எழுந்தாய்! வாழி காவிரி!
பொங்கி வரும் காவிரியே – கொஞ்சம்
தங்கிச் செல்லாயோ!
கடைமடை இலை நரம்பு வரை
வந்து நில்லாயோ!

தும்பி முகம் கழுவி
நாளாச்சு – எங்கள்
தூளி துணி அலசி
நாளாச்சு!
வெம்பி அழும்
எம் குழந்தை வேண்டுவது
தாய்ப்பால் மட்டுமல்ல,
தாயே, உன் தண்ணீர் பெருக்கின்
உலகூட்டும் ஓசையும்தான்.
மேட்டூர் மேலெழும்ப
காட்டூர் தென்னை மார் சுரக்கும்,
கல்லணை கண் திறக்க
உள் அணைகள் உயிர் சிலிர்க்கும்.
ஈரக்காற்று
சேதி சொல்ல
வரப்புதடு சிலுசிலுக்கும்.
நெடுநாள் காய்ந்த
வயலின் வெடிப்பும்
கெடுநாள் வெடித்த
உழவனின் நாவும்
ஈரம் பார்க்கும்
நேரம்… தவிக்கும்!

இலை, தழைகள்
மனங்குளிர மட்டுமா?
இதயம் குளிரவும்
இலக்கியம் வரை பாய்ந்த காவிரியே…
பட்டினப் பாலையில்
பலவகை மிளிர்ந்தாய்
சிலப்பதிகாரத்தில்
சீர் தமிழ் ஒளிர்ந்தாய்!
மணிமேகலையிலும்
மதகு நுழைந்தாய்
கம்பனின் கவிதைச்
சந்தத்தில் கலந்தாய்!
ஆழ்வார் பாசுரம் குழைய
நீதான் ஈரம் காத்தாய்
அடியார் புராணங்களுக்கும்
நீதான் அள்ளிக் கொடுத்தாய்
தஞ்சை தண்டச் சோறுகளை
எங்கள் பெரியார் வாயால்
நீதான் பிரித்து மேய்ந்தாய்!

எதையோ தேடித் தேடி
ஓடி, ஓடி
கம்யூனிஸ்டுகளின் முகம் பார்த்து
கடைசியாய் அகம் நிறைந்து
காவிரியே!
லட்சிய நடை பயின்றாய்!
ஒரு நாள் அல்ல
பல நாள்
விவசாயி அழுத கண்ணீர்
துள்ளி வரும் காவிரியே
உன் துணையால் மட்டுமே விலகும்!
இன்று போல் என்றும்
நீ ஓடினால் அல்லவோ – எங்கள்
எலும்பும் தோலும்
உணர்ச்சிகள் பழகும்!
காவிரியே நீ நிறைந்தால்
எங்கள் கலயங்கள் நிறையும்.
காவிரியே நீ நடந்தால் – எங்கள்
கால்நடைகள் நடக்கும்!
காவிரியே நீ விரிந்தால்
பூச்சிகள் இறகு விரியும்!
காவிரிக் கண்ணே! உன் மென்மை
கரைப் பூக்களின் இதழ்களில் தெரியும்.
தழுவிடும் காவிரித் தாயே – எங்கள்
தலைமுறை உதிரம் கலந்தாயே!
ஓராயிரம் உயிர்களும் நீயே – எங்கள்
உணர்வுப் பெருக்கும் நீயே!

சிறை உடைத்து வந்தாய்
காவிரித் தாயே – பார்!
எம் மண்ணைச் சிறைபிடிக்க
மறுகாலனி மீத்தேன் வாயே.
உயிர் தழைக்க
ஓடி வந்தாய் நீயே! – தலைமுறை
உயிரெடுக்க மீத்தேன் வாயே!
புதைந்து கிடக்கும்
படிம எரிபொருள் எடுத்து – மக்கள்
பகை முதலாளி லாபம் பார்க்க
நனைந்து கிடக்கும் மண்ணின்
குடலை அறுக்க
துணிந்துவிட்டது அரசு.
துள்ளிவரும் காவிரித்தாயே!
துணைபோகும்
துரோகிகள் முகத்தில் உரசு!
விளைந்து கொடுத்த
காவிரிப் படுகைமேல்
வெட்டு விழுந்தால்,
வெளியேறப் போவது
மீத்தேன் அல்ல – எங்கள்
விவசாயி வர்க்கத்தின் நெருப்பு!
உழவு நடந்தால்
ஊரே வாழும் – மீத்தேன்
இழவு நடந்தால்
ஊரே சுடுகாடாகும்!

