கடந்த முறை எங்கள் ஊருக்கு சென்ற போது அங்கு கோவிந்தா கோஷ்டிக்கும் அப்பொழுது புதிதாக வந்திருந்த அல்லேலுயா கோஷ்டிக்கும் நடந்த சண்டைகளை பற்றி சொல்லி இருந்தேன். பல மாதங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு சென்ற போது “கோவிந்தா vs அல்லேலுயா”வாக இருந்த சண்டை இந்த ஒரே வருடத்தில் “கோவிந்தாக்”கள் vs “அல்லேலுயாக்”கள் ஆக வளர்ந்திருந்தது. இது முதல் அதிர்ச்சி; எங்கள் ஊரில் அல்லேலுயா கூட்டத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் சமீபத்தில் திருபெரும்புதூரில் இழுத்து மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை என்பது இன்னொரு அதிர்ச்சி.
ஆமாம் நம்புங்கள், சாட்சாத் பின்லாந்து நிறுவனமான நோக்கியாவே தான்.
திருபெரும்புதூர் சிப்காட்டிற்கு சில கிலோமீட்டர் பக்கத்தில் இருக்கும் எங்கள் ஊரில் இருந்து நோக்கியா நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தவர் கணேசன். இவர் பன்னிரண்டாவது வரை படித்திருக்கிறார். தந்தை இல்லை. கல்லூரிக்குக் கூட போகாத தன் மகன் எதிர்காலம் என்னவாகுமோ என்று கவலைப் பட்டு வந்த கணேசனின் அம்மாவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்தது புதிதாக வந்த நோக்கியா தொழிற்சாலை. கணேசனுக்கு மாத சம்பளம், சீருடை எல்லாம் கொடுத்து அவன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்தது நோக்கியா. அந்த புதிய அத்தியாயம் குறை அத்தியாயமாக கலைந்து விடும் என்று பாவம் அந்த அப்பாவி அம்மாவிற்கு தெரிந்திருக்கவில்லை.
கணேசன் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்று அதோடு கொஞ்சம் கடன் வாங்கி வீட்டை கட்டினான். ஒரு லோன் போட்டு பைக் எடுத்தான். மாதத் தவணைகள் போக மிச்சம் இருந்த ஊதியத்தில் குடும்பம் ஓடியது. அடுத்து கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தான். ஆனால், அப்போதுதான் அவன் தலையில் இடி இறங்கியது.
தொழிலாளர்கள் மத்தியில் நோக்கியா நிறுவனம் மூடப்படப் போகும் தகவல் அரசல் புரசலாக பரவத் தொடங்கியது. கணேசன் வேலை செய்த யூனிட் தான் முதல் பலி. கிட்டத்தட்ட வேலை போகப் போவது உறுதியாகிவிட்டது. மாதத் தவணைகள், கடன், வட்டி, எதிர்காலம் என அனைத்தையும் குறித்து கணேசன் கவலைப்படத் தொடங்கினான். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த நிலை; கணேசனின் அம்மாவுக்கு. மெல்லச் சீராகி வந்த தங்கள் நிலமை மீண்டும் பழைய ஏழ்மைக்கே திரும்ப போகிறதே என்று கவலை. கும்பிட்ட கடவுள் தன்னை கைவிட்டு விட்டதே என்று புலம்ப தொடங்கினார். அப்போதும் இல்லாத கடவுளை மட்டுமல்ல, சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களையும் நம்பக் கூடாது என்று அவர் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.
வினவையே சுற்றி வரும் அறிஞர் பெருமக்களுக்கே மறுகாலனியாக்கத்தின் தாக்குதல் பூமாலையாக தெரியும் போது அந்த அபலை அம்மாவின் அவலத்தை போக்கும் அறிவு யாருக்கு இருக்கும்?
அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்த நம் அல்லேலுயா கோஷ்டியைச் சேர்ந்த கிறிஸ்டி அலயஸ் திரிபுரசுந்தரி அக்காவிடம் கணேசனின் அம்மா புலம்புவது வழக்கம். அந்த அக்காவோ கணேசனின் அம்மாவிடம் மெல்ல கிறிஸ்துவின் மகிமைகளை பற்றியும் ஜபத்தை பற்றியும் விளக்கத் தொடங்கினார், நம் கிறிஸ்டி (இனிமேல் அலயஸ் இல்லை). கணேசனின் தாய்க்கு முதலில் இதில் பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை. ஆனால் கிறிஸ்டியும், நம் அல்லேலுயா ஃபாதரும் தொடர்ந்து பேசி வந்தார்கள்.
