திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரில் இந்துமுன்னணி ஏற்பாட்டில் நேற்று (4-09-2014) நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை மாலை 3 மணி முதல் 6.30 மணிக்குள் முடித்துவிட நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதை மீறி தாமதமாக தொடங்கிய ஊர்வலம் மிக மெதுவாக நகர்ந்து பாங்கு ஓதும் நேரத்தில் பள்ளிவாசல் அருகே நெருங்க, போலீசார் தடுப்புவேலி அமைத்து பாங்கு முடியும் வரை தடுத்து வைத்துள்ளனர்.
அப்பொழுது இஸ்லாமியர்கள் மீதான அவதூறு கோஷங்களை எழுப்பியுள்ளார்கள் இந்து முன்னணியினர். அதைத் தொடர்ந்து ஊர்வலம் சென்ற வழியில் இருந்த இஸ்லாமியர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் காவிபயங்கரவாதிகள். இதில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன. ஒரு கடைக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, ஊர்வலத்தில் தலைமை வகித்த பொன்னுச்சாமி, ஜாம்புவானோடை ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் உப்பூர் இளமாறன், இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில கலந்து கொண்டு (வெறி)உரையாற்றிய பா.ஜ.க வின் இல.கணேசன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

விநாயகர் ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது இந்தப் பகுதியில் புதிதல்ல. கடந்த ஆண்டுகளின் ஊர்வலங்களின் போது இஸ்லாமியர்கள் வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிற ஊர்களிலும் இப்படிப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தி கலவரத்தை தூண்டுவது இந்து மதவெறியர்களின் வாடிக்கை. 2010 விநாயகர் சதுர்த்தியின்போது வேலூர் எம்.பியின் வீட்டில் கூட தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
சென்னை விநாய்கர் ஊர்வலங்களின் போது சாலையில் செல்லும் பெண்கள் மீது தண்ணீர் பீய்ச்சுவது, பொதுமக்கள் மீது அடாவடி செய்வது போன்ற காவிகளின் காலிச் செயல்கள் நாம் அறிந்ததே.
இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில், விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் லும்பன்களை ஊர்வலம் விட்டு இஸ்லாமிய எதிர்ப்பு கோஷமிட வைப்பது, பள்ளிவாசல், வீடுகளில் கல்லெறிவது போன்ற காலித்தனங்களை தூண்டிவிடுவது, அதற்கு இஸ்லாமியர்கள் எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அதைக் காரணமாக வைத்து கலவரம் செய்வது, இதுதான் இந்துமுன்னணியின் நோக்கம்.

இஸ்லாமிய குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இந்துமத சாமி ஊர்வலங்கள் விரும்பி கேட்டுக்கொண்டாலும் தலித் மக்களின் காலனிக்குள் நுழைவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. தலித் வடம் பிடித்தால் நகராத கண்டதேவி தேரை வலுக்கட்டாயமக இழுத்துகொண்டு சேரிக்குள் நுழைய எந்த இந்து முன்னணிக்காரனும் தயாராக இல்லை. ஆனால் தலித்துகளை இஸ்லாமியர்களுக்கு எதிரான காலாட்படையாக பயன்படுத்தும் நோக்குடன் விநாயகர் ஊர்வலங்களில் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். காவல்துறையின் பாதுகாப்புடன் தான் இந்த காலித்தனங்களை அரங்கேற்றுகிறார்கள் இந்துத்துவ காலிகள்.
இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. விநாயகர் ஊர்வலத்தை திலகர் ஆரம்பித்து வைத்ததன் நோக்கமே இழந்த பார்ப்பனர்களின் அதிகாரத்தை மீட்பதும், இஸ்லாமியர்களுக்கு எதிரான மதக்கலவரத்தை உருவாக்குவதும்தான். அதுமட்டுமல்லாமல் பூலே போன்ற பார்பன எதிர்ப்பாளர்களின் செல்வாக்கிலிருந்து தலித்துகளை கைப்பற்றி அவர்களை பார்ப்பனிய அடியாளாக்குவதற்கு அனைவருக்குமான தெய்வமாக, அனைவருக்குமான விழாவாக ஒன்று தேவைப்பட்டதும் விநாயகர் ஊர்வலத்திற்கு ஒரு காரணம்.
ஆக விநாயகர் ஊர்வலம் ஆரம்பம் முதல் இன்று வரை மக்களை பிளவுபடுத்தி பார்ப்பனியத்திற்கு அடிமைப்படுத்தவும், கலவரத்தை உருவாக்கும் கருவியாகவும் தான் பயன்பட்டு வருகிறது. முன்னர் வடஇந்தியாவில் மட்டுமே செல்வாக்கு செலுத்திய இந்த விழா தற்போது தமிழகத்தை பிடித்த பீடையாக முன்னேறி வருகிறது.

சென்னையில் தெருக்களில் பத்து அடிக்கு ஒரு பிள்ளையாரை வைத்திருக்கிறார்கள். இதற்காக ஊரில் இருக்கும் லும்பன்கள் நிதிவசூலில் ஈடுபட்டு பொதுமக்களை மறித்து மிரட்டும் உடல்மொழியுடன் நிதி கேட்கிறார்கள். ஓசூர் பகுதியில் லும்பன்கள் சாலைகளில் கைகோர்த்து நின்று வண்டிகளை மறித்து விநாயகர் சதுர்த்தி நிதிவசூல் செய்வதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
தாங்கள் இந்து என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு பார்ப்பனியத்தின் உண்மை முகத்தைப் புரிய வைப்பதன் மூலம் அவர்களை பார்பன இந்து மத மயக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தேவையையும் இந்த விநாயகர் ஊர்வல கலவரங்கள் உணர்த்துகின்றன.
மோடி ஆட்சிக்கு பிறகு வட இந்தியாவில் திட்டமிட்டு பரப்பப்படும் இந்து மதவெறி, தமிழகத்திலும் வேர் பாய்ச்ச துடிக்கிறது. இந்த நச்சு வெறியை வேரோடு வெட்டுவோம்.