Tuesday, April 22, 2025
முகப்புசெய்திஒசூரில் புரட்சிகர திருமண விழா

ஒசூரில் புரட்சிகர திருமண விழா

-

சாதி சமய சடங்கு பார்த்து, அந்தஸ்து பார்த்து, பெற்றோரின் முடிவுக்குத் தலையாட்டி, ஒருவர் புரியாத மொழியில் மந்திரங்களை உச்சரிக்க, ஏதோ ஒரு குறித்த நேரத்தில் தாலியைக் கட்டிவிடுவதும், சீதனத்தை கணக்கோடு வாங்குவதும் கணக்கு வைத்து திருப்பிக்கொடுப்பதும், அரைவயிறு, கால்வயிறு சாப்பிட்டு அல்லது பட்டினி கிடந்து, உழைத்து சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு அர்த்தமற்ற போலி சுய கவுரங்களை காப்பாற்றிக்கொள்வது என்ற பேரில் சடங்குகளை விடாமல் பற்றிக்கொண்டிருப்பது இவைகளைத்தான் பொதுவாக இனைறைய திருமணங்களில் நாம் காண்கிறோம். இதுவே மகிழ்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது.

இதற்கு மாறாக, மகிழ்ச்சி என்பது ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையிலிருந்து தொடங்குகின்றது. எந்தளவிற்கு எளிமையாக வாழ்க்கையை மாற்றுகின்றோமோ, அந்தளவிற்கு அங்கு மகிழ்ச்சி இயல்பாகத் தொடங்குகின்றது. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாக இல்லாமல் சமூகத்தின் இன்ப துன்பங்களுடன் இணையும் போது மட்டுமே மகிழ்ச்சி என்பது பொது வாழ்வாகி விடுகின்றது…..

அப்படிப்பட்ட மகிழ்ச்சியை வரித்துக்கொண்டு ஆடம்பரமில்லாமல் சடங்குகளை மறுத்து எளிய முறையில் கடந்த 13.07.2014 ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 மணியளவில் ஓசூர் ஆந்திரசமிதி எனும் மண்டபத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் மற்றும் தோழர் வெண்ணிலா ஆகிய இவ்விருவருக்கும் புரட்சிகர மணவிழா நடைபெற்றது.

இப்புரட்சிகர திருமணத்தை இவ்வமைப்பின் பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார். முன்னதாக தோழர் வேல்முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன், பென்னாகரத்தை சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் தோழர் அருண், பெங்களூர் எழுத்தாளர் தோழர் கலைச்செல்வி, கொத்தகொண்டப்பள்ளி கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. முனிராஜ், தோழர். இ.கோ.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வாழ்த்துரைகளின் இடையில் நக்சல்பாரி, ஓவியா ஆகிய இரு சிறுவர்கள் தங்கள் மழலைக் குரலில் புரட்சிகர பாடல்களை பாடினர். இதன் தொடர்சியாக பு.ஜ.தொ.மு வின் மாநிலப் பொருளாளர் தோழர். பா. விஜயகுமார் நிகழ்ச்சியின் நோக்கத்தை, அதன் பல்வேறு அம்சங்களைத் தொகுத்து சிறப்புரையாற்றினார்.

மணமக்களின் உறவினர்கள், தோழர்கள், பொதுமக்கள் என திரண்டிருந்த மக்கள்திரளினர் முன்னிலையில் மணமக்கள் மாலைமாற்றி உறுதிமொழியேற்றனர். கூடியிருந்த மக்கள் கைத்தட்டி புரட்சிகர மணமக்கள் வாழ்க என வாழ்த்து முழக்கங்கள் முழங்கி மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிகழ்வின் இறுதியாக, பார்ப்பன சடங்குகள் பண்பாட்டை தோலுரித்தும், புரட்சிகர புதிய பண்பாட்டை உயர்த்திப்பிடித்தும் ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. திரளான மக்கள் இறுதிவரை கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

புதிய ஜனநாயகம்,செய்தியாளர்,
ஓசூர்.
——————————————