“அம்மா, ஒரு 500 ரூபாய் தான் செலவாகும், உங்கள் வீட்டில் ஒரு ஜபக் கூட்டம் வைக்கலாம், உங்கள் மகன் வேலை போகாமல் இருக்க கர்த்தரை கும்பிட்டு ஜபம் செய்தால், கர்த்தர் உங்கள் குடும்பத்தையும் மகனையும் காப்பாறுவார்” என்று ஃபாதர் வற்புறுத்தத் தொடங்கினார்.
கணேசனின் அம்மாவிற்கு முதல் பயம், ஊரில் இருப்பவர்கள் தன்னை ஒதுக்கிவிட்டால்? ஏற்கனவே கிறிஸ்டி வீட்டில் நடந்த கோவிந்தா vs அல்லேலுயா சண்டைகள் பற்றி தெரியும். ஆனால், நம் அல்லேலுயா ஃபாதர் ஜகஜால கில்லாடி ஆயிற்றே. அவர் தன் ஜபத்தால் மேன்மை அடைந்தவர்கள் என ஒரு பட்டியலை கொடுக்க தொடங்கினார், “செட்டியாருக்கு ஜபத்தால் இதயத்தில் இருந்த ஓட்டையை அடைத்தேன், கிறிஸ்டியின் கணவருக்கு எலும்பு முறிவை ஜபத்தால் குணமாக்கினேன், பக்கத்து தெரு சிவாவுக்கு ஜபத்தால் வட்டி தொழிலில் லாபம் வர வைத்தேன்” என அடுக்கத் தொடங்கினார். விட்டால் அம்மாவுக்கு புதுதில்லியில் ஜாமீன் வழங்கியதே ஏசு பெருமான்தான் என்று கூட சொல்வார்.
கணேசனின் அம்மாவிற்கு மனது கரையத் தொடங்கியது. ஜபத்திற்கு இசைந்தார். முதலில் 500 ரூபாய்க்கு ஒரு ஜபம் என்று ஆரம்பித்த ஃபாதர் மெல்ல ஜபக் கூட்டத்தையும் கட்டணத்தையும் அதிகமாக்கி விட்டார்.
“என்ன கணேசா நீ வேலை போகும் என்று சொல்லி 2 மாதம் ஆகிறது, இன்னும் உன் நிறுவனத்தில் அதைப் பற்றி பேச்சே இல்லை பார்த்தியா? எல்லாம் ஜபத்தின் மகிமை, உனக்கு பயமிருந்தால் சொல் இன்னொரு ஜபம் செய்து விடலாம், உன் வேலை உறுதியாகிவிடும்” என ஜபங்கள் வார வாரம் தொடர்ந்தன, ஒவ்வொன்றும் 500 ரூபாய் செலவில்.
நோக்கியா நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை அதிகாரிகள் பிரச்சனை வராமல் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதை பற்றி திட்டமிட எடுத்துக் கொண்ட நேரத்தை நம்ம ஃபாதர் காசாக்கி விட்டார்.
ஒரு நாள் சுபயோக சுபமுகூர்த்த தினத்தில், மூன்று மாதம் சம்பளம், பிஎஃப், இன்னும் கொஞ்ச பணம் கொடுத்து நோக்கியா நிறுவனம் கணேசனை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. நடுத்தெருவில் விடப்பட்ட கணேசனின் வாழ்க்கைக்கு ஈடாக கிடைத்த மூன்று மாத சம்பளம், பிஎஃப் விஷயத்தைப் பற்றி கணேசன் வீட்டுக்கு வந்த ஃபாதர் கேட்டுக் கொண்டார். வேலை போனதை பற்றிய செய்தி சற்றே அதிர்ச்சி; உடனே சுதாரித்தார், “கணேசா பணத்த கம்பேனி கொடுக்கல, நம்ம உண்மைய பண்ண ஜபம், கர்த்தர், உன் கஷ்டங்களுக்கு மனமிறங்கி உன் கம்பனி ஓனர் மனச மாத்தி உனக்கு இப்படி பணம் வர ஏற்பாடு பண்ணியிருக்கார். கர்த்தருக்கு தான் நன்றி சொல்லனும்” சொல்லி வைப்போம் என்று ஃபாதர் அடித்துவிட்டது உண்மையில் வேலை செய்துவிட்டது. கணேசனும் அவன் அம்மாவும் கர்த்தரின் மகிமையில் உருக அவரின் ஆட்டுக் குட்டியாகி விட்டார்கள்..
