Saturday, April 19, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!

கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!

-

பால் விலை உயர்வை அடுத்து எந்நேரத்திலும் மின் கட்டண உயர்வு தமிழக மக்களின் தலையில் இறங்கக் காத்திருக்கிறது. கொஞ்ச நஞ்சமல்ல, ஏறத்தாழ 6,805 கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை அறிவித்திருக்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இது குறித்துத் தமிழகத்தின் மூன்றே மூன்று நகரங்களில் மட்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற நாடகத்தையும் நடத்தி முடித்துவிட்டது.  தமிழகத்திலுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தக் கட்டண உயர்வின் பெரும்பகுதியைத் தமிழக மக்களும், சிறு உற்பத்தியாளர்களும்தான் சுமக்க வேண்டியிருக்கும். அதுவும் சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாடகை வீட்டில் வசித்துவரும் குடும்பங்கள் மீது விழப்போகும் மின் கட்டண சுமை அச்சமூட்டக்கூடியதாகவே இருக்கும்.

07-electricity-charges-meetingசென்னை, நெல்லை, ஈரோடு ஆகிய மூன்று நகரங்களில் ஆணையம் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டங்களில், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்  தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் இக்கட்டண உயர்வின் பின்னே உள்ள தனியார்மய பகற்கொள்ளையை அம்பலப்படுத்தியது, அதற்குப் பொதுமக்கள் பெருத்த ஆதரவைத் தந்தது மற்றும் இக்கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஆகியவை காரணமாக இக்கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ 6,854 கோடி ரூபாயாக இருக்குமென்றும், அதனை ஈடு செய்யவே இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக ஆணையம் விளக்கமளித்திருக்கிறது. ஜெயா முதல்வராகப் பதவியேற்றவுடனேயே மின்சாரத் துறையை முந்தைய தி.மு.க. அரசு நட்டத்தில் தள்ளவிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, அதனை ஈடு செய்ய 37 சதவீதக் கட்டண உயர்வைச் சுமத்தினார். அதன் பிறகும் நட்டம் குறையவில்லையென்றால், அதற்கு என்ன காரணம், யார் பொறுப்பு என்ற கேள்விகளுக்கு ஆணையமும் விளக்கம் அளிக்கவில்லை; ஜெயாவின் பினாமி அரசும் பதில் தரவில்லை.

தமிழக மின்சார வாரியம் இதற்கு முன்பு நட்டமும் அடைந்திருக்கிறது, இலாபமும் சம்பாதித்திருக்கிறது. அப்பொழுது ஏற்பட்ட நட்டத்திற்கு மின் கடத்தலில் ஏற்படும் இழப்பு, மின் திருட்டு, அதிகாரிகளின் ஊழல் உள்ளிட்டுப் பல காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்கள் இப்பொழுதும் நீடித்தாலும், மின் வாரியம் தற்பொழுது சந்தித்துவரும் நட்டம் அதன் தன்மையிலேயே வேறானது. காட் ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து மின்சார உற்பத்தியில் தனியார் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிகவிலை கொடுத்து வாங்குவதற்கு ஏற்பச் சட்டமியற்றப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் தடையற்ற மின்சாரம் வழங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு என்ற இந்த நச்சுச்சுழல்தான் தமிழக மின்வாரியத்தை 2001-02-ம் நிதியாண்டிலிருந்து தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வரும் கட்டமைப்பு நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. அதனால்தான் எத்துணை முறை கட்டண உயர்வை அறிவித்தாலும், இந்த நட்டம் தொடர்கதையாகிவிட்டது.

தனியார் மின்உற்பத்தியாளர்கள், அவர்கள் போட்டுள்ள மூலதனத்தை நான்கே ஆண்டுகளில் எடுத்துவிடும்படி அவர்களிடமிருந்து பெறப்படும் மின்சாரத்திற்குக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இதற்கு அப்பால், அவர்களுக்குத் திறன் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுதோறும் தனியாக மொய் எழுத வேண்டும் என மின்சாரச் சட்டம் வரையறுக்கிறது. இப்படிபட்ட தனியாருக்குச் சாதகமான, மக்களுக்கு அநீதியான சட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட மின்வாரியங்கள் இலாபத்தில் இயங்குவதற்கான சாத்தியமுண்டா? மேலும், இச்சட்டம் மின்சாரத்தை மானிய விலையில் வழங்கக்கூடாது என்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் உற்பத்திச் செலவுக்கேற்ப அதன் கட்டணத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்குகிறது. இதன் பொருள், மின் வாரியம் நட்டத்தில் இயங்கினாலும், இலாபத்தில் நடந்தாலும் ஆண்டுதோறும் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்பதுதான்.

தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக பத்து ரூபாய் கொடுத்து வாங்குகிறது. இது தவிர்த்து, தனது சொந்த மின்நிலையங்கள், மைய அரசுக்குச் சொந்தமான மின்நிலையங்களிடமிருந்தும் மின்சாரத்தைப் பெறுகிறது. இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு ரூ.6.14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் இயங்கி வரும் 29 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ஐந்து ரூபாய்க்கு விற்கிறது, மின் வாரியம்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ பெற்றுக்கொள்ள கம்பித் தடங்களைப் பெற்றிருக்கும்பொழுது, தமிழக மின்வாரியம் இவர்களுக்குப் பத்து ரூபாய் மின்சாரத்தை ஐந்து ரூபாய் மானிய விலையில் வழங்க வேண்டிய அவசியமோ, அதனால் ஏற்படும் நட்டத்தைச் சுமக்க வேண்டிய தேவையோ கிடையாது. ஆனாலும், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக மின் வாரியத்தை நட்டத்தில் தள்ளிவிடுகிறார்கள், ஆட்சியாளர்கள்.  மின் வாரியத்தின் நட்டம் மின் கட்டண உயர்வாகத் தமிழக மக்களின் மீது சுமத்தப்படுகிறது.

ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவோம் எனச் சவடால் அடித்த ஜெயாவின் இந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் மின் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை. அதேசமயம் இந்த மின்பற்றாக்குறையைக் காட்டி வெளிமாநிலங்களிலுள்ள வணிக மின் உற்பத்திக் கழகங்களிடமிருந்து 3,800 மெகாவாட் மின்சாரத்தை வாங்கும் நீண்ட கால ஒப்பந்தங்களை கடந்த ஆகஸ்டு மாதம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களின் காலத்தையும் நீட்டித்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் ஏற்ப, தமிழகத்தில் கட்டப்படும் அரசுத் துறை மின் உற்பத்தித் திட்டங்கள் ஆமை வேகத்தில் நகர்த்தப்படுகின்றன. தமிழக மின்வாரியம் தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வருவதற்கும், மின் கட்டண உயர்வு வாடிக்கையாகிவிட்டதற்கும் பின்னால் உள்ள உண்மைகள் இவைதான்.

– சுடர்
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________