Saturday, April 19, 2025
முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்பச்சையப்பன் கல்லூரி காக்க பேராசிரியர் - மாணவர் போராட்டம்

பச்சையப்பன் கல்லூரி காக்க பேராசிரியர் – மாணவர் போராட்டம்

-

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து!
பேராசிரியர்கள், மாணவர்கள் ஒன்று கலந்து நடத்திய பேரணி

  • பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து!
  • திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், கடலூர் சி.என்.கே கல்லூரி பேராசிரியருமான சாந்தி அவர்களை பணியிடம் மாற்றியதை ரத்து செய்!
  • பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகளின் ஊழலை விசாரணைக்குட்படுத்தி உடனடியாக பதவி நீக்கம் செய்!

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட 6 கல்லூரிகளின் பேராசிரியர்கள் கடந்த ஒருமாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. அதோடு மட்டுமல்லாமல், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகளோடு தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனும் சேர்ந்து போராடுகின்ற பேராசிரியர்களை மிரட்டுவது, போராட்டத்தை நசுக்க எத்தனிப்பது என செயல்பட்டு வருகின்றனர்.

பச்சையப்பா கல்லூரி போராட்டம்
மாணவர்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியது பு.மா.இ.மு.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமைப்பாக செயல்பட்டுவரும் எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பேராசியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை திரட்டுவதற்கு பச்சையப்பன் அறக்கட்டளையின் ஊழலை அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியது. அடுத்து மாணவர்களை அணிதிரட்டிச் சென்று பச்சையப்பன் கல்லூரி வாயிலில் நடந்த பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது. அத்துடன் பேராசியர்கள் – மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

அதோடு, பேராசிரியர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றில் கடந்த 16 -ம் தேதி மாணவர்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி பச்சையப்பன் கல்லூரிக் கிளை செயலர் செல்வா தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தையும் நடத்தியது பு.மா.இ.மு.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
ஒழியட்டும் பச்சையப்பன் அறக்கட்டளையின் ஊழல்! ஓங்கட்டும் பேராசிரியர்,மாணவர் ஒற்றுமை!

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழ்க பேராசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 20-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இருந்து மாலை 4 மணி அளவில் புறப்பட்ட பேரணியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் த. கணேசன் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற பேரணியில் பு.மா.இமு வைச் சார்ந்த மாணவர்கள் தொடர்ந்து எழுப்பிய கம்பீரமான முழக்கம் போராடுகின்ற பேராசியர்களுக்கு புது உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
பு.மா.இமு வைச் சார்ந்த மாணவர்கள் தொடர்ந்து எழுப்பிய கம்பீரமான முழக்கம் போராடுகின்ற பேராசியர்களுக்கு புது உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

பேரணியின் இறுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன்,

“ஊழல்மயமாகிப் போன பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும், முடியாவிட்டால் மாணவர்கள் – பேராசிரியர்கள் ஏற்று நடத்த வழிவிட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியை கொடுத்து உன்னதமான சேவை செய்த இந்த அறக்கட்டளையை இன்று அதன் ஊழல் நிர்வாகிகள் அழிக்கத் துடிக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் – பேராசிரியர்கள் – பெற்றோர்கள் ஒன்றுபட்டு போராடினால் இதை தடுத்து நிறுத்த முடியும். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்த பேராசியர்களோடு பு.மா.இ.மு என்றும் துணை நிற்கும்”

என்று போராடும் பேராசியர்களுக்கு நம்பிக்கையூட்டி உரையாற்றினார்.

பச்சையப்பன் அறக்கட்டளையைச் சார்ந்த பேராசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதராவாக பு.மா.இ.மு வெளியிட்ட பிரசுரம்

ஒழியட்டும் பச்சையப்பன் அறக்கட்டளையின் ஊழல்!
ஓங்கட்டும் பேராசிரியர்,மாணவர் ஒற்றுமை!