வந்த பணத்தில் பத்து சதவீதத்தை சர்ச்சுக்கு நன்கொடையாக கொடுக்கக் கோரினார் ஃபாதர். இல்லை, இல்லை ஆணையிட்டார். நடந்தது. கணேசனை ஒரு பெட்டிக் கடை போடச் சொன்னார், இனி தவறாமல் ஜபம் செய்யவும், மாதம் குறிப்பிட்ட அளவு நிதியை கர்த்தருக்கு அளிக்கவும் செய்தால் கணேசன் பெரிய பணக்காரன் ஆகிவிடுவான் என அல்லேலுயாவில் சேர்த்து விட்டார்.
கணேசனின் ஜபம், திடீரென வந்த பணம் எல்லாம் கிறிஸ்டி, கணேசன், கணேசன் தாயார் , ஃபாதர் மூலம் ஊர் முழுவதும் பரப்பப்பட்டது. ஊரில் பலரும் கடன் தொல்லை, விவசாய பிரச்சனை, வரதட்சணை பிரச்சனை, வருமானத்தை பெருக்கிக் கொள்ள என்ற பல பிரச்சனைகள் மற்றும் ஆசைகளை தலையில் போட்டு குழம்பியபடி உட்கார்ந்திருப்பதை பார்த்த ஃபாதர் பல புதிய ஜபங்களை அறிமுகப்படுத்தி விட்டார்.
100 ரூபாய்க்கு ஒரு ஜபம்- இது குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க, 300 ரூபாய்க்கு ஒரு ஜபம் இது தொழிலில் லாபம் வர, 500 ரூபாய்க்கு ஒரு ஜபம் இது கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க, குழந்தை பாக்கியம் இன்ன பிற இல்லற பிரச்சனைகள் தீர, 1000 ரூபாய் ஜபம் நோய்கள் தீர, 5000 ரூபாய் ஜபம் கேன்சர், இதய நோய் மாதிரியான் கொடிய நோய்களில் இருந்து குணம் பெற என்று ஜபபட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
முதலில் இதனால் பாதிக்கப்பட்டது எங்கள் ஊரில் இருந்த விநாயகர் கோவில் ஐயர்தான், கோவிலுக்கு வரும் பெண்கள் கூட்டம், சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் டல்லடிக்கத் தொடங்கின. அவர் தான் ஊரில் மெல்ல இந்த பிரச்சனையைப் பற்றி ஆரம்பித்து வைத்தார்.
“சரஸ்வதி, மகாலட்சுமி, மழைக்கு ஒரு கடவுள், வெயிலுக்கு ஒரு கடவுள், நோய் தீர்க்க ஒரு கடவுள், என்று முப்பத்து முக்கோடி தேவர்கள் நம் மதத்தில் இருக்கிறார்கள், எனக்கு எல்லாரையும் குளிர்விக்கும் மந்திரங்கள் தெரியும், வேதம் தெரியும், சாஸ்திரங்கள் தெரியும். எல்லாம் இருந்தும், இவர்கள் ஏன் ஒத்த ஜீசஸ் பின்னாடி அலையறாள்? கலி முத்திடுத்து, கலி முத்தினா இப்படித் தான் தெய்வங்கள நிந்திச்சு, ஒருத்தர ஒருத்தர் வெட்டிண்டு சாவப் போறா, ஆனால் நான் இருக்கும் போதேவா அந்தக் கொடுமைகள் இந்த பூமிக்கு வரணும்” என்று கோவிந்தா கோஷ்டிகளை உசுப்பேத்தினார்.
“நாம சுத்தபத்தமா இருக்கோம், நாள் கிழம பாக்கிறோம். ஆனா, ஊரில சோம்பேறிங்க அதிகமாகிடுத்து. குளிக்காம கொள்ளாமா சர்ச்சுக்கு போகலாம், எத வேணா போட்டுக்கலாம், எப்ப வேணாம் கறி தின்னலாம், அதுக்கு அலையற ராட்சஸ ஜென்மங்கள் நம்ம மதத்த கேவலப்படுத்துதுகள்” என கண்ணீர் வடித்தார்.
