Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்கோவை ஸ்ரீரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் - 60% போனஸ் எப்படி வந்தது ?

கோவை ஸ்ரீரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் – 60% போனஸ் எப்படி வந்தது ?

-

கோவை ஸ்ரீரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அறுபது சதவீதம் போனஸ்…!
சாதனை படைத்த தொழிலாளி வர்க்கம்..!

கோயமுத்தூர் தடாகம் ரோடு கே‌என்‌ஜி புதூர் பிரிவில் அமைந்துள்ளது ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்நிறுவனத்தில் சுமார் 600 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

 ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ்
ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ்

புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணி சங்கத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தில் 2013-14 ஆம் ஆண்டிற்கான போனசை சங்கம் பேசி முடித்துள்ளது. அதன்படி 20 சதவீதம் போனசும் 40 சதவீதம் உற்பத்திக்கான ஊக்கத் தொகையும் தொழிலாளி வர்க்கம் பேசி முடித்து வெற்றி கண்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களது சர்வீசுக்கு ஏற்ப குறைந்த பட்சம் 40 ஆயிரம் ரூபாயும் அதிகபட்சமாக லட்சம் ரூபாய்க்கு மேலும் பெற்றுள்ளனர். சென்ற இரண்டு ஆண்டுகளிலும் இதே போல் அறுபது சதவீதம் போனசை புஜதொமு வழிகாட்டுதலோடு தொழிலாளர்கள் பெற்றுள்ளனர்.

2010ஆம் ஆண்டில் நிறுவனத்தில் நமது சங்கம் மட்டும் ஒரே சங்கமாக இருந்த நிலையில் 76 சதவீதம் போனஸ் பெற்றது. அதன் பிறகு சி‌ஐ‌டி‌யு சங்கம் முளைத்தது. புஜதொமு சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் அடிக்கடி சிறைக்கு போக வேண்டி வரும் புதிய ஜனநாயகம் படி படி என்கிறார்கள். மார்க்ஸ் புத்தகம் படி லெனின் புத்தகம் படி என வற்புறுத்துவார்கள் போஸ்டர் ஒட்டு பிரச்சாரத்துக்கு வா என கூப்பிட்டு நச்சரிப்பார்கள் சீரழிவுகளை சுட்டிக்காட்டி கண்டிப்பார்கள் என்று சில தொழிலாளர்களின் பின்தங்கிய உணர்வை சாதகமாக்கி அவர்களின் பின்தங்கிய உணர்வை தாங்கிப் பிடித்து அதற்கேட்ப தங்களை தகவமைத்து சி‌ஐ‌டி‌யு சங்கத்தை கட்டினார்கள். (இது ஏதோ போலிகளை பழிக்க கூறும் வார்த்தைகள் அல்ல அப்பட்டமான உண்மை) அதனால்தான் 76% எனும் நிலை மாறி 60% ஆகியது.

இந்த 60% போனஸ் என்பது தமிழக வரலாற்றில் இத்துணை எம்‌எல்‌ஏ எம்‌பி வைத்திருக்கும் எந்த ஓட்டுக்கட்சி சங்கமும் சாதிக்கவில்லை.

இதற்கு SRI தொழிலாளர்கள் கடும் போராட்டங்களை நடத்தினார்கள். 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவைச் சிறையையும் சேலம் சிறையையும் அலங்கரித்தனர். சங்க முன்னணியாளர்கள் பலமுறை கோவைச் சிறையில் அடைபட்டு போராடினர். அடிதடி வழக்கு முதல் அனைத்து வழக்குகளுக்கும் நீதி மன்றத்துக்கு இன்று வரை மாதந்தோறும் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த 60% போனசுக்கு பின்னால் மிகப்பெரிய தியாக வரலாறு உள்ளது. ஆனால் சி‌ஐ‌டி‌யு வினர் மீது இது வரை எந்த வழக்கும் இல்லை.அத்துணை பாதுகாப்பாகவும் திறமையாகவும்(!) போலிகள் சங்கம் நடத்தி வருகின்றனர்.

தில்லைக் கோயில் போராட்டத்தில் தமிழ் மொழி உரிமைக்கான போராட்டத்தில் இன்றும் SRI தொழிலாளர்கள் 25 பேர் மீது வழக்கு உள்ளது. இதில் சிறைக்கு போன தொழிலாளர்கள் மீது SRI நிர்வாகம் உள்துறை விசாரணை நடத்தி இரண்டாம் காரணம் கோரும் நோட்டீஸ் கொடுத்துள்ளது. அது மட்டுமல்ல புஜதொமு தலைமை அறிவிக்கின்ற தமிழகம் தழுவிய அனைத்து போராட்டங்களிலும் SRI தொழிலாளர்கள் கலந்து கொண்டு போராடுகிறார்கள்.

இது போல தொழிலாளர்கள் புஜதொமு தலைமையின் வழிகாட்டுதலில் ஒற்றுமையோடு இருப்பதால்தான் இந்த பொருளாதார ரீதியான வெற்றி கிடைத்துள்ளது. “சுமக்கிறது ஆனையாம் முக்கறது நரியாம்” எனும் முதுமொழிக்கேற்ப யானை தன் முதுகில் பெரும் பாரத்தை சுமந்து கொண்டு அமைதியாக நடந்ததாம். கூடவே சுமையின்றி நடந்த நரி “ஐயோ அம்மா… தாங்க முடியலையே” என முக்கி கொண்டே நடந்த கதையாகத்தான் இங்கு சி‌ஐ‌டி‌யு சங்கம் உள்ளது.

“நவீன தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் உழைப்பை விற்பதன் மூலமே உயிர்வாழ முடியும்; மூலதனத்தை இவர்கள் உழைப்பின் மூலம் அதிகரிக்க முடிகிற வரையில் தான் இவர்களுக்கு வேலை கிடைக்கும்” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை விளக்குகிறது. இதனை SRI தொழிலாளர்கள் உணர்ந்தே உள்ளார்கள்.

உடனடி நோக்கங்களைப் பெறுவதற்காக தொழிலாளி வர்க்கத்தின் தற்காலிக நலன்களை காப்பாற்றுவதற்காக கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். ஆனால் இந்த நிகழ் காலத்தின் இயக்கத்திலேயே வருங்கால இயக்கத்தையும் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள்; பாதுகாக்கிறார்கள்.

தங்களுக்கான போனசை சம்பளத்தை சிறப்பாக போராடி பெறுவது மட்டுமல்ல; தங்களை அடிமையாக்கி வைத்துள்ள கூலி அடிமை சமூகத்தையே இல்லாமல் செய்வதுதான் நமது சங்கத்தின் இலட்சியம்.

21-10-2014 அன்று தினகரனில் வந்த செய்தி

sri-news

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை