Saturday, April 19, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரஸை விடக் கொடியது!

அமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரஸை விடக் கொடியது!

-

லகையே அச்சுறுத்திச் சென்ற பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களின் வரிசையில் புதிய வரவாகச் சேர்ந்திருக்கிறது எபோலா எனப்படும் இரத்த ஒழுக்கு தொற்றுநோய். காங்கோவின் எபோலா நதிக்கரையையொட்டி 1976-களில் தோற்றமெடுத்த இந்த உயிர்க்கொல்லி நோய், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவ்வப்பொழுது பரவி ஏறத்தாழ 2,500 பேரைப் பலிகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலைமையோ முன்பைவிட அச்சமூட்டுவதாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நைஜீரியா, லைபிரீயா, செனகல், சியாரா லியோன், கினியா ஆகிய நாடுகளில் பரவத் தொடங்கிய இத்தொற்றுநோய்க்கு இதுவரை 5,000 பேர் பலியாகியுள்ளனர்.  அடுத்த டிசம்பர் மாதத்திற்குள் இச்சாவு எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுவிடும் என்பதோடு, உலகமயத்தின் விளைவாக நோயும் கண்டம் விட்டு கண்டம் பரவிவிடும் என்ற அச்சமும் உலகெங்கிலும் பரவியிருக்கிறது.

14-ebola-africaஆப்பிரிக்க கருப்பின மக்களை அடிக்கடித் தாக்கி வரும் எபோலா நோய் கண்டுபிடிக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்நோயை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளோ, தடுப்பூசிகளோ ஆராய்ச்சி நிலையைத் தாண்டி அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை. இந்த அலட்சியத்திற்கு மருந்து உற்பத்தியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் நிறவெறியும் இலாபவெறியும்தான் காரணமாகும். குறிப்பாக, கனடா அரசின் பொது சுகாதாரத் துறை பத்தாண்டுகளுக்கு முன்பே இந்நோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்கி அதற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளபோதும், அம்மருந்தினை உற்பத்தி செய்யும் உரிமையை கனடா அரசிடமிருந்து பெற்றுள்ள நியூலிங்க் ஜெனடிக்ஸ் என்ற அமெரிக்க மருந்து கம்பெனி. அம்மருந்தை சந்தைக்குக் கொண்டுவராமல் முட்டுக்கட்டை போட்டுவருகிறது. ஏகாதிபத்திய கம்பெனிகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் சொத்துடமை சட்டத்தைப் பயன்படுத்தி நியூலிங்க் நிறுவனம் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டு, கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைச் சோதித்துப் பார்க்கக்கூட முடியாதபடி தடைபோட்டு வருவதாக மேற்குலக அறிவியலாளர்கள் பலரும் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மருந்தே இல்லாத இந்த நிலையும்; தனியார்மயம்-தாராளமயம் ஆப்பிரிக்க கண்டத்து நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் வறுமையும் ஏழ்மையும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளும்; உள்நாட்டுச் சண்டையாலும் ஏகாதிபத்திய கொள்ளையாலும் அந்நாடுகளின் அரசுகள் போண்டியாகி நிற்பதும்தான் நோய் தீவிரமாகப் பரவுவதற்கும், சாவு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.

14-ebola-us51 மருத்துவர்களே உள்ள லைபீரியாவிற்கும் (மக்கள்தொகை 42 இலட்சம்) 136 மருத்துவர்களே உள்ள சியாரா லியோனுக்கும் (மக்கள்தொகை 60 இலட்சம்) இப்பொழுது உடனடியாகத் தேவைப்படுவது மருத்துவர்களும், தாதிகளும், அடிப்படையான சில மருந்துகளும்தான். எபோலா நோயை எதிர்கொள்ளக்கூடிய முழுத் திறன் தன்னிடம் இல்லாதபோதும், இந்த மனிதாபிமான உதவியைச் செய்வதற்காக மருத்துவர்களையும் தாதிகளையும் கியூபா அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால், எபோலா வைரஸின் காப்புரிமையையும், அந்நோய்க்கான மருந்து உற்பத்தி உரிமையையும் பெற்றுள்ள பெரியண்ணன் அமெரிக்காவோ லைபீரியாவிற்கு மருத்துவ உதவி என்ற போர்வையில் 3,000 சிப்பாகளைக் கொண்ட படையணியை அனுப்பி வைத்திருக்கிறது.

ஏழை நாடுகள் மீதான தனது இராணுவத் தலையீடை மனித உரிமை, ஜனநாயகம் என்ற பெயரில் நியாயப்படுத்தி வரும் அமெரிக்காவுக்கு, அவசரகால மருத்துவ உதவி என்ற புதிய முகாந்திரம் கிடைத்திருக்கிறது.  இதனாலேயே, மனிதப் பேரழிவாகக் கருத வேண்டிய இந்நோய்த் தாக்குதலை, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாக, தீவிரவாதத் தாக்குதலைப் போல வரையறுத்துள்ளன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள்.
_______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
_______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க