Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கோவையில் பு.ஜ.தொ.மு முற்றுகைப் போராட்டம்

கோவையில் பு.ஜ.தொ.மு முற்றுகைப் போராட்டம்

-

கார்ப்பரேட் முதலாளிகள் இந்தியத் தொழிலாளர்களை எந்தவிதமான தடையும் இல்லாமல் கொள்ளையடிக்க ஏதுவாக  நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தொழிலாளர் நலச் சட்ட திருத்தங்களை நிறைவேற்ற உள்ளது, மத்திய அரசு. இதன் மூலம் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் உரிமைகள் பறிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் அமுலானால் ஏற்படவிருக்கும் விளைவுகள் :

  • எட்டு மணி நேரம் வேலை என்பது பறிபோய் தினசரி 15 மணிநேரம் வேலை செய்வது கட்டாயமாக்கப்படும்.
  • தொழில் பழகுநர் (அப்ரண்டிஸ்), பணி நிரந்தரம்  என்பது ஒழிக்கப்பட்டு  அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்த (காண்டிராக்ட்) முறை  நிரந்தரமாகும்.
  • தொழிற்சாலை ஆய்வாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டு தொழிலாளர்களது உயிருக்கும், வேலைக்கும் உத்திரவாதம் இல்லாமல் போகும்.
  • பெண்களை இரவுப் பணியில் ஈடுபடுத்துவது கட்டாயமாக்கி, அதிக வேலைச்சுமை, குறைந்த கூலி கொடுத்து  வரம்பற்ற சுரண்டல் நடத்த முதலாளிகளுக்கு அதிகாரம் தரப்படும்.
  • ஷிப்டு, மிகைநேரப்பணி அனைத்துக்கும் ஒரே சம்பளம் என்னும் கொடூரம் சட்டத்திருத்தம் மூலம் நிறைவேற  உள்ளது.

இது வெறும் சட்டத்திருத்தம் மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியநாட்டின் அனைத்து மக்களின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.

வெள்ளையர்கள் ஆண்ட போது கூட இப்படிஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை.

இதனை எதிர்த்து கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருச்சி பகுதிகளில் உள்ள  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொழிலாளர்கள் சார்பில் காலை 10 மணிக்கு கோவை சிங்கநல்லூர் பேருந்து நிறுத்தம் முன்பாக பேரணி துவங்கி   முற்றுகை போராட்டம் நடத்த காவல்  துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது.

காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. காலை 10 மணியளவில் தடையை மீறி கோவை சிங்கநல்லூர் பேருந்து நிலையம் முன்பு அனைத்துப் பகுதி தோழர்களும் ஒன்றுகூடி மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி அவர்களின்   தலைமையில் பேரணியாகச் செல்ல முற்பட்டனர்.

காவல்துறை தடுத்து நிறுத்தவே, தோழர்கள் அந்த இடத்திலேயே 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். இறுதியில் கைது செய்யப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

kovai-ndlf-demo-03

kovai-ndlf-demo-06

kovai-ndlf-demo-05

kovai-ndlf-demo-09

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.