Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சிஆர்ஐ பம்ப்ஸ்... தொழிலாளிகளிடம் எடுபடாது உன் வம்பு !

சிஆர்ஐ பம்ப்ஸ்… தொழிலாளிகளிடம் எடுபடாது உன் வம்பு !

-

cri-ndlf-union-stand-1

சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ் நிறுவனத்தில் உயர்ந்த செங்கொடி..!

கோயமுத்தூர் சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ் நிறுவனத்தின் ஒரு கிளை அமைந்துள்ளது. இதில் சுமார் 150 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மேற்படி நிறுவனத்திற்கு சின்னவேடம்பட்டி உள்பட ஆறு கிளைகள் கோவையில் மட்டும் இவை போக சீனா வில் ஒரு கிளை என மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. கோவையில் பம்ப் உற்பத்தியில் தன்னிகரற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்த பிரமாண்டமான வளர்ச்சிக்கு சின்னவேடம்பட்டி கிளைத் தொழிலாளர்களே அடித்தளமாக உள்ளனர்.

டி‌வி விளம்பரங்களில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் “சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ்” எனப் பெருமிதமாக அறிவித்து கம்பீரம் காட்டுவார்கள். ஆனால் இத்துணை பெருமைகளையும் உணர்வோடு உழைத்து உயிரால் இழைத்து இந்நிறுவனத்தை வளர்த்தெடுத்த கொணர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான சீருடை இல்லை. பாதுகாப்பு காலணிகள் இல்லை, நியாயமான சம்பளம் இல்லை. 480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் இல்லை. இதனால் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் கோபம் கொண்ட முதலாளி சௌந்திரராஜன் கம்பெனி பக்கமே கடந்த 2½ வருடங்களாக வருவதே இல்லை. சங்கத்தை அங்கீகரிக்கவும் இல்லை. கம்பெனியின் முன்னால் தொழிற் சங்க கொடி மரமும், பெயர்ப்பலகையும் வைப்பதற்கு சரவணம்பட்டி காவல்துறை மூலம் தடுத்து விட்டார். சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ் என்பது ஒரே நிறுவனம். ஒரே பதிவு எண்ணில் செயல்படுகிறது. ஆனால் போனசை பொறுத்த மட்டில் இதர ஆறு கிளை நிறுவனங்களுக்கும் 30% போனஸ் வழங்கப்படும். உரிமை கேட்ட சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் நட்டக் கணக்கு காட்டி 8.33% போனஸ் கொடுப்பார்கள்.

நாம் தொழிலாளர் துறையில் சமரச அதிகாரி முன்பு தொடர்ந்து கம்பெனியின் வரவு செலவு அறிக்கை கேட்டோம். நிர்வாகத்தின் பிரதிநிதி வெள்ளைத் தாளில் ஒரு பக்கம் கையால் எழுதி இதுதான் பேலன்ஸ் ஷீட் என தாக்கல் செய்து நட்டக் கணக்கு காட்டினார். உலகம் முழுவதும் வியாபாரம் செய்கிற கார்ப்பரேட் நிறுவனம் குறைந்தபட்ச உரிமைகளான சீருடை காலணி கேட்டதற்கு வெள்ளைத்தாளில் தனது வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த செயல் குறித்து துளி கூட கேவலப்படவே இல்லை. உடனே சங்கத்தின் சார்பில் சி‌ஆர்‌ஐ நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட் விவரங்களை எடுத்து தாக்கல் செய்தோம். உடனே நிர்வாகம் எரிச்சல் அடைந்து மழுப்பியது. தங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது என அவர்கள் தணிக்கை அறிக்கையின் மூலமே நிறுவினோம். ஆனாலும் கூடுதல் போனஸ் தர முடியாது என்றனர்.இரண்டு முறை சமரச அதிகாரி முன்பு மீறிவு அறிக்கை பெறப்பட்டு சென்னைத் தீர்ப்பாயத்தின் முன் வழக்கு நிலுவையில் உள்ளது.

மூன்றாவது முறையாக இந்த வருடமும் 2013-2014 சின்ன வேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% போனஸ் அறிவித்து இதர கிளைகளுக்கு 30% மேல் போனஸ் வழங்கினர். சங்கத்தை கலைத்து விட்டு வாருங்கள் மொத்தமாக எல்லா போனசையும் வழங்குகிறோம் என நிர்வாகம் தனது அல்லகைகள் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறது.

மூன்றாவது முறையும் நிர்வாகம் குறைந்த போனசை வழங்கி தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்தமைக்கு பதிலடி கொடுக்க சங்கம் முடிவு செய்தது.

cri-ndlf-union-stand-4

கொடிக்கம்பம், அறிவிப்பு பலகை வைக்க தடையாக இருக்கும் மாநகராட்சி, சரவணம்பட்டி காவல்துறை, நிர்வாகம் என அனைவரையும் எதிர்த்து நிற்பது எனவும் மீறுவது எனவும் முடிவு செய்தோம்.

cri-ndlf-union-stand-3

21-10-2014 அன்று காலை 8 மணிக்கு கம்பெனி முன்பு புஜதொமு பெயற்பலகையும், அரிவாள் சுத்தியல் பொறித்த செங்கொடியை ஏற்றி பறக்க விட்டு வயிற்றில் அடித்த முதலாளிக்கு நெற்றியில் அடித்து பதில் சொன்னோம்.

cri-ndlf-union-stand-6

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் தோழர் இராஜன் பெயர்பலகை திறந்து வைத்தார். மாவட்டக் குழு தோழர்கள் கோபிநாத், சத்தியநாராயணன் முன்னிலை வகித்தனர். சி‌ஆர்‌ஐ கிளைச் செயலாளர் தோழர் குமாரவேல், கிளைத்தலைவர் தோழர் மூர்த்தி மற்றும் தோழர்கள் ரமேஷ், நாகராஜ் எனத் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

cri-ndlf-union-stand-2

22-10-2014 தினகரனில் வந்த செய்தி

news

கோவையின் SRI கிளையில் தமிழகத்திலேயே அதிகமான போனசாக 60% பெற்று கொடுத்து புஜதொமு வல்லமை பெற்று திகழும் அதே கோவையில் இன்னொரு நிறுவனமான் சி‌ஆர்‌ஐ கிளையில் மிகக் குறைந்த போனசை மூன்று வருடங்களாக பெற்று முதலாளித்துவத்தின் கொடுந்தாக்குதலுக்கு ஆட்பட்டும் ஒற்றுமை குலையாமல் உறுதியாக உயர்ந்து நிற்கிறது. முதலாளிகளின் லாப வெறிக்கு வரைமுறையோ எல்லைகளோ இல்லை. லாபம் சம்பாதிக்க லாபத்தின் அளவை அதிகர்க்கவும் எந்த ஒரு இழி செயலைச் செய்யவும் முதலாளிகள் தயங்குவதில்லை. சமூக மாற்றமெனும் உன்னத லட்சியத்தில் ஊன்றி நிற்கும் நம் சங்கம் முதலாளிகளை எதிர்த்த போராட்டங்களை அதன் முடிவு வரை நிச்சயம் கொண்டு செல்லும்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை