Wednesday, April 23, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்கொலைகார அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை - புதுச்சேரி பு.ஜ.தொ.மு

கொலைகார அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை – புதுச்சேரி பு.ஜ.தொ.மு

-

பாலியல் வன்கொடுமைக் கூடாரமான புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை!

டந்த 18.12.2014 அன்று புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமக் குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தில் பெற்றோர், 5 மகள்கள் என மொத்தக் குடும்பமும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததில் தாய் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயக்க நிலையில் இருந்த ஒரு பெண்ணை இருவர் வன்புணர்ச்சி செய்த கொடுமையும் நடந்துள்ளது.

அரவிந்தர் ஆசிரமம் தற்கொலை
ஆசிரமக் குடியிருப்புக் கட்டிடத்தின் மேல் ஏறி தற்கொலைக்கு முயன்றனர் (படம் : நன்றி thehindu.com )

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத், தனது மனைவி மற்றும் 5 மகள்களுடன் 1970-களின் துவக்கத்தில் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தார். அரவிந்தர் மேல் உள்ள பற்றால், அவரின் 5 மகள்களும் ஆசிரமத்திற்கு சொந்தமான பள்ளியிலேயே படித்து, ஆசிரம விடுதியில் தங்கி சேவை செய்து வந்தனர்.

கடந்த 2002 -ம் ஆண்டில் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருவதாகக் கூறி, ஆசிரம நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், புகார் கூறிய பெண்களில் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், அவர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. அதைப் பொறுக்க முடியாமல் சகோதரிகள் 5 பேரும், 2004-ம் ஆண்டு காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.

அந்தப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆசிரமத்தில் நடப்பவைகளை வெளியில் சொல்லக் கூடாது என்ற ஆசிரம விதியை மீறிவிட்டதாகச் சொல்லியும், விசாரணை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்தும், அந்தப் பெண்கள் மீதே குற்றம் சுமத்தி, ஆசிரமத்தை விட்டு வெளியேறச் சொல்லி நடவடிக்கை எடுத்தது. தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அநீதிகளுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றம் முதல், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து 12 ஆண்டு காலம் வரை போராடியும் இறுதியில் தோல்வியே கண்டனர். மேலும், ஆசிரம விடுதியில் இருந்து வெளியேற மறுத்துப் போராடிய அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டு, கட்டாய வெளியேற்றம் செய்ய உத்தரவிட்டது உச்சநீதி மன்றம்.

தாங்கள் நேசித்த ஆன்மீகப் பணியில், தாங்கள் தேடிய அமைதி கிடைக்காமல், பாலியல் தொந்தரவுகளின் மூலம் அமைதியற்ற வாழ்க்கையையே வாழ்ந்தனர். மேலும், தாங்கள் நம்பிய அரசும், நீதிமன்றமும், நீதியை மறுத்து கைவிட்டதால் தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக, தற்கொலையில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் குமுறி வெடிக்கின்றனர். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் மனம் நொந்து, இந்த தற்கொலை சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்னேயே தாங்கள் வசித்து வந்த ஆசிரமக் குடியிருப்புக் கட்டிடத்தின் மேல் ஏறி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது காவல்துறை தடுத்து காப்பாற்றி விட்டனர். அவர்களின் இரண்டாவது முயற்சியில் 3 பேர் இறந்துவிட்டனர்.

அரவிந்தர் ஆசிரமம் பாதுகாப்பு
ஆசிரமத்திற்கு அரச பாதுகாப்பு. (படம் : நன்றி thehindu.com )

இந்த தற்கொலை மரணங்களை, ஆசிரமத்திற்கு எதிராகப் போராடி வெற்றி பெற முடியாததால் இந்த முடிவை எடுத்தனர் என சுருங்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில், இன்று இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரமங்களும், மடங்களும், ஆதினங்களும் இந்திய நாட்டின் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத வகையில் தனி சாம்ராஜ்ஜியங்களை நடத்தி வருகின்றன. இவை, பாலியல் வக்கிரங்களின் ஒட்டு மொத்த உருவமாகவும், காமக் களியாட்டக் கூடாரங்களாகவும், நிதி, ஊழல், முறைகேடுகளுக்குப் பெயர் போனதாகவும் மாறிவிட்டன. இதற்கு, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமும் விதிவிலக்கல்ல.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு கிட்டத்தட்ட ரூ 7500 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளது. ஆசிரமத்திற்கு சொந்தமான, ஆரோவில் என்ற பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இங்குள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள் எதுவும், புதுச்சேரி தொழிலாளர் துறையின் பார்வைக்குக் கூட வராது. ஆசிரமத்தின் அதிகாரம் வானளாவியதாக இருப்பதால், தொழிலாளர் துறையும் தலையிட முடியாது. அது மட்டுமின்றி, ஆசிரமத்திற்கு சொந்தமாக சொகுசு பங்களாக்கள், பால் பண்ணை, பள்ளிக்கூடங்கள், பழ – காய்கறித் தோட்டங்கள், பெட்ரோல் பங்க், பேக்கரி மற்றும் பல்பொருள் அங்காடிகள் என பல தொழில்கள் உள்ளன.

