Wednesday, April 23, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கருப்புப் பணத்தை பதுக்கும் ரட்சகர் மோடி !

கருப்புப் பணத்தை பதுக்கும் ரட்சகர் மோடி !

-

black money 1து ஒரு காலம். அப்போது பாரதிய ஜனதா தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. குஜராத்தில் இருந்து 56 இன்ஞ்ச் மார்பகம் கொண்ட பயில்வான் ஒருவரை அழைத்து வந்து குஸ்தி களத்தில் இறக்கி விட்டிருந்தது காவி வட்டாரம். பயில்வானின் மார்பகம் மட்டுமல்ல, வாயே 56 இன்ஞ்ச் நீள அகலம் கொண்டது.

ஹரித்வார் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த 15,000 குஜராத்திகளை இன்னோவா காரில் சென்று மீட்டு வந்ததாகட்டும், சீனாவின் பேருந்து நிலையத்தை பெயர்த்தெடுத்து வந்து அகமதாபாத்தில் பொருத்தியதாகட்டும், ஈமு கோழியிடம் தப்பியவர்கள் கூட குஜராத் 56 இன்ச் பயில்வானிடம் தப்ப முடியவில்லை. ஒருவேளை யாருக்காவது சந்தேகம் வந்து விட்டால்? அதற்காக பெந்தேகொஸ்தே சபையின் உத்தி ஒன்றையும் திருடிக் கொண்டனர். ஆப்கோ என்ற நிறுவனத்தை பணிக்கமர்த்தி சில நூறு பேர்களுக்கு கூலி கொடுத்து டிவிட்டர், முகநூல் மற்றும் இன்னபிற சமூகவளைத் தளங்களின் மூலம் தொடர்ந்து ஏமாந்த சோணகிரிகளின் நாடி நரம்புகளில் “வளர்ச்சி” என்ற ஹெராயின் போதையை ஊசி மூலம் ஏற்றி வந்தனர்.

அந்த சமயத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் தான் வென்று பதவியேற்றால் நூறே நாட்களில் வெளிநாடுகளில் பதுங்கிக் கொண்டிருக்கும் இந்திய கருப்புப் பணத்தை அப்படியே கோணிப் பையில் போட்டு அள்ளி வந்து விடுவேணாக்கும் என்று முழங்கினார் இந்த பயில்வான்.

சொக்கிப் போனார்கள் நடுத்தர வர்க்க பார்த்தசாரதிகள். பாபா ராம்தேவ் சொன்னது போல் கருப்புப் பணத்தை கொண்டு வந்து நூற்றி முப்பது கோடி மக்களுக்கும் சரிபாதியா பிரிச்சி(!) ஒவ்வொருத்தர் வீட்டுக் கூரையிலும் ஓட்டை போட்டு உள்ளே போடுவார்கள் என்று நம்பி கூரையை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பொடனியில் ஒரே சாத்தாக சாத்தி தெளி’வைத்துள்ளது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு.

கருப்புப் பணத்தை பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் அரசின் சார்பில் பதிலளித்த காங்கிரசு அரசாங்கம், இந்தியா பல்வேறு நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், இந்த நிலையில் இந்திய அரசின் வசம் உள்ள கருப்பு பண முதலைகளின் பெயர் பட்டியலை வெளியிடுவது மேற்படி ஒப்பந்தத்தை மீறிய செயலாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தது.

பொங்கியெழுந்த ஃபேக் ஐடி போராளிகள், ’எங்காளு மட்டும் வரட்டும் பார்க்கலாம் அடுத்த நிமிசமே ஹெலிகாப்டரில் தொங்கிட்டே போயி எல்லா ரூவா நோட்டுக் கட்டுகளையும் அள்ளி எடுத்தாந்திருவாப்ல’ என்று கொளுத்திப் போட்டார்கள். என்ன ஏது என்று யோசிக்காமல் வழக்கம் போல நம் கோயிந்துகள் சிலரும் கூட மேற்படி பொருளாதார அறிஞர் குழாமின் சவடால்களை தலையில் வைத்து நாடெங்கும் சுமந்து திரிந்தனர்.

தற்போது வழக்கு விசாரணையில், பாரதிய ஜனதா அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய முறை. அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் காங்கிரசு அரசு சொன்ன அதே பதிலை வார்த்தை மாறாமல் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்ததோடு கொடுத்த காசுக்கு மேல் “அப்படி தனிநபர்களின் பெயர்களை வெளியிடுவது அவர்களது அந்தரங்கத்தில் தலையிடுவதாகும்” என்றும் கூவியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் இந்த பேச்சு மாத்தை கேள்விப்பட்ட உடனேயே கொந்தளிக்கத் துவங்கியன. #BJPBlackMoneyDhokha (பாரதிய ஜனதா கருப்புப் பண பிராடு) என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் மக்கள் பாரதிய ஜனதாவை கூறு கட்டி அடிக்கத் துவங்கினர். உடனடியாக இந்த ஹேஷ் டேக் பிரபலமடைந்தது (Trending).

