திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக மதுவிற்கு எதிரான பிரச்சார இயக்கம்!
குடிமகன்களே! நீங்க தள்ளாடும் வரைதான் இந்த அரசு ஸ்டெடியா இருக்கும்,
நமது குடிகெடுப்பதே இந்த அரசு என்பதை உணரும்போது உன் வாழ்க்கை வசப்படும்!
என்கிற முழக்கத்தின் கீழ் திருச்சி பகுதி பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் மூன்று மாத பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இயக்கம் நகர் முழுவதும் வேன் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள், கையெழுத்து இயக்கம் என பல வடிவங்களில் நடக்க இருக்கின்றது.

அம்மா கம்பெனியின் புதிய பிராண்டுகளான அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சூப்பர் மார்க்கெட் என டாடா, பிர்லா கம்பெனிகளுக்கு போட்டியாக அம்மா கம்பெனி பொருட்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
இன்னொரு புறம் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப், சைக்கிள் என விலையில்லா பொருட்களை கொடுத்து மக்களை அரசு வசப்படுத்தி வருகிறது. அம்மா மாறிட்டாரோ என பலரும் வாய்பிளக்கும் வகையில் ஊடகங்களும் செய்திகளை ஊதி பெருக்கி வருகின்றன.
ஆனால் உண்மை நிலை என்ன? அதே ஊடகங்களில் செய்தித்தாள்களில் நாள்தோறும் சொல்லப்படும் விலைவாசி உயர்வு செய்திகளை கவனித்தால் தெரியும். 3 வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். குடிவெறியில் கழுத்தறுத்துக் கொலை, குழந்தைகள் அடித்துக்கொலை, மனைவி துடிதுடித்து சாவு என பிதுங்குகிறது தமிழகம்.
வீடுதோறும் அவலக்குரல், நிம்மதியின்மை தலைவிரித்து ஆடுகிறது. மக்களின் முகத்தில் மகிழ்ச்சியும், நல்ல வாழ்க்கை அமையவில்லையே என்ற ஏக்கமும் ஏற்படுவது ஏன்? மக்களின் வருமானத்திற்கு வேட்டு, இருக்கின்ற வேலைவாய்ப்பும் பறி போகிறது, மானமரியாதையோடு வாழ வழி இல்லை. வழி நெடுக சாராயக்கடைகளை திறந்து வைத்து, ‘குடிக்காமல் போனா உன் குடி வாழ்ந்திடுமா’ என கூப்பிட்டு குடிக்க வைக்குது அரசு.
நாட்டின் வருவாயில் சரி பாதி தொகையான 25,000 கோடி ரூபாயை டாஸ்மாக் மூலமே ஈட்டி வருகிறது. போதாக்குறைக்கு பார் வசதி, நொறுக்குத்தீனி, எலைட்பார், விற்பனை அதிகரிக்க பல IAS ஆபிசர்களுடன் அரசு பெரும்படையே குடிகெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் கள்ளச் சாராயம் கொடி கட்டி பறந்த போது அதை தடுக்க தவறிய அரசு அதிகாரிகளை ஏளனம் செய்யும் விதமாக, எமது தோழமை அமைப்பின் சார்பில் அரசு திறக்கும் சாராயக் கடையில் முதல் விற்பனை மாவட்ட ஆட்சியர், பெற்றுக் கொள்பவர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி என தலைப்பிட்டு சுவரொட்டி ஒட்டினோம். அன்று ஊர் கைகொட்டி சிரித்தது. இன்று ஊரே வாய் பொத்தி நிற்கிறது.
இந்தியாவிலேயே அதிக மது விற்பனை , பள்ளி மாணவன் முதல் தொழிலாளி, பெண்கள் வரை குடிக்க பழக்கிய அரசு என பெருமையுடன் திகழ்கிறது.
இதில் கருணாநிதி, ஜெயலலிதா ஒரே கூட்டாளிகளாக உள்ளனர். ஆட்சி மாறியதும் இவர் வைத்த பெயரை அவர் மாற்றுவதும், இவர் துவங்கிய திட்டத்தை அவர் நிறுத்துவதும் நாடு முழுவதும் நாறிய செய்தி. ஆனால் டாஸ்மாக் விசயத்தில் இருவரும் சேர்ந்தே சாராயத்தை காய்ச்சி விற்கின்றனர்.
மக்கள் சுய நினைவுடனோ சுயமரியாதையுடனோ வாழக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.
நாட்டையும், நாட்டின் வளங்களையும் கோடீஸ்வர முதலாளிகள் சூறையாடவும், அதற்கு தங்கு தடையில்லாமல் சேவை செய்யவும்தான் அரசு மக்களை போதையில் மூழ்கடித்து வருகிறது. இந்த உண்மைகள் மறைக்கும் விதமாக, உங்களிடமிருந்து பிடுங்கும் சாராய வருமானத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கு தொகையை வருடத்திற்கு 8000 கோடியை இலவசமாக, மானியமாக, விலையில்லா பொருட்கள் என மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் இலவச அரிசி என வாய்க்கரிசி போடுகிறது.
உன் விரலை வெட்டி உனக்கே சூப்பு தருகிறது அரசு!
உழைக்கும் மக்களே!
- கையேந்தியது போதும் நமது துயரத்திற்கு காரணமானவன் இந்த அரசு!
- உன் குடிகெட்டு சீரழிய உன் வீட்டு ஆம்பளை மட்டும் காரணமல்ல. அவனை குடிக்க பழக்கி சீரழித்த இந்த அரசின் டாஸ்மாக்கே குற்றவாளி!
- குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கப்படுவதற்கு இந்த அரசும், இவர்களின் எஜமானனுமான முதலாளிகளின் லாப வெறியும், அவர்கள் ஏற்படுத்தும் நுகர்வு வெறியுமே காரணம்!.
- இடிந்து போய் அழுது பயனில்லை, உடைந்து போய் உயிரை விடுவதில் லாபமில்லை!
- முரசு கொட்டி ஊர்க்கூட்டுவோம்! இந்த அரசின் சதிவலையை முறியடிப்போம்! வாரீர்!.
செய்தி :
பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.
தொடர்புக்கு: 9750374810.