Tuesday, April 22, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்இந்தோனேஷியா முசுலீம் அறிஞர் பெயர் லெட்சுமணன்

இந்தோனேஷியா முசுலீம் அறிஞர் பெயர் லெட்சுமணன்

-

மக்கள் கலை இலக்கியக் கழகம் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 22,23 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தி பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளிலிருந்து…

மொகலாய ஆட்சிக்குட்படாத பகுதிகளில்தான் அதிகமான மதமாற்றம் நடந்துள்ளது

இர்பான் அலி எஞ்சினியர்

“இசுலாமிய மக்களும் இசுலாமிய பயங்கரவாதமும்” எனும் தலைப்பில், மும்பய் நகரில் செயல்பட்டு வரும் “சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையம்” என்ற அமைப்பின் உறுப்பினரும் வழக்குரைஞருமான திரு. இர்ஃபான் அலி எஞ்சீனீயர் உரையாற்றினார். “பயங்கரவாதம், தீவிரவாதம் என்பதெல்லாம் மக்கள் சார்ந்தவையாக இருப்பதில்லை; அரசுதான் பயங்கரவாதியாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுத் தனது உரையைத் தொடங்கினார்.

இர்பான் அலி எஞ்சினியர்
இர்பான் அலி எஞ்சினியர்

“முசுலீம்கள் முரட்டுத்தனமான மத நம்பிக்கை கொண்டவர்கள்; மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள்; இறுக்கமான மதச் சமூகம் முசுலீம் சமூகம். முசுலீம்களின் நாட்டுப்பற்று சந்தேகத்திற்குரியது; முசுலீம் மதமும், கிறித்தவ மதமும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்ததால், அவர்கள் இந்தியாவிற்கு விசுவாசமானவர்களாக இருப்பதில்லை.”

-இந்தப் பொய்களை ஆர்.எஸ்.எஸ். 365 நாட்களும் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறது. பெருவாரியான மக்களும் கூட இந்தப் பொய்களை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், உண்மை மாறானது என்பதற்கு அநேக உதாரணங்களைத் தர முடியும்.

எனது தந்தை – திரு. அஸ்கர் அலி எஞ்சினீயர் கேரள முசுலீம்களின் வாழ்க்கையை ஆய்வு செய்தபொழுது, கேரளாவைச் சேர்ந்த ஒரு முசுலீம் பெண்ணை மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு பேட்டி காணச் சென்றார். அப்பொழுது அந்தப் பெண் மொழி பெயர்ப்பாளரிடம், “மலையாளம் தெரியாத இவர் எப்படி முசுலீமாக இருக்க முடியும்!” எனக் கேட்டார். அப்பெண்ணைப் பொறுத்தவரை மலையாள மொழியையும், முசுலீம்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.

நான் சார்ந்திருக்கும் சமூகம் மற்றும் மதச் சார்பின்மைக்கான ஆய்வு மையத்தின் கூட்டத்தில், “வழிபாட்டு முறையைத் தவிர, வேறெந்த விதத்தில் ஒரு மனிதனின் மதத்தைக் கண்டுபிடிக்க முடியும்” என்ற கேள்வியைக் கேட்டபொழுது, பலரும் பெயரை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்றார்கள்.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த, புகழ்பெற்ற முசுலீம் மார்க்க அறிஞரின் பெயர் லெட்சுமணன். லெபனான் நாட்டில் வாழும் கிறித்தவர்களின் பெயர்களைக் கேட்டால் அவர்களை முசுலீம் என்று நீங்கள் கருதக்கூடம். அப்துல்லா போன்ற பெயர்கள் முசுலீம் மதப் பெயர்கள் அல்ல. அவைகள் அரேபிய மொழிப்பெயர்கள்.

“அடுத்ததாக, தாடி வைத்திருந்தால், அவன் முசுலீம் என்றார்கள். ஆர்.எஸ்.எஸ். காரர்களால் தேசிய விரனாகக் கொண்டாடப்படும் சிவாஜிகூட தாடி வைத்திருந்தார். அதனால் அவர் முசுலீமாகி விடுவாரா?”

