ஊழல் என்றால் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் தான் இருக்கும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் ஊழலோ முறைகேடுகளோ நடைபெற வாய்ப்பே இல்லை என முதலாளித்துவ அறிஞர்கள் வாய்ப்பந்தல் போடுவார்கள். அவர்களது முகத்தில் மீண்டுமொரு முறை கரி பூசியிருக்கிறது ஜப்பானில் சமீபத்தில் வெளியான தேர்தல் நிதி முறைகேட்டு ஊழல். இது தொடர்பாக இரு ஜப்பானிய பெண் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

சொர்க்கம் என்பது அமெரிக்காவில் நிலவுவதாக நம்புவது போல உழைப்பு, சுறுசுறுப்பு, சட்டப்படி நடப்பது, வேலை நடத்தம் நடக்காத நாடு என ஜப்பானை காட்டுவார்கள். ஒரு வகையான அடிமைத்தனத்தையே இது சுட்டுகிறது என்றாலும் ஜப்பானை எல்லாவற்றுக்குமான சிட்டுக்குருவி லேகியமாக அதியமான் தொட்டு இறையன்பு ஐஏஎஸ் வரையிலான முதலாளித்துவ வகையறாக்கள் ஓதுவதும் வழக்கம்தான். இந்த நம்பிக்கைகளில் பல யாரும் கேட்டோ பார்த்தும் இராத கர்ண பரம்பரைக் கதைகள்தான்.
நம் ஊரில் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை பெரிய ஊழலாகவும், ஏதோ உலகத்திலேயே இந்தியாவில் தான் அரசியல் கட்சி மோசடிகள் நடப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன. இதை நாம் மறுக்க வேண்டியதில்லை. ஜப்பான் எனும் முன்னேறிய நாடே மறுத்திருக்கிறது.
பதவி விலகியிருக்கும் வர்த்தக மற்றும் நிதித்துறை அமைச்சர் யுகோ ஒபுச்சியின் வங்கிக் கணக்கில் 2012 தேர்தலுக்கு முன், 4,24,000 டாலர்கள் வித்தியாசம் இருந்தது. என்ன என்று விசாரித்த எதிர்க்கட்சிகள் அவரது ஆதரவாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு திரையரங்குகளுக்கு சென்று வர இலவச டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி கொடுத்திருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். இதுபோக 35,000 டாலர் பெறுமான பொருட்களை அவரது சகோதரியின் கணவரது கடையில் இருந்தும் கொடுத்திருக்கிறார்.
இதெல்லாம் கடந்த வாரம் வெளியான உடன் அதுவரை ஜப்பானின் முதல் பெண் பிரதமராக வர வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட இவர் கண்ணீர் மல்க தன் மீது எந்த குற்றமும் இல்லை என்றும், ஆனால் தன் ஆதரவாளர்கள் செலவழித்த காரணத்தால் பதவி விலகுவதாக குறிப்பிட்டார். வளர்ப்பு மகன் திருமணத்திற்கு தான் செலவு செய்யவில்லை, மற்றவர்கள்தான் என ஜெயா சொன்னது போன்ற அதே வாக்குமூலம்.

முன்னாள் பிரதமர் கெய்சோ ஒபுச்சி (1998-2000) இளைய மகளான இவர் தான் புகுசிமா அணுஉலை விபத்தின் மீட்பு பணிகளுக்கான பொறுப்பிலும் இருந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜப்பானில் பெண்கள் வேலைக்கு செல்வது கணிசமாக குறைந்து வருவதால் அதனை ஊக்குவிக்கும் பொருட்டு அபே அபேனாமிக்ஸ் என்ற தனது கொள்கையின் ஒரு பகுதியாக ஐந்து பெண் அமைச்சர்களை நியமித்தார். இதனை உமனாமிக்ஸ் என்றும் பெயரிட்டு அழைக்கின்றன ஊடகங்கள். அதில் திறமையாக செயல்படுவதாக கூறிதான் இவரை கடந்த மாதம் காபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருந்தார்.
பெண்கள் தங்களது திறமையை காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தில் தன்னால் ஒளிர முடியவில்லை என கண்ணீர் மல்க டிவிக்கு பேட்டி கொடுத்து விட்டு பதவி விலகியிருக்கிறார் ஒபுச்சி. ஜெயாவும் கூட தமிழக மக்களுக்கு சேவை செய்வதையே தன் மீதான வழக்கில் கூறியிருக்கிறார்.
இவரை அடுத்து நீதித்துறை அமைச்சர் மிடோரி மிட்சூஷிமா பதவி விலகினார். வசந்த கால விழாவின் போது தேர்தல் சமயத்தில் மக்களுக்கு இலவசமாக விசிறிகள், அழகு சாதன பொருட்களை விநியோகித்திருக்கிறார் இந்த சீமாட்டி. கூடுதலாக இவர் முன்னாள் பத்திரிகையாளர் வேறு.
இப்போது யுகோ ஒபுச்சியின் பொறுப்பை ஏற்றுள்ள புதிய யோய்ச்சி மியாசவாவும் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 2010-ல் பாலியல் தொழில் நடக்கும் கிளப்பில் செலவு செய்த தொகையை அவரது அலுவலக அதிகாரி நிர்வாக கணக்கில் இருந்து கொடுத்திருக்கிறார். இவரும் பழைய பிரதமர் ஒருவரின் மருமகன் தான். ஹார்வேர்டில் படித்த பட்டதாரி வேறு. 2012க்கு முந்தைய அபேவின் ஆட்சியில் பல ஊழல் புகார்கள் வெளியாகின. ஒரு அமைச்சர் தற்கொலையே செய்து கொண்டார்.
இன்னும் இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் சிக்குவார்கள் என்கிறார் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த யூகியோ இடானோ. யுகோ ஒபுச்சி காலத்தில் எப்படியாவது மூடிக் கிடக்கும் 38 அணு உலைகளையும் இயங்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்கள். பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தி பலத்த எதிர்ப்பு ஏற்கெனவே அங்கு இருந்து வந்தது. நாட்டின் 25 சதவீத மின்னுற்பத்திக்கும் மேல் இதன் மூலமாகத்தான் முன்னர் கிடைத்து வந்த்து.
யூகோ ஓபுச்சியின் தந்தை பிரதமராக இருந்த போது தான் ஜப்பான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. அவர் அப்போது மக்களை சம்பளத்திற்கு பதிலாக கூப்பன்களை பெற கட்டாயமாக்கினார். அதன் மூலம் நுகர்வு கலாச்சாரத்தை சட்டபூர்வமாக நிரந்தரமாக்கினார். கடன் அட்டைகள் அதிகரித்தன. இன்னமும் அந்த நெருக்கடியில் இருந்து ஜப்பான் மீளவில்லை. இப்போது ஓபுச்சியை வைத்து வைத்து நுகரும் பொருட்களின் மீதான வரியை 2% லிருந்து 10% ஆக உயர்த்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அதற்குள் ஊழலில் சிக்கிக் கொண்டார். இப்போதைக்கு ஜப்பானிய மக்களின் கழுத்துக்கருகில் தொங்கும் கத்தியை எந்த ஆடு வெட்டி வந்து வெட்ட துவங்குவது என்பது தான் பிரச்சினை போல ஆகி விட்டது.