ஊழல்மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து அல்லது
மாணவர்கள் – பேராசிரியர்களை நடத்தவிடு!

அன்பார்ந்த மாணவர்களே, உழைக்கும் மக்களே,

லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கண்ணை திறந்து வைத்த பெருமைக்குரியதுதான் பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட கல்லூரிகள் என்பது மிகையல்ல, நாம் அனைவரும் கண்கூடாக அறிந்த உண்மை. அப்படிப்பட்ட பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை இன்று அந்த நிர்வாகிகளால், உயர்கல்வித்துறை அமைச்சரால், ஊழல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு நூற்றுக்கணக்கான பேராசியர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும், ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்துவது நம் அனைவரின் கடமை.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
மாணவர்களை அணிதிரட்டிச் சென்று பச்சையப்பன் கல்லூரி வாயிலில் நடந்த பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பு.மா.இ.மு.

ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது, பச்சையப்பன் அறக்கட்டளைக்கு. 1800-களில் தொடங்குகிறது இதன் கல்விப் பணி. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிலையம் என்ற பெருமை இதன் பச்சையப்பன் கல்லூரிக்கு உண்டு. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களே கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், 1842-ம் ஆண்டு இந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி. 1947-க்குப் பின் அனைத்து மத, இன மாணவர்களும் படிக்கும் கல்விக்கூடமாக செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளிகளும், கல்லூரிகளும் பல தலைவர்களையும், கல்வியாளர்களையும், கணித மேதைகளையும், அரசின் உயர் அதிகாரிகளையும் உருவாக்கி இந்நாட்டிற்கு கொடுத்தவை. அதுமட்டுமல்ல, 1965 களில் அன்றைக்கு மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசு தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்றபோது சுமரியாதையோடும், தாய்மொழிப்பற்றோடும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், பேராசியர்களும்தான் என்பதை வரலாறு இன்றைக்கும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
இந்தியைத் திணிக்க முயன்றபோது சுமரியாதையோடும், தாய்மொழிப்பற்றோடும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், பேராசியர்களும்.

இத்தகைய பாரம்பரியத்திற்கு சொந்தமான பச்சையப்பன் அறக்கட்டளை சமீப ஆண்டுகளாக தி.மு.க – அ.தி.மு.க ஆகிய ஓட்டுக்கட்சியினரின் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கல்வியாளர்களைக் கொண்டு கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டிய இந்த அறக்கட்டளையின் சொத்து இன்று ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. பல புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கிய பள்ளி, கல்லூரிகள் இன்று பாழடைந்த பங்களாக்களை போல் உள்ளன. இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளோ கல்விப் பணியை செய்வதற்கு பதில் பிற அனைத்து சட்ட விரோத வேலைகளையும் செய்கிறார்கள்.

ஆம். பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு – லஞ்சம்; கல்விக்கூடத்தை பராமரித்து இயக்குவதற்கு பதில் தனிப்பட்ட நலனுக்காக சொத்துக்களை விற்கிறார்கள்; கல்வியின் தரத்தை உயர்த்தி சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு பதில் தனியாரைப்போல் அதிக கட்டணத்திற்கான வகுப்புகள் ( self finanance ) உருவாக்கியும், கல்லூரி மைதானத்தை தனியாருக்கு வாடகைக்கு விட்டும் அறக்கட்டளை நிர்வாகிகள் தங்கள் சொத்துக் கணக்கைத்தான் உயர்த்துகிறார்கள்.

“அறக்கட்டளையின் வரவு – செலவு கணக்கை நிறுவனர் பிறந்தநாள் அன்று கல்லூரி வாயிலில் வைத்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதே நாளில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்” என்ற அறக்கட்டளையின் விதியை இதன் நிர்வாகிகள் மயி…..க்கு சமமாகக் கூட மதிப்பதில்லை என்று வேதனைப்படுகிறார்கள் பேராசிரியர்கள்.

