Tuesday, April 29, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மெரினா அழகாகத்தானே இருக்கிறது...

மெரினா அழகாகத்தானே இருக்கிறது…

-

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தப் போகிறார்களாம். எப்படி என்கிற கேள்விக்கான விடை யாருக்காக என்கிற கேள்வியை உடனடியாக எழுப்பி விடுகிறது. பதில்கள் அழகு என்பது நிச்சயம் வர்க்க சார்புடையதுதான் என்பதற்கான இன்னுமொரு நிரூபணமாகின்றன. இன்றைய மெரினாக் காட்சிகள் எவை? அதிகாலை விரிந்து கிடக்கும் நீலக்கடலும் வானும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தொட்டுக் கொள்ளுகின்றன. கதிரவன் இரத்தச் சிவப்பாய் உதிக்கும் போதே சிறுசிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன. நேரம் செல்லச் செல்ல அந்தக் கரும்புள்ளிகள் பெரிதாகி கட்டுமரங்களாகிக் கரையை நெருங்கும் காட்சி விரிகிறது. ஒவ்வொரு கட்டுமரத்திலும் மூன்றோ, நான்கோ மீனவர்கள். ஒரு பாடலுக்குரிய தாளம் போல துடுப்பு வலிக்கிறார்கள். அவர்கள் நேற்றோ, முந்தின நாளோ கட்டுச் சோறு கட்டிக்கொண்டு, உயிரைப் பணயம் வைத்துக் கடலுக்குச் சென்றவர்கள். சுட்டெரிக்கும் வெய்யிலிலும் கொட்டி நடுக்கும் பனியிலும் பாடுபட்டு உழைத்த செல்வத்தோடு இதோ அவர்கள் கரைக்குத் திரும்புகிறார்கள்.

மெரினா

இதோ, கரையில் அவர்களின் சிறு பிள்ளைகளும், மனைவிமார்களும், வயோதிகப் பெற்றோர்களும் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள். இவர்களும் அங்கே கரையை நெருங்குபவர்களும் சினிமாவில் காட்டப்படும் அழகு மனிதர்கள் அல்ல. பழச்சாறும், நட்சத்திரவிடுதி உணவும் தின்று, குளுகுளு அறைகளில் சொகுசாக வாழும் மினுமினுக்கும் வெளுத்த தோலும், பிதுங்கிவழியும் சதையும் அவர்களுக்கில்லை. காய்ந்து கருகிய தோலும், உழைத்து முறுக்கேறிய கரங்களும், ஒட்டிய வயிறுமாக இருக்கிறார்கள். தாம் ஈட்டிய செல்வத்தை அவர்கள் கரையின் மணலிலேயே கொட்ட, உறவினர்களும் வியாபாரிகளும் சூழ்ந்து கொள்கிறார்கள். அன்றைய உணவுக்கான மீன்களை விற்று விட்டு வலைக்கு வாடகையும், கடனுக்கு வட்டியும் கட்டுவதற்குப் புறப்படுகிறான் அந்த உழைப்பாளி. அன்று அவர்கள் முகத்தில் காணும் கலவையான உணர்வுகளை எந்தக் கலைஞனால்தான் முழுமையாக சித்தரிக்க முடியும்? மாலையில் சற்றே மாறுபட்ட கலவையான உணர்வுகளைக் கொண்ட மனிதர்கள் திரளுவதைக் காண்கிறோம். அங்கே கூடுபவர்கள் எல்லாம் உல்லாசத்துக்காக வருவதில்லை. மனப்புழுக்கத்தைப் பகிர்ந்துகொள்ள, உழைத்துக் களைத்தவர்கள் ஓய்வைநாட, சமூகத் தளைகளால் கட்டுண்ட காதலர்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள, மிகவும் குறைந்த செலவில் குடும்பம் குடும்பமாக மகிழ்ந்திருக்க மனிதர்கள் நாடிவருகிறார்கள். கடல் நீரில் காலை நனைத்து மகிழ்ச்சிகொப்பளிக்கும் உள்ளங்களைக் காண்கிறோம்,

