மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு ! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !
கல்லூரி மாணவர்களை சந்தித்த ‘பெரியார்’
“மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு ! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நடத்தப்பட உள்ள கருத்தரங்கத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பிரசுரங்களை அச்சிட்டு சென்னை மாநகரம் முழுவதும் கொடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மொழிப்போரில் இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடி அதனை வீழ்த்திய மாணவர்கள் மோடி அரசின் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை தந்தை பெரியார் எப்படி நேரடியாக வலியுறுத்தினாரோ அப்படி அணுக வேண்டும் என்பதனால் பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, அம்பேத்கர் சட்டக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, ராணிமேரிக்கல்லூரி ஆகிய இடங்களில் பெரியாரின் வேடமிட்டு பிரசுரங்கள் கொடுத்தோம்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
நந்தனம் கல்லூரி, லயோலா கல்லூரி, சட்டக்கல்லூரி ஆகிய இடங்களில் பெரியார் வேடமணிந்த தோழர்கள் செல்கின்ற மாணவர்களை அழைத்து “நான் இங்கே நின்னுகிட்டு இருக்கேன், இங்க வா, இந்த பிரசுரத்தைப்படி, என்ன புரியுது சொல்லு” என்று கேட்டார்கள். மாணவர்களும் பெரியார்களிடம் மரியாதையுடன் பதில் சொல்வது என்றும் தங்கள் சந்தேகங்களை கேட்டுத்தெளிவு பெறுவது என்றும் இருந்தனர். பல மாணவர்கள் தாங்கள் கருத்தரங்கத்திற்கு வருவதாகவும் கூறியுள்ளனர். காதில் இயர்போனுடன் சென்று கொண்டிருந்த ஒரு மாணவியை பெரியார் அழைத்து “முதல்ல ஹெட்போனை கழட்டு, உன்னை, நீ பேசுற மொழிய ஒருத்தன் அவமானப்படுத்துறான், நீ எதுவுமே தெரியாம இருக்கே” கேட்டவுடன் அந்த மாணவியும் இயர்போனை கழட்டிவிட்டு “ தமிழை கேவலப்படுத்துறவனை செருப்பாலேயே அடிக்கணும்” என்றார்.
பச்சையப்பன் கல்லூரியில் பிரசுரங்கள் கொடுக்கத் தொடங்கியதில் இருந்தே உளவுப்பிரிவு போலீசு ஒருவர் பிரச்சினை செய்து “வேற எங்கேயாவது போய் கொடு, இங்கே கொடுக்காதே” என்றார். பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்று நாம் கூறுவது எதையும் கேட்கவில்லை. போலீசுகாரர்களை கூப்பிட்டு “டேய்! அங்க என்னடா செஞ்சுகிட்டு இருக்கீங்க , இவனுங்களை அடிச்சு வண்டியில ஏத்துங்கடா” என்றவுடன் பெரியார் வேடமிட்ட 7 தோழர்களையும் அடித்து வண்டியில் ஏற்றி ஜி-3 காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு இருந்த ஆய்வாளரிடம் “பெரியார் என்ற ஒருத்தர் இல்லை என்றால் நீங்க இன்ஸ்பெக்டர் ஆக முடியுமா? அவர் வேசம் போட்டதுக்குதான் எங்களை அடிச்ச்சு கைது செய்தீங்களா?” என்றார்கள் தோழர்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அதற்கு பதில் அளிக்காத ஆய்வாளர், தான் வந்த 32 நாட்களில் கல்லூரியில் படிக்கின்ற சூழலை ஏற்படுத்த பாடுபடுவதாகக் கூறி அந்தக் கல்லூரியில் பிரசுரம் கொடுக்கக்கூடாது என்றார். “எங்களை ரிமாண்ட் பண்ணுங்க, வெளியே விட்டா கண்டிப்பாக அந்தக்கல்லூரியில் தான் பிரசுரம் கொடுப்போம். ரிமாண்ட் செய்தாலும் கவலை இல்லை, பெரியார் வேசம் போட்டு அவர் என்ன செய்யச்சொன்னாரோ அதைச் சொன்னதுக்குதானே கைது செய்தீங்க, சிறைக்கு போகிற வரை பெரியார் முகமூடியை கழட்ட மாட்டோம், எங்க பேரையும் சிறை வரைக்கும் பெரியார்ன்னு தான் பதிவு செய்வோம்” என்று வாதிட்டார்கள் தோழர்கள். “சரி கிளம்புங்க, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் கொடுங்க” என்றார் ஆய்வாளர். சொரணை கெட்டுப்போய் இருந்த இந்த சமூகத்தை தொந்தரவு செய்வதுதான் பெரியார் வேலை என்பது தெரியவில்லை ஆய்வாளருக்கு.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அந்தக்காவல் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு 2 கி.மீ தொலைவு, அது வரை நடந்தே சென்று பொது மக்கள் அனைவரிடமும் பிரசுரங்களை கொடுத்தோம். பெரியார் வேடத்தில் இருந்த இளந்தோழர் ஒருவர் கொடுக்கும் பிரசுரத்தை மரியாதையுடன் எழுந்து நின்று வாங்குவது கட்டிப்பிடித்து வாழ்த்துவதும் தாங்களே முன்வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என்றும் மக்கள் ஆதரவளித்தனர். மீண்டும் பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் பிரசுரம் கொடுத்தனர். வெள்ளை சட்டை என்று அழைக்கப்படும் அந்த ஐஎஸ் போலீசு அங்கே போ, இங்கே போ என்று விரட்டிக்கொண்டும் தோழர்களை போட்டோ எடுத்துக்கொண்டும் வழக்கு பதிவு செய்தும் இருந்தார். ஒரு அமைப்பு என்று இருக்கும் நபர்களையே இப்படி காட்டு மிராண்டி போல அணுகும் போலீசு சாதாரண மாணவர்களை எப்படி கொடுமைப்படுத்திக்கொண்டு இருக்கும் என்பதை உணர முடிந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டையை சோதித்து அனுப்புவது முதல் தாமதமாக வரும் மாணவர்களின் அடையாள அட்டைய பிடுங்கி வைத்துக் கொள்வது தினமும் கல்லூரிக்கு வரும் மாணவர்களை பொய் வழக்கில் பிடித்துக்கொண்டு செல்வது வரை அனைத்தும் போலீசு ராஜ்ஜியம் தான் பச்சையப்பன் கல்லூரியில் நடக்கிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டியது.
முன்னெப்போதையும் விட பார்ப்பனீய ஆதிக்கத்துக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் தற்போதைக்கு வந்திருக்கிறது. பெரியார் இப்போதுதானே வர ஆரம்பித்து இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக பார்ப்பனீயமும் அதன் ஊது குழலான போலீசும் வாலை சுருட்டிக்கொண்டுதான் ஆக வேண்டும்.
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675