பச்சையப்பன் அறக்கட்டளையை கல்வியாளர்கள் நிர்வகித்தால்தானே கல்வி வளர்ச்சிக்காகவும், பேராசிரியர்கள், மாணவர்கள் நலனுக்காகவும் சிந்தித்து செயல்பட முடியும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் நிர்வகித்தால் வேறு எப்படி இருக்கும்? மாஃபியா கும்பலிடம் மாட்டிக் கொண்டிருகின்ற பச்சையப்பன் அறக்கட்டளையை மீட்காமல் கல்விப் பணியை, பேராசியர்கள் – மாணவர்கள் நலனை உத்திரவாதம் செய்ய முடியாது, என்பதற்கு இன்று நடக்கும் சம்பவங்களே உதாரணங்களாக உள்ளன.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
பச்சையப்பன் அறக்கட்டளையை கல்வியாளர்கள் நிர்வகித்தால்தானே கல்வி வளர்ச்சிக்காகவும், பேராசிரியர்கள், மாணவர்கள் நலனுக்காகவும் சிந்தித்து செயல்பட முடியும்.

இந்த அறக்கட்டளையில் நடக்கும் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள், ஆசிரியர்கள் – மாணவர்களை பழிவாங்கும் போக்குகள் ஆகியவற்றை அவ்வப்போது கண்டிக்கும் பேராசிரியர் பெருந்தகைகளை தொடந்து பழிவாங்கி வருகிறது நிர்வாகம். குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சரின் துணையோடு பேராசிரியர் சங்க பொறுப்பாளர்களுக்கு மெமோ கொடுத்தும், இடம் மாற்றம் செய்தும் பழிவாங்குகிறார்கள், தற்போதைய தலைவராக உள்ள ஜெயச்சந்திரன் என்பவரும், செயலாளராக உள்ள இராஜகோபாலன் என்பவரும் இந்த வகையில்தான் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கடலூர் சி.கே.என் கல்லூரி பேராசிரியருமான சாந்தி என்பவரை பணியிட மாற்றம் செய்து பழிவாங்கியுள்ளனர். இதைக் கண்டித்து போராடும் கல்லூரி முதல்வரையும், பேராசிரியைகளையும் இழிவாகவும் நடத்துகிறார்கள்.

ஆக, தற்போதைய அறக்கட்டளை நிர்வாகிகளின் நோக்கமெல்லாம் யார் எக்கேடுகெட்டாலும் தங்களுக்கு கவலை இல்லை. பச்சையப்பன் அறக்கட்டளை சொத்துக்களை சூறையாட வேண்டும் என்பதுதான். இதற்குத் தடையாக இருப்பதால் பேராசிரியர்களையும், சங்க பொறுப்பாளர்களையும் பழிவாங்குகிறார்கள். இந்த அநீதியை தடுத்து நிறுத்த வேண்டிய உயர்கல்வித்துறை அமைச்சரோ கூட்டுக்கொள்ளையராக உள்ளார். உண்மை அறிந்த பேராசிரியர்கள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள்.

மாணவர்களே, பெற்றோர்களான உழைக்கும் மக்களே நாம் என்ன செய்யப்போகிறோம். நிச்சயம் வேடிக்கைப் பார்க்க முடியாது. நம்மை விலங்கினத்திடமிருந்து பிரித்து மனிதனாக்கும் கல்வி எனும் உன்னதமான சேவையாற்றி வரும் பச்சையப்பன் அறக்கட்டளையை இந்தக் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதற்கு

  • பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுமென தொடர்ந்து போராடி வரும் பேராசிரியர் பெருந்தகைகளோடு களத்தில் துணை நிற்போம்.
  • பேராசிரியர் – மாணவர் – பெற்றோர் ஒற்றுமையை கட்டியமைப்போம்.
  • இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்பதற்கேற்ப வெற்றிபெறுவோம்!

ஊழல்மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்தக் கோரும் பேராசியர்களின் போராட்டம் வெல்லட்டும்!

pachiappa-protest-poster

தகவல்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க