இத்தனை அழகுக்கும் மத்தியில் சில அருவருக்கத்தக்க காட்சிகளும் உண்டு. ஊதிப்பெருத்த மனிதர்கள் பலர் தமது கொழுப்பைக் கரைக்க நாய்களுடன் காரில் வந்திறங்கி அதிகாலையில் நடைப்பயிற்சி செய்கிறார்கள். சமூக விரோதிகளின் கேடுகள் சிலவும் நடக்கின்றன. அப்புறம் அந்தக் கல்லறைகளும், அவற்றில் நடக்கும் பகுத்தறிவற்ற செயல்களும் – தேவையெல்லாம் இவற்றை அகற்றுவதுதான். ஆனால், ஆட்சியாளர்களோ, மலேசிய அரசுடன் – அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு 3,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து மெரினா கடற்கரையை அழகுபடுத்தப் போகிறார்களாம்.

மேட்டுக் குடியினரின் பார்வைக்கு மெரினா கடற்கரையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மீனவர்குப்பங்கள் அசிங்கமாகத் தெரிகின்றனவாம். அவற்றை அகற்றி விட வேண்டுமாம். இனி நீர்ச்சறுக்கு விளையாட்டு, மிதக்கும் உல்லாச விடுதிகள், கரையிலோ நட்சத்திரக் கேளிக்கை விளையாட்டு விடுதிகள், வெளிநாட்டுத் தொழிலதிபர்களும் – அரசு அதிகாரிகளும் தங்கும் மாளிகைகள், அவர்களின் அலுவலகங்கள் – இவற்றை நிறுவி அழகுபடுத்தப் போகிறார்கள், ஆட்சியாளர்கள். ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடித்துப் பழக்கப்பட்டவர்கள் அல்லவா. பல ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்கள் நிறைவேறும்போது சில ஆயிரம் கோடி ரூபாய்களாவது தேறும், கட்டுமானப் பணிகளில் ஒப்பந்தம் எடுக்கலாம்; கேளிக்கை – உல்லாச விடுதிகளில் பங்குதாரர்கள் – உரிமையாளர்கள் ஆகலாம்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீன் பிடித்தொழிலைத் தாரைவார்ப்பதில் திரைகடல் ஓடாது திரைகடல் விற்று செல்வத்தைக் குவிக்கலாம்.

இலட்சக்கணக்கான மீனவர்குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் தரையில் விசிறியடிக்கப்படும் மீன்களைப் போல தொலைவில் கொண்டு போய்க் குவிக்கலாம். தலைமுறை தலைமுறையாகக் கடற்கரையில் பிறந்து, கடலிலேயே வாழ்ந்து, அங்கேயே மடிந்துபோன மக்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்ற சுவடே தெரியாமல் அழிக்கப்படுவர். நெசவாளிகள், விவசாயிகள், கீழ்நிலைப் பணியார்கள், இதோ, மீனவர்கள். இப்படி இருளில் தள்ளப்படும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பறித்து அவர்களின் துயரத்தில் இன்பம் காணும் குரூர – குறுமதியாளர்களின் ஆட்சியில் வேறென்ன நடக்கும்? ஆனால், உழைத்து உரமேறிய, இயல்பிலேயே போர்க்குணமிக்க மீனவர்களிடமிருந்து மெரினாவை அவ்வளவு எளிதாகப் பறித்துவிட முடியாது. படகோட்டி, மீனவ நண்பனாக வேடங்கட்டியவர், மீனவர்களை வெளியேற்றி மெரினாவை அழகுபடுத்த கொலைகாரன் தேவாரத்தை ஏவினார். மெரினா மணல் மீனவர் இரத்தத்தால் சிவந்து, ஐந்து மீனவர்கள் உயிரை குடித்தது, அந்த ஓநாய். ஆனால் மெரினாவை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அந்த துணிவும் உறுதியும் தொடரவேண்டும்.
____________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2003
____________________________