நன்னீர் கெட்டு
தண்ணீர் உப்பாகும்.
பென்சீன், டொலுயீன் கலந்து
இனி… புற்றுநோயே முப்போகம்!
ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு
நாட்டை ஆளும்
வேஸ்ட்டர்ன் இந்தியன்களை விரட்டாவிடில்
நாம்
மண்ணின் மைந்தன் என்பதே தப்பாகும்!
நன்றி மறக்கமாட்டோம் காவிரி,
எங்கள் கரைகளில்
நம்பிக்கையோடு பூ விரி!
சூரியன் முதுகு தேய்க்க
எருமை ஊறிய குளங்கள்,
மணிக்கழுத்தை திருப்பி
மைனாக்கள் தெளிநீர் குடித்த
வரப்போடைகள்,
தூக்கு வாளி பழஞ்சோறுண்டு
வாய்க்காலில் கழுவ
நீராகாரம் அருந்த
நீண்டு வரும்
பொடிமீன் வரிசைகள்.
நாற்றாங்காலொடு
மல்லுக்கட்டும் காற்றுக்கு
வெள்ளைக் கொடி காட்டும்
செங்கால் நாரைகள்.

பூச்சிகளின் துள்ளொலிக்கு
தலையசைக்கும் புது நாத்து
பச்சை மணம் கமழ
பயணக் களைப்பை
புத்துணர்ச்சியாக்கும் வயக்காத்து!
ஈ, எறும்பு, செடி, கொடி
எல்லா உயிர்க்கும்
ஈந்தாய் காவிரி, தன்மானம்!
ஊர் அழிய உள் நுழையும்
மீத்தேன் திட்டத்தை ஒழித்துகட்டி
உயிர்களனைத்தும் காப்போம்! உன் மானம்!
பலநூறு ஆண்டுகள்
உயிரினம் பழகி ஓடி – காவிரி
வண்டல் சேர்த்த வளத்தை
ஒரு பன்னாட்டுக் கம்பெனி லாபத்தில்
புதைப்பதுதான் வளர்ச்சித் திட்டமா?
பல்லாயிரம் உயிர்க்கு சோறு போடும்
சுற்றுச்சூழலை அழித்துவிட்டு
சில பணக்கார நாய்களுக்கு
எச்சிலை நம் நிலமா?
பூத்தேன் பொழிந்த
காவிரி மண்ணில்
மீத்தேன் தீயின் வெப்பம்.
தடுத்தேன், தகர்த்தேன் என
ஊர் திரளாவிடில் – தலைமுறைக்கே
தரிசாகிவிடும் கர்ப்பம்!

புல்லாய் எழுப்புவோம் உன்னையே!
எங்கிருந்தோ வரும்
கம்பெனி கொள்ளைக்காக
விவசாயம் அழித்து – நாம்
சொந்த நாட்டு அகதிகளாகும் துயரம்,
காவிரித் தண்ணீர் குடித்தவனென்றால்
கார்ப்பரேட் நரியை விரட்டியடிக்க
காவிரியோடு நம் கைகளும் உயரும்!
ஒரு சில முதலாளி சம்பாதிக்க
உதிரம்கலந்த காவிரி மண்முகம்
உப்புநீர் பூப்பதோ?
கழிவுநீரில் காவிரிமுகம் கருக்கினால்
அவன் கதை முடிக்காமல்
கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதோ!
நாணல் பூக்கள் முகம் நனைக்கும்
நதியே உன் தீரத்தில்
மீத்தேன் குழாய்கள் இறங்குமோ?
எதிரியின் நாடி நரம்புகள் அறுக்காமல்
எங்கள் உதிரம் என்ன உறங்குமோ!
நெல், கரும்பு, வாழை
வெற்றிலை, உளுந்து, பயிறு
ஓங்கிய தென்னை, பனை – எமை
தாங்கிய தமிழென
அனைத்தும் ஈன்ற காவிரி அன்னையே,
பல்சக்கரத்தால்
பன்னாட்டுக் கம்பெனி – உன்
புல்முகம் சிதைத்தால்
பொறுத்திடுவோமா?
அவனை புதைத்த இடத்தில்
புல்லாய் எழுப்புவோம் உன்னையே!
குடகு தாவி பாறை வீழ்ந்து
பால்போல் நுரைத்து,
பல்சுவை பயின்று பயின்று,
தெள்ளிய அறிவுபோல்
திகழ்ந்து விரிந்து
மாநிலம் சிறக்கும் மகளே காவிரி!
அடகு போகும் தேசம் காக்க
ஆர்த்தெழும் அரசியல் முழக்கொலி
நீயும் ஆதரி!
எங்கள் அடிவயிறு இறங்கும்
மீத்தேன் ஆழ்துளை கிணறுகள்
பாழ்படும் பயிர்நிலங்கள்!
விடமாட்டோம் என
மீத்தேன் களையை விரட்டியடிக்கும்
மக்களோடு
காவிரியே நீயும் போர்புரி!
அழிவுத்திட்டம் அமலானால்
கழிவாய்ப் போகும் காவிரி வாய்க்கால்.
எங்கள் குளங்களின் வாயில்
மீத்தேன் நஞ்சா?
எங்கள் குயில்களின் குரலில்
ஆசிட் வீச்சா?
பன்னூறு ஆண்டுகள்
பாசனம் செய்த பயிர்நிலமெல்லாம்
பன்னாட்டு கம்பெனி பூசனம் புடிக்க
இதுதான் வளர்ச்சியின் பேச்சா?
பொன்னி நதியே பொங்கிடுவாய்!
போராட்ட நதியால்
காவிரிப்படுகை எங்கும்
கலந்திடுவாய்!
– துரை.சண்முகம்