இதுபோக பாதுகாப்பு துறை அமைச்சர் அகினோரி ஈடோவின் தேர்தல் நிதி குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். விற்பனை வரியும் கடந்த ஏப்ரலில் 8% ஆக உயர்த்தப்பட்டது. அடுத்த ஆண்டு அக்டோபரில் அதனை பத்தாக உயர்த்த முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் எல்லாம் 2009 பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளாது என்கிறார்கள். குறிப்பாக மூன்றில் இரண்டு பங்கினர் இரண்டாவது உயர்வை எதிர்த்து வருகின்றனர்.
இதற்கு எதிராக போராடுவதற்கு அங்குள்ள தொழிலாளி வர்க்கம் கூட தயாராக இல்லை. ஆனால் சூழல் அவர்களை அப்படி தள்ளிவிடக் கூடாது என்பதற்காக தேசிய வெறியை கிளப்பும் போர் ஆதரவு கட்சிகளின் கூட்டங்களில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தலைவர்களும், உள்துறை அமைச்சரும் கலந்து கொண்டு கொரியா மற்றும் சீனாவுக்கு எதிராக மக்களை கொம்பு சீவி விடுகின்றனர்.
முதலாளித்துவ பொருளாதாரம் ஜப்பானில் ஒரு புரட்சியின் மூலமாக வரவில்லை. அமைதியான வழிகள் மூலமாகவே வந்ததால் சமூகத்தில் நிலவுடமை சமூகத்தின் பிற்போக்குத்தனங்கள் பல்வேறு அளவுகளில் நிலவுகின்றன. ரஜினி படங்கள் கூட அங்கே ரசிக்கப்படுவதற்கு இப்படி ஒரு அடிப்படை இருக்கிறது. தொழிற்சங்கமோ, வேலைநிறுத்தமோ அங்கே நடைபெறாததற்கும் இதுவே காரணம். முத்து போன்ற பண்ணையார் வகை படங்கள் மொழியே தெரியாமல் தமிழ்நாட்டை விட நன்றாக அங்கு ஓடியதற்கும் அதே நிலபிரபுத்துவ பண்பாட்டு பின்னணிதான் காரணம். இப்போது சிக்கியிருப்பவர்களும் அத்தகைய உயர் குடும்ப பின்னணி கொண்ட நபர்கள் தான். அவர்கள் தான் இரண்டு கட்சியிலும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.
போபர்ஸ் ஊழல் வெளி வந்தபோது எப்பேர்ப்பட்ட ராஜகுடும்பம், அவங்களாவது ஊழலாவது என்று கேட்டார்கள். எங்க அம்மாவுக்கு மைசூர் மகாராஜா கொடுத்த தங்க ஒட்டியானம் என்று விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவுக்கு விளக்கம் சொன்னார் புரட்சித் தலைவி. நான் தப்பு செய்யவில்லை, என் ஆதரவாளர்கள் செய்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன் என்று விடைபெறுகிறார் ஒபுச்சி. அரங்கம்தான் வேறே தவிர, லைட்டும் மாறவில்லை, செட்டும் மாறவில்லை. நாடகத்தின் கதை மட்டும் எப்படி மாறும்?
– கௌதமன்.
மேலும் படிக்க:
Japan minister resigns over misusing govt funds on make-up