அரியானா மாநிலத்தில் உள்ள மேவார் பகுதியில் வாழும் மியோ முசுலீம்கள், மகாபாரத, இராமாயணக் கதைகளைக் கூறுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். மியோ முசுலீம்கள், இந்து முறைப்படி நெருப்பை ஏழுமுறை வலம் வந்தும், இசுலாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இசுலாமிய நெறிமுறைகளைக் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்க வேண்டும் எனப் போதிக்கும் தப்லீக் இயக்கம், மியோ முசுலீம்களை, ‘உண்மையான’ முசுலீம்களாக மாற்ற முயன்றபொழுது, ‘மியோ முசுலீம் மியோவாகவே வாழ்வான்’ எனக் கூறித் திரும்பி அனுப்பிவிட்டனர்.

1980-களில் விசுவ இந்து பரிசத், மியோ முசுலீம்களை இந்துவாக்க முயன்று தோற்றுப் போனது.

குஜராத்தைச் சேர்ந்த பரிணாம் பந்தி முசுலீம்கள் இசுலாமிய -இந்து பாரம்பரியப்படி வாழ்ந்து வருகின்றனர். அந்த முசுலீம் குடும்பங்களில் அண்ணன் குடுமி வைத்திருந்தால், தம்பி தாடி வைத்திருப்பான். இறந்து போனவர்களைப் புதைக்கவும் செய்வார்கள்; எரிக்கவும் செய்வார்கள். அவர்களின் மதக் கோட்பாடு, கீதை, குரான் இரண்டும் கலந்தது. அவர்களின் மதப் புனித நூலை பரிணாம் பந்தி முசுலீம்களைத் தவிர, பிற முசுலீம்கள் கூடத் தொடமுடியாது.

மொகலாய மன்னர்கள் வாள் முனையில் கட்டாயமாக மதம் மாற்றினார்கள் என்பது ஆர்.எஸ்.எஸ்.-இன் குற்றச்சாட்டு. ஆனால் உண்மை என்னவென்றால், மொகலாய ஆட்சிக்கு உட்பட்ட தில்லி, ஆக்ரா பகுதிகளை விட அந்த ஆட்சிக்கு உட்படாத எல்லைப் பகுதிகளில் வங்காளம், பஞ்சாப், எல்லைப்புற மாகாணம் ஆகிய இடங்களில்தான் பெருவாரியான மதமாற்றம் நிகழ்ந்துள்ளது.

சூஃபி ஞானிகள் மனிதத்துவத்தையும், அன்பே கடவுள் என்றும், எல்லோரும் கடவுளை வழிபடலாம் என்றும் போதித்ததுதான் சூத்திர சாதி மக்களை இசுலாத்தை நோக்கி ஈர்த்தது. மத மாற்றம் மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1981-இல் நடந்த மீனாட்சிபுர மதமாற்றம்.

கலாச்சார மாற்றம் இரண்டு அரசியல் காரணங்களுக்காக நடக்கிறது. முசுலீம் மதத்திலுள்ள மேல் சாதியினருக்கு ஷெரீப் முசுலீம்கள் என்று பெயர். ஓரளவு வசதி வாய்ப்பு வரப் பெற்ற கீழ்ச் சாதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்க முசுலீம்கள், ஷெரீப் முசுலீம்கள் போல மாற விரும்புகின்றனர். உடனே, தங்கள் வீட்டுப் பெண்கள் பர்தா அணிய வேண்டும் எனக் கட்டாயப் படுத்துகின்றனர். இரண்டாவதாக, இந்து மதவெறியர்களின் தாக்குதல், சில முசுலீம்களை மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் பக்கம் தள்ளிவிடுகிறது.

இந்த முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது; ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ்.-இன் வளர்ச்சியும், முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் வளர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.
____________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003

____________________________