வீடுகளில் சண்டைகள் அதிகமாகிவிட்டன. இதில் முதல் பலி குழந்தைகள், பல குழந்தைகளுக்கு இரண்டு பெயர்கள், குடியானவர்கள் தெருவில் ஒரு குழந்தைக்கு பெயரே வைக்கவில்லை, சண்டை போய் கொண்டிருக்கிறது. வீடுகளில் இரண்டு பூஜை அறைகள்.
காலையில் சத்தமாக சுப்பிரபாரதம், அதை விட சத்தமாக கிறிஸ்து பாடல்கள். சிறுவர்களுக்கு பரீட்சை என்றால் ஒரு கோஷ்டி கோவிலில் அர்ச்சனை என்று அவர்களை கூட்டிச் சென்றுவிடுகிறது, மறு கோஷ்டி வீட்டில் அதிக மார்க் எடுக்க ஜபம் வைக்கிறது, பிள்ளையை படிக்க விடுவதில்லை.
பண்டிகைகள் என்றால் பெரும் தலைவலி. தீபாவளிக்கு மறுநாள் நோம்பு செய்வார்கள், மகாலட்சுமியை வேண்டி என நினைக்கிறேன். கோவிந்தா கோஷ்டி நோம்பில் மும்முரம் காட்ட, நம்ம ஃபாதர் தீபாவளிக்கு மறுநாள் ஒரு புது ஜபக் கூட்டத்தை அறிமுகப்படுத்தி பிரச்சனையை கிளப்பிவிட்டார். ஊரில் தீபாவளி ரணகளமாகிவிட்டது. மகாலட்சுமி விரதமா, நம்ம ஃபாதரின் புது ஜபக் கூட்டமா என பட்டிமன்றம் லைவில் ஒளிபரப்பாகவில்லை, அவ்வளவுதான்.
தன்னுடைய வருமானம் கணிசமாக குறைவதை பொறுக்க முடியாமல் எங்கள் ஊரில் இருக்கும் ஐயர் எடுத்தார் அவர் அஸ்திரத்தை. கணபதி ஹோமம், சத்தியநாராயண பூஜை, சிறப்பு சரஸ்வதி ஹோமம், கஜ ஹோமம், புஜ ஹோமம் என பெரிய பட்டியல். சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேகங்கள் என அவரும் கிளம்பிவிட்டார்.
ராஜசேகர் தம்பதிகள் எங்கள் ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள். அவர்களின் மகன் சந்தோஷ் பன்னிரெண்டாவ்து வகுப்பு படிக்கப் போகிறான். அவன் கண்டிப்பாக மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்து விட வேண்டும் என்பது அவர்களின் ஆசை. ராஜசேகரின் மனைவி சந்தியா அல்லேலுயாவில் இணைந்து விட்டார். ராஜசேகர் மிகத் தீவிர கிருஷ்ண பக்தர். போதாதா..பிரளையம் வர!
முதலில் சந்தியா சிறப்பு ஜபக் கூட்டம் ஒன்றை தன் விட்டில் நடத்தினார். சுமார் 5,000 ரூபாய் வரை ஃபாதருக்கு கொடுத்தார். ஆனால் பரீட்சையில் சந்தோஷ் எதிர்பாராத வகையில் குறைந்த மதிப்பெண் எடுத்து விட்டான். அதாவது 100-க்கு 99 மதிப்பெண். ஜபத்தை கேலி செய்து கை கொட்டி சிரித்த ராஜசேகர், வீட்டில் சிறப்பு சரஸ்வதி பூஜை நடத்தினார். ஹோமம் வளர்த்து பலருக்கு உணவளித்து சிறப்பாக நடந்த அந்த பூஜைக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகியது. நம்ம ஐயரும் ஒரு பெரிய தொகையை வாங்கி விட்டார்.
நம்புங்கள் அவர்கள் மகன் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துவிட்டான். சரஸ்வதி பூஜை ஜெயித்து விட்டது. இப்பொழுது யேசுவை விட சந்தியாவிற்கு ஈகோ முட்டிக் கொண்டது, ஒரு புது ஜபக் கூட்டம் சில பல ஆயிரங்கள், இந்த முறையும் சந்தோஷ் 100 மதிப்பெண் பெற்றுவிட்டான். ஒரு வழியாக தற்காலிகமாக சண்டை டிராவில் முடிவடைந்தது. இருந்தாலும், நம்ம ராஜசேகர் ஒரு முறை தோற்றதை குத்திக் காட்டியபடி தான் இருக்கிறார்; அது தான் அந்த 99 மார்க்.