அரவிந்தர் ஆசிரமம்
புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் முதல் கவர்னர், அரசு அதிகாரிகள் வரை ஆசிரம நிர்வாகத்தின் யோக்கியதையைப் பற்றிப் பேசுவதே இல்லை. (படம் : நன்றி ndtv.com)

புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் முதல் கவர்னர், அரசு அதிகாரிகள் வரை ஆசிரம நிர்வாகத்தின் யோக்கியதையைப் பற்றிப் பேசுவதே இல்லை. இது போன்ற பிரச்சினைகள் எழும் போது கூட அதைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லை. இந்த தற்கொலை சம்பவத்திலும் அதே நிலைமை தான். ஆனால், இந்த அநீதியை எதிர்த்துப் போராடும் சமூக ஜனநாயக சக்திகளின் போராட்டத்தை, சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு எனச் சொல்லி, சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் அறிவிக்கிறார் எனில், இதிலிருந்து அரவிந்தர் ஆசிரமத்தின் அதிகாரங்களைப் புரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட ஆசிரமத்தைத் தான் தனியொரு குடும்பமாக நின்று 12 ஆண்டுகள் போராடி தோற்றிருக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

அதனால் தான், இது தற்கொலை அல்ல! புதுச்சேரி அரசும், நீதிமன்றமும் அரவிந்த் ஆசிரமும் நீதியை மறுத்து திட்டமிட்டு செய்த படுகொலை! என நாம் சொல்கிறோம்.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், காமக் களியாட்டக் கூடாரமாகவும், நிதி ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளின் ஒட்டு மொத்த உருவமாகவும் திகழ்கிறது. ஆசிரமத்தில் நடக்கும் விசயங்களை வெளியில் சொல்லக் கூடாது என்ற ஆசிரம விதியிலிருந்தே, இது மர்மங்களின் கூடாரம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த விசயங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில்,

அரவிந்தர் ஆசிரமம் - பு.ஜ.தொ.மு முற்றுகை

  • அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமையால் 3 பெண்கள் தற்கொலை!
  • இது தற்கொலையல்ல! அரசு நடத்திய படுகொலை!

மத்திய மாநில அரசுகளே!

  • அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்!
  • ஆசிரமம் என்ற பெயரில் காமக் களியாட்டம் நடத்திய ஆசிரம நிர்வாகிகளைக் கைது செய்!
  • அரவிந்தர் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்து!

அரவிந்தர் ஆசிரமம் - பு.ஜ.தொ.மு முற்றுகைஉழைக்கும் மக்களே

  • முற்றும் துறந்த ஆன்மீகவாதிகளுக்கு சொகுசு பங்களா, பால்பண்ணை, பழக்காய்கறித் தோட்டங்கள் எதற்கு?
  • மடங்கள், ஆதினங்கள், ஆசிரமங்கள், கோயில்களின் சொத்துக்களை மக்கள் போராட்டத்தின் மூலம் பறித்தெடுப்போம்!

அரவிந்தர் ஆசிரமம் - பு.ஜ.தொ.மு முற்றுகைஎன்ற முழக்கங்களின் கீழ் 23.12.2014 அன்று அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை என அறிவித்து, போலீசு போட்டிருந்த இரண்டு அடுக்குப் பாதுகாப்பில், முதல் அடுக்குப் பாதுகாப்பை மீறி, ஆசிரமத்தை நோக்கி புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் முன்னேறினர். ஆசிரமத்தில் அருகில் தடுப்பரண்களை ஏற்படுத்தி தோழர்களைத் தடுத்து கைது செய்து மாலையில் விடுவித்தது போலீசு.

இந்த முற்றுகை பக்தி, ஆன்மீக சேவை என்று சொல்லிக் கொண்டு உழைக்கும் மக்களை அறியாமை இருளில் தள்ளும் அரவிந்தர் ஆசிரமத்திற்கு எதிரான போராட்டத்தின் துவக்கப் புள்ளி தான். நமது தொடர்ந்த போராட்டத்தின் மூலம், உழைக்கும் மக்களை விழிப்படையச் செய்யும் வரை தொடரும் வகையில் அடுத்த கட்ட போராட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது புதுச்சேரி புஜதொமு.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க