Thursday, April 17, 2025
முகப்புகலைகவிதைகாலில் விழுந்தால் கௌரவம் - காதலில் விழுந்தால் குற்றமா ?

காலில் விழுந்தால் கௌரவம் – காதலில் விழுந்தால் குற்றமா ?

-

kolkata honourm killing 1காசு பணத்துக்கு மட்டுமல்ல
கௌரவத்திற்கு நட்டம் என்றும்
கள்ளிப்பால் ஊற்றி
நடக்கின்றன கொலைகள்.

சொந்த சமூகத்தின் கௌரவப்பசிக்கு
தோள்சுமந்த பிள்ளையை
அறுத்துப் போடும் கசாப்புக்காரனுக்குப் பெயர்
‘மானஸ்தன்’.

‘காலில்’ விழுவதை
கௌரவமாய் ஏற்கும் சாதி
‘காதலில்’ விழுவதை
சமூகக் குற்றமாக்கி
உறவையே கொளுத்துவதற்குப் பெயர்
‘வீரம்’.

இலவசம் வாங்கவும்
இட ஒதுக்கீடு கோரவும்
வெட்டிப் பெருமையை வீசிவிட்டு
ஒடுக்கப்பட்டதாக
பேசுவதன் பெயர்
கௌரவமா காரியவாதமா?

விளைநிலத்தின் நாளத்திற்குள்
ஓடும் நீரை
அத்துமீறி உறிஞ்சிடும்
கோக்கையும் பெப்சியையும் கண்டு
கொதிக்காத கௌரவம்
காதலின் தவிப்புக்கு
‘ரெட்டைக்குவளை’ வைக்கிறது.

விதையையும் விவசாயத்தையும்
தனதாக்கிக்கொண்டு
உழவனின் மரபுரிமையை மறுக்கும்
மூலதனத்தின்
கழுத்தில் விழாத
கௌரவக் கயிறுகள்
‘சாதி மறுப்பை’
தேடிப்பிடித்து தூக்கிலிடுகின்றன.

“தேசத்தின் கௌரவம்” காக்க
காதலர் தினத்து இளைஞர்களை
கைப்பிதுங்க
தாலியோடு துரத்தும்
காவிப்புலிகள்
கௌரவக் கொலையாளிகளின்
மீசைக் குகைக்குள்
பதுங்கிக் கொள்கின்றன.

PAKISTAN-WOMEN-CRIME-PROTESTசேரியை எரிக்கவும்
காதலைப் பிரிக்கவும்
செயல் ஊக்கத்தையே
சாதிக்கணக்கெடுப்புகள்
கூடுதலாய்த் தந்துள்ளன.

பள்ளிப் பதிவேட்டிலிருந்து
சாதியை நீக்கினால்
ஒழியுமா இந்தக்கொலைகள்
பிறப்பிலும் இறப்பிலும்
பேசும் மொழியிலும்
சாதியை தீண்டாமையை
நஞ்சாய்க்கலந்திட்ட பார்ப்பனியத்தை
சரித்திரத்திலிந்தே நீக்கவேண்டும்
சட்டம் செய்து அல்ல
யுத்தம் செய்து!

– கோவன்