ஊரில் பல பிள்ளைகள், வீட்டில் நடக்கும் இந்தப் பிரச்சனைகளால் மன உளைச்சல் அடைந்துள்ளனர். எங்கள் எதிர் வீட்டில் இருக்கும் நிஷா குட்டி நான்காவதுதான் படிக்கிறாள். வீட்டில் கோவிந்தா அல்லேலுயா சண்டை, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவள், ஒரு நாள் வெறுப்பாகி பெற்றோர்களிடம், “இனிமே இப்படியே சண்டை போட்டு ஹெட் ஹேக் (தலைவலி) வரவச்சீங்க, நான் முஸ்லிம் மததுக்கு மாறிப்போய்டுவேன், எம் பேரை ஃபாத்திமான்னு வச்சிப்பேன்” என்று பொருமிவிட்டாள்.
இவர்கள் கூத்துகளை பார்த்துக் கொண்டிருந்தால், பல சுவாரசியமான விஷயங்கள் மனதில் ஓடுகிறது.
பழங்குடி மக்கள், விவசாயம் பார்க்கத் தொடங்கிய போது அவர்கள் விவசாயத்திற்கு உதவும் அனைத்தையும் கடவுளாக வழிபட்டனர். ஆரியர்கள் வருகைக்கு பின், மந்திரங்கள் மூலம் இயற்கையை கட்டுப்படுத்தலாம். மழைக்கு ஒரு கடவுள் அவனை குளிர்விக்க ஒரு மந்திரம், வெயிலுக்கு ஒரு கடவுள் அவனை குளிர்விக்க ஒரு மந்திரம், மலையை குளிர்விக்க ஒரு பூஜை, பாமபை குளிர்விக்க ஒரு பூஜை என வேதங்களையும் தாண்டி பல கடவுள்களையும், பூஜைகளையும், மந்திரங்களையும் யாகங்களையும் உருவாக்கி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கத் தொடங்கினார்கள் பார்ப்பனர்கள்.
உலகெங்கும் எந்த மதமானாலும் இப்படித்தான் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு என்று இப்படியாக தமது கல்லாவை ஓட்டுகின்றன.
பொதுவில் வரலாற்றில் மதங்கள் மக்களின அப்பாவித்தனமான நம்பிக்கையை மேலும் மூட நம்பிக்கையாக்கி தான் தம் இருப்பை உறுதி செய்து கொள்கின்றன. அதனால்தான் மார்க்ஸ் இந்த மதங்களை அபின் என்றார். கூடவே இதயமற்ற உலகின் ஏக்கப் பெருமூச்சு என்றும் அதனை மதிப்பிடுகிறார். அதனால்தான் கம்யூனிஸ்ட்டுகள் மதங்களின் இருப்பை பொருளாதார பிரச்சினைகளின் கட்டமைப்பில் நீடிப்பதாக புரிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள், போராடுகிறார்கள்.
எந்த தந்திரங்களை செய்து ஹிந்து மதம் தன்னை நிறுவிக் கொண்டதோ இன்று அதே தந்திரத்தை கிறிஸ்துவம் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இதில் கிருஷ்ணனை விட கிறிஸ்துவின் மதம்தான் சீனியர். இந்து மதம் உலகின் ஆதிமதம் என்று பீலா விட்டாலும் அது கங்கைக் கரை சப்பாத்தி மற்றும் தயிர் சாத வாடையைத் தாண்டி எங்கேயும் போகவில்லை. கிறிஸ்துவின் அபிமானிகள்தான் முதலாளிகளின் கருவூல மகிமையை பெருக்க வேண்டி
‘ரிஸ்க்’ எடுத்து கடல் தாண்டி, கண்டம் தாண்டி ஜபிக்க வந்தார்கள். வடமொழி மந்திரங்களோ இமயத்தை தாண்டவே முடியாது என்று குந்திவிட்டன.
இதையும் தாண்டி ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் காலரை துக்கி விட்டுக் கொள்ள ஒரு பெருமையான செய்தி இல்லாமல் இல்லை. இந்த அல்லேலுயா கூட்டம் அடித்து விட்டுக் கொண்டிருப்பதெல்லாம் சிறிய அளவு டூபாக்கூர்கள்தான். பாருங்கள், ”மோடி வந்தால் இந்தியாவின் மொத்த பிரச்ச்னைகளும் நொடியில் மறைந்து ராம ராஜ்யம் முளைக்கும்” என்று சொன்னதை விடவா அந்த அல்லேலுயா பாதிரி சொல்லிவிட்டார்?
– ஆதவன்