழைப்பொழிவின்மை, தண்ணீர்ப் பஞ்சம் உள்ளிட்ட மிகப்பெரும் பேரழிவை இது தோற்றுவித்திருப்பதால், இந்த வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட காட்கில் குழு, 64% வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டுமென சிபாரிசு செய்தது. அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு குறைந்த பட்சம் 37% வனப்பகுதியையாவது அவ்வாறு அறிவிக்கவேண்டுமெனக் கூறியது. ஆனால், கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையே தொழில் வளர்ச்சிக்கு எதிரானது என்றும், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் அதனை ரத்து செய்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுரங்கத்தொழிலுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் அறிவித்தார்.

நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்க நிறுவனங்கள், சாலைகள் மற்றும் துறைமுகக் கட்டுமானப் பணி நிறுவனங்கள், தனியார் மின் நிலையங்கள் போன்றவற்றின் உரிமையாளர்களான தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் சுற்றுச்சூழல் என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கிறது. சூழல் விதிகளை மீறுவதற்கான கள்ளச்சாவியை மன்மோகன்சிங் முதலாளிகளின் கையில் கொடுத்தார் என்ற போதிலும் அவர்கள் திருப்தி அடைந்திடவில்லை. ‘கதவையும் பிடுங்கி எறிய வேண்டும்’ என்பதே அவர்கள் கோரிக்கை.

இதனை குஜராத்தில் செய்து காட்டிய மோடி, தனது உத்தியை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்துகிறார். வனங்கள் என்பதற்கான வரையறை தங்களுடைய ஆக்கிரமிப்புக்கு இடைஞ்சலாக உள்ளதென தரகு முதலாளிகள் கருதுவதால் காடுகளுக்கான வரையறையையே திருத்துகிறது மோடி அரசு. காடுகளை மதிப்பிடுவதற்கு 6 அளவுகோல்களைத் தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் பயன்படுத்துகிறது. காட்டின் தன்மை, அதன் உயிரியல் வளம், வன விலங்குகள், காட்டின் அடர்த்தி, நிலத்தின் தன்மை, அதன் நீர்வள மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான், வனப்பகுதியில் சுரங்கத்தொழிலை அனுமதிப்பது அல்லது மறுப்பது என்பதை அரசு செய்கிறது. இந்த 6 அளவுகோல்களிலிருந்து காட்டின் அடர்த்தி மற்றும் அதன் உயிரியல் வளம் என்ற இரு அளவுகோல்களையும் நீக்கி விட்டு, மீதமுள்ள நான்கு அளவுகோல்கள் அடிப்படையில் வனப்பகுதியை வரையறுப்பதற்கான விதிகளை மோடி அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, காட்டின் மொத்தப் பரப்பையும் கணக்கிடாமல், நாடு முழுவதையும் ஒரு சதுர கி.மீ கொண்ட சதுரங்களாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றையும் காடா இல்லையா என்று மதிப்பிடலாம் என புதிய வரையறை உருவாக்கப்படுகிறது. இதன்படி காடுகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான புல்வெளி போன்ற நிலப்பரப்புகளை ‘காடு அல்ல’ என வகைப்படுத்தி, அதனை ‘வளர்ச்சி’த் திட்டத்துக்கு வழங்கிவிட முடியும்.

ஒருபுறம் சுற்றுச்சூழல் விதிகளின் மீது மோடி அரசு தாக்குதல் தொடுக்க, இன்னொருபுறம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘வளர்ச்சி’க்கு இடையூறாக உள்ள போராடும் பழங்குடி மக்களையும் மாவோயிஸ்டுகளையும் ஒடுக்க ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடுக்கவுள்ளதாகக் கூறுகிறார். ஜனநாயகத்தை வழங்குகிறோம் என்ற பெயரில், இராக்கின் எண்ணெய் வளத்தைச் சூறையாடுவதற்காகப் படையெடுத்த அமெரிக்காவுக்கும், வளர்ச்சியை வழங்குகிறோம் என்று கூறிக்கொண்டு இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்காக உள்நாட்டு மக்கள் மீது போர் தொடுக்கும் மோடி அரசுக்கும் என்ன வேறுபாடு?

– அன்பு
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________