Monday, April 21, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஈரான் விமான விபத்து - என்ஜினா, ஏகாதிபத்தியமா ?

ஈரான் விமான விபத்து – என்ஜினா, ஏகாதிபத்தியமா ?

-

ரான் தலைநகரம் டெஹரானின், மெஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து, கிழக்கு ஈரானிலிருக்கும் டாபஸ் நகருக்கு 10.08.2014 ஞாயிறு காலை, புறப்பட்ட IrAn – 140 வகையைச் சேர்ந்த விமானம் விபத்துக்குள்ளாகி , 39 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர். செபஹான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் உள்ளூர் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் சிறிய வகை விமானமாகும்.

ஈரான் விமான விபத்து
விபத்துக்குள்ளான விமானத்தின் வால் பகுதி.

52 பேர் பயணிக்க கூடிய இந்த விமானத்தில் விபத்து நடந்த போது எட்டு பணியாளர்களை உள்ளிட்டு 48 மக்கள் இருந்தனர். விமானத்தின் என்ஜின்களில் ஒன்று பழுதானதால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

பலியானவர்களின் உடல் சிதைந்துள்ளதால், டிஎன்ஏ சோதனைக்கு பிறகே அடையாளம் காண முடியுமென ஈரானின் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கின்றது.

ஈரானில் இத்தகைய பாரிய விமான விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இந்த வருடம் மார்ச் மாதம், அரசு விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான சிறு விமானம், சோதனை பயணத்திற்காக பறந்த போது விபத்துக்குள்ளாகி நான்கு விமான ஊழியர்கள் இறந்தனர். 2011 ஜனவரியில் ஏர் போயிங் 727 விமானம், பனிப்புயல் பொருட்டு அவசரமாக தரையிறங்க முயன்ற போது விழுந்து நொறுங்கி 77 பேர் கொல்லப்பட்டனர்.

2009 ஜூலையில் ரசியாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானம் வட மேற்கு ஈரானிலிருந்து, புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளாகி பயணம் செய்த 168 பேரும் கொல்லப்பட்டனர். 2003 பிப்ரவரியில் ரசியாவில் தயாரிக்கப்ப்ட்ட இல்யுஷின் 76 வகை விமானம், தென் கிழக்கு ஈரானின் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி பயணம் செய்த 76 படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கண்ட செய்திகள், விவரங்கள் கூடவோ, குறையவோ எல்லா இந்திய, தமிழ் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. ஆனால் ஈரானில் விமான விபத்துகள் அதிகம் நடக்க காரணம் என்ன என்று இவர்கள் யாரும் பேசவில்லை.

ஈரானின் விமானங்கள் வயதானவை, சரியாக பரமாரிக்கப்படுவதில்லை என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதற்கு ஈரான் காரணமில்லை.

ஈரானின் அரசு விமான நிறுவனத்தில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவன வகை விமானங்களை அனைத்தும் 1979 அமெரிக்க எதிர்ப்பு இசுலாமிய புரட்சிக்கு முன்பு வாங்கப்பட்டவை. இதற்கு பிறகு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானோடு பகை உறவு கொண்டுள்ள நிலையில் புதிய தொழில்நுட்பத்தோடு மேம்பட்ட விமானங்களை வாங்கும் உரிமை ஈரானுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா விதித்திருக்கும் வர்த்தகத் தடை, பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் விமான பராமரிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கத் தயாரிப்பு விமானங்களை காலத்திற்கேற்ப மேம்படுத்தவோ, ஐரோப்பாவிலிருந்து உதிரிபாகங்களை பெறவோ வழியில்லாமல் போய் விட்டது.

இதற்கு மாற்றாக ரசிய வகை விமானங்களை சார்ந்து ஈரான் அரசு பயன்படுத்தினாலும், 90-களில் சோவியத் நாடு குலைந்து போன பிறகு உதிரி பாகங்கள் கிடைக்க வழியில்லாமல் போனது. தற்போது விபத்துக்குள்ளான விமானம் கூட உக்ரேனின் தொழில்நுட்ப உரிமை பெற்று, உதிரி பாகங்கள் வாங்கி ஈரானில் தயாரிக்கப்பட்டதுதான்.

இயற்கை சீற்றத்தினால் மட்டும் விமான விபத்துக்கள் நடப்பதில்லை. ஈரான் போன்ற ஏகாதிபத்தியங்களால் அச்சுறுத்துப்படும் நாடுகளில் நேரடி போர்களால் மட்டுமல்ல, இத்தகைய ‘விபத்து’க்களாலும் கூட மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஏகாதிபத்தியங்கள் இருக்கும் வரை போர் இல்லை என்றாலும் இத்தகைய மறைமுக ‘போர்’ அல்லது பொருளாதார தடைகள் ஒடுக்கப்படும் நாடுகளின் மக்களைக் கொல்லும். போபால் விபத்து, ஈரான் விமான விபத்து என்பதில் விபத்து இருப்பதினாலேயே அவை விபத்தல்ல.

மேலும் படிக்க