கவிதை போல் கருத்துக்களை பொழிந்துள்ளனர் மக்கள்..

modi black money“நிலக்கரி திருட்டோ, லோக்பாலோ, தகவல் உரிமைச் சட்டமோ, கருப்புப் பணமோ காங்கிரசும் பாரதிய ஜனதாவும் ஒன்று தான் என்று அவர்கள் எப்போதும் பறைசாற்றி உள்ளனர். ஆனாலும், இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் நாம் சந்தோஷப்படுகிறோமா?” – என்கிறார் மணீஷ். (@manishM20)

”அட ஏன்பா #BJPBlackMoneyDhoka நெ 1ஆக ட்ரெண்டிங்கில் இருக்கிறது? நன்றிகெட்ட மக்கள்! அதான் பி.ஜே.பி நிறைய கருப்புப் பணத்தை மீட்டு வந்து தேர்தலில் செலவழித்ததே?” (@salmanSoz)

”ஏன் பி.ஜெ.பி கருப்புப் பணத்தை மீட்க தயங்குகிறது? ஏனென்றால் அது யாருக்கு சொந்தமானது என்பது அவர்களுக்குத் தெரியும்” (AAP_Gladiator)

“எனக்கு எனது 15 லட்சம் வேண்டும்” yogi scotchynath (@scotchism) (அப்போதைய பி.ஜெ.பி இணைய ஃபேக் ஐ.டி கம்பேனியாரின் கணிப்புப் படி மோடி கருப்புப் பணத்தை மீட்டு வந்த பின் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கவிருக்கும் பங்குப் பணம் ரூ 15 லட்சம் என்று கொளுத்திப் போடப்பட்டது)

”Ab Ki Baar, U-turn sarkaar” (@INCIndia)

”ஆமா.. (கருப்புப் பணம் வைத்திருப்போரின்) பேரைச் சொல்லி விட்டால் முழுப் பக்க விளம்பரங்கள் அளிக்க யார் படியளப்பார்கள்?” (@Mohitraj)

“#BJPBlackMoneyDhoka வை பார்த்து தற்கொலைக்கு முயலும் மோடி பக்தர். பரபரப்பு புகைப்படம்” (@Tapan_dalai)

திருப்பியடித்தல் என்பது ஒரு அழகு. அதிலும் ஏமாந்தவர்கள் திருப்பியடிப்பது என்பது பேரழகு. இங்கே ஏமாந்தவர்கள் ஏமாற்றியவனின் அதே சமூக வலைத்தளம் என்ற ஆயுதம் கொண்டு திருப்பிடிக்கிறார்கள் – கொள்ளை அழகு!

மறுகாலனியாக்கப் பொருளாதாரம் மக்களின் பொருளியல் வாழ்க்கையை சமன் குலைத்து தலைகீழாக புரட்டிப் போட்ட ஒரு சூழலில் இரட்சகனாக இறக்கப்பட்டவர் மோடி. சமூக வாழ்க்கையின் சகல அரங்கிலும் மக்கள் ஏமாற்றமடைந்து அதிருப்தியுற்ற நிலையில் ஆளும் வர்க்கத்தால் தன்னை மீட்பனாக மோடி முன்னிறுத்திக் கொண்டதும் எளிய தீர்வுகளை எதிர்பார்த்த மக்கள் அவரை அவ்வாறாகவே கருதியதும் குப்பையைக் கோபுரத்தில் ஏற்றிவிட்டது.

எனினும், வரலாற்றின் போக்கில் இது விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். நாம் விழித்துக் கொள்கிறோமா இன்னும் கனவுகளிலேயே மூழ்கிக் கிடக்கிறோமா என்பது தான் வருங்காலத்தை தீர்மானிக்கும். மோடி ஒரு மோசடி என்பதை நாம் தாமதமாகவேனும் உணர்ந்து கொள்வதோடு, மோடியும் காங்கிரசும் இன்னபிற ஓட்டுக்கட்சிகளும் மக்கள் விரோதிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பித் தேடும் தீர்வுகள் இவர்களிடம் இல்லை. சரியாகச் சொன்னால் தீர்வுகளைத் தடுக்கும் தடைகளே இவர்கள்தான்!

மராட்டியம், ஹரியானா தேர்தல் வெற்றிகளை காவி கூடாரம் கொண்டாடி வருகிறது. காவியின் வண்ணத்தில் கண்களை இழந்த நடுத்தர வர்க்க ரசிகர்கள் சிலர் இந்த வெற்றியை தங்கள் சொந்த வெற்றியாக மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த இரண்டு மாநிலங்களிலும் நெடுங்காலம் ஆட்சியிலிருந்த காங்கிரசு எதிர்ப்பு அலையில் கரையேறியிருக்கும் பாஜகவின் யோக்கியதை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புவர்கள், தேர்தல் முடிவுகளை விடுத்து, கருப்பு பண சவுடால்களை பார்க்க வேண்டும். வெறும் சவுடாலை வைத்தே ஒரு கட்சி நாடாள்கிறது என்றால் அது அந்த கட்சியின் தகுதியை அல்ல, அந்த நாட்டு மக்களின் தரத்தை காட்டுகிறது!