குண்டர் சட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

செப்டம்பர் 21 அன்று அவரைக் கடத்திச் சென்ற போலீசு குண்டர் சட்டத்தில் சிறைவைக்கப் போகிறது என்பதை ஊகித்து, செப்டம்பர் 25 அன்று இதற்கு உயர்நீதி மன்றத்தில் தடை பெறப்பட்டது. மூக்குடைபட்ட போலீசும், மாவட்ட நிர்வாகமும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கிரிமினல்தனமாக யோசித்தன. எழுத்துப் பூர்வமான உயர்நீதிமன்ற உத்தரவு கைக்கு கிடைப்பதற்குள் சிவாவை சிறை வைத்து விடவேண்டும் என்று திட்டமிட்டு செப்டம்பர் 26 அன்று அவசரம் அவசரமாக அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து, வெற்றிப் பெருமிதத்தில் ஆழ்ந்தன.
இந்த சட்டவிரோதக் காவலுக்கு எதிராகப் போடப்பட்ட மனு நவம்பர் 11-ம் தேதியன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிவா விடுதலை செய்யப்படுவது உறுதி என்று தெரிந்தவுடனே, “சிவாவைக் குண்டர் சட்டத்தில் சிறை வைக்க மாவட்ட ஆட்சியர் போட்டிருக்கும் உத்தரவை, நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை” என்று பல்டியடித்து, கலெக்டரை நட்டாற்றில் விட்டது தமிழக அரசு.
இதன்படி சிவாவை உடனே விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் கிரிமினல்தனமாக யோசித்த அதிகாரவர்க்கம், தமிழக அரசின் இந்த உத்தரவை சிறைக்கு அனுப்பாமல் வேண்டுமென்றே இழுத்தடித்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாக எச்சரித்த பின்னர் நவம்பர் 17-ம் தேதி வேறு வழியின்றி சிவா விடுவிக்கப்பட்டார்.
தங்களுக்குச் சட்டத்தின் ஆட்சி என்பதில் கடுகளவும் நம்பிக்கை கிடையாது என்பதுடன், மூளையோ, நாணயமோ, தன்மானமோ கிடையாது என்பதையும் போலீசும் அதிகார வர்க்கமும் தம் சொந்த செயல்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். சிவாவின் விடுதலையை விடப் பெரிய வெற்றி இது.
-பு.ஜ. செய்தியாளர்
_______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
_______________________________