Monday, April 21, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்டி.சி.எஸ் ஆட்குறைப்பு - ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம்

டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம்

-

ஐ.டி துறையில் பணி புரியும் இந்திரன் என்ற இந்த நண்பர்  டி.சி.எஸ் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிரான வினவு, பு.ஜ.தொ.மு பிரச்சாரக் கட்டுரைகளை படித்து விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  டி.சி.எஸ்சில் வேலை செய்யும் அவரது நண்பர் தனக்கு 32 வயது ஆகி விட்டதால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தன்னையும் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என்று பயப்படுவதாகவும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதாகவும் கூறினார். 

இந்தியாவில், டி.சி.எஸ்சிலும், பிற ஐ.டி நிறுவனங்களிலும் யூனியன் (தொழிற்சங்கம்) அமைப்பதற்கான நடைமுறைகளை தெரிந்து கொள்ள அவரது நண்பர் ஆவலாக இருப்பதாக கூறினார்.

இந்திரன் ஐரோப்பிய நாடு ஒன்றில் வேலை செய்வதாகவும், அங்கு தொழிற்சங்கங்கள் மூலம் ஊழியர்கள் பெற்றிருக்கும் உரிமைகள் பற்றியும் விளக்கினார்.

அவற்றை தொகுத்து மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார்.

not-cricket

TCS வேலை பறிப்பு

பீகாரை சேர்ந்த என் பள்ளி பருவ நண்பன் ஒருவன், எங்கள் பள்ளி சார்ந்த watsapp குரூப்பில் திடீரென்று 26,000 பேர் டி.இ.எஸ்-ல் இருந்து விரட்டப்பட இருக்கிறார்கள் என்று பகிர்ந்தான். என் பள்ளிக்கூட நண்பர்கள் அனைவருமே ஐ.டி சார்ந்த தொழில் புரிகிறோம்.அவனிடம் வேலை பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு அதுபற்றி சரிவர தெரியவில்லை, நிறுவனத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி  பேசிக் கொள்கிறார்களாம்.

அவற்றை கீழே தொகுக்கிறேன்,

  1. 26,000 பேரை நீக்குகிறார்கள்.
  2. முதலீட்டாளர்களிடம் லாபக் கணக்கை காண்பிக்க, ஆட்குறைப்பு செய்து, பிறகு குறைந்த சம்பளத்தில் புதியவர்களை இணைப்பது.
  3. ஆறு முதல் எட்டு வருடம் வரை அனுபவம் உள்ளவர்களை மட்டும் நீக்குகிறார்கள்.
  4. இரண்டு மாத சம்பளம் மட்டும் தரப்படும்.
  5. union (தொழிற்சங்கம்) ஆரம்பித்தால், Nasscom blacklist (நாஸ்காம் கருப்புப் பட்டியல்) செய்து விடுவார்கள் மற்றும் அனுபவ சான்றிதழ் தரமாட்டார்கள் அல்லது தவறாக சித்தரிக்கப்படும்.
  6. 54,000 புதிய பி.ஈ. மாணவர்களை வேலைக்கு சேர்க்க போகிறார்கள்.

hall-meetingஅனைவருக்கும் இதை கேட்கும்போதே அதிர்ச்சி. வேலை பாதுகாப்பு மற்றும் வேலை இழப்பு பற்றி பள்ளி படிப்பிலோ அல்ல நான்கு வருட பி.ஈ. படிப்பிலோ சொல்லி தரவில்லை, தினமும் படிக்கிற செய்திகளிலும் இதைப் பற்றி பேசவில்லை. வேலை பாதுகாப்பு பற்றி அடிப்படைக் கல்வி கொஞ்சமும் இன்றி அறிவு அற்றவர்களாக இருக்கிறோம் என்று உணர்வதற்கே இவ்வளவு காலம் ஆகிவிட்டது.

என்ன பிரச்சனை?

நமது ஐ.டி ஊழியர்களுக்கு திறமையின்மை, புது தொழில் நுட்பம் சார்ந்த அறிவு இல்லாதது, புது யுத்திகள் உருவாக்க தெரியாதது, நிறுவன மேலாண்மை இல்லாதது, புதிய productகள் உருவாக்க தெரியாதது, போன்றவற்றை தள்ளி வைத்துவிடுவோம்.

கடந்த 20 வருடங்களாக நமது நாட்டு ஐ.டி நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் சொல்லும் வேலையை, அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் build (கட்டியமைத்து) செய்துவந்தனர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக தங்கள் தேவைகளை ஒரு system (அமைப்பாக) ஆக அல்லது process (செயல்முறை) ஆக standardisation (தகுதரம்) செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, வேலை செய்வதற்கு திறமையான ஊழியர்கள் தேவையின்றி போகிறார்கள்.

மேலும், தற்பொழுது இந்திய நிறுவனங்களுக்கு அவ்வளவாக மிக பெரிய project-கள் (பத்து வருட அல்ல பதினைந்து வருட) வரத்து குறைந்துவிட்டது .

இந்த பிரச்சனையால் இன்னும் சில வருடங்களில் கம்பெனி restructure (மறுசீரமைப்பு) என்ற பெயரில் மேலும் பல்லாயிரம் வேலை இழப்புகள் இந்தியா முழவதும் பல பெரிய நிறுவனங்களில் நிகழலாம்.

ஜெர்மன் வேலை பாதுகாப்பு முறை!

why-unionஇதே சூழ்நிலையை சென்ற வருடம் ஜெர்மனியில் நான் சந்தித்தபோது. வேலை பாதுகாப்புப் பற்றிய அறிவு இல்லாத ஒரு சூனியமாக தான் இருந்தேன். என் கம்பெனி சி.ஈ.ஓ company restructre (நிறுவன மறுசீரமைப்பு) பற்றி பேசும்போது, ” இன்னும் ஆறு முதல் எட்டு மாதங்களில் உங்களில் சிலர் வேலை இழக்கலாம்” என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் . எங்களிடம் சொல்லும்போது முன்பே union (தொழிற்சங்கம்) இல் கூறிவிட்டுத்தான் எங்களிடம் தகவலை தெரிவித்து இருக்கிறார் .

ஜெர்மனியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே நீங்கள் அந்த கம்பெனியின் தொழிற்சங்கத்தில் தன்னாலயே இணைந்து விடுவீர்கள் மற்றும் உங்களுக்கு ஓட்டு உரிமையும் உண்டு.

ஜெர்மன் இழப்பு தொகை?

உங்களுடைய தற்போதைய மாத சம்பளம் * ௦.5 (குறைந்த பட்சம்) * உங்கள் அனுபவ வருடங்கள் + Negotiation (பேச்சு வார்த்தை)

உதாரணமாக , உங்களுக்கு மாத சம்பளம் 2000 euro மற்றும் நான்கு வருட அனுபவம் இருந்தால் – ( 2000 * 0.5 * 4 = 4000 euro )

Negotiation (பேச்சுவார்த்தை) – குழந்தைகளின் படிப்புக்கான பணம், உங்களின் எதிர்கால வேலைக்கான தகுதியை வளர்த்துகொள்ள பணம், அரசாங்கத்துக்கு கடிதம் (மூன்று மாதம் கழித்து 60% சம்பளத்தை அரசாங்கம் மாதம் மாதம் தங்களுக்கு புது வேலை வரும் வரை தரும்)

எங்களுக்கு “௦.5” (குறைந்த பட்சம்)-ஐ உயர்த்தி “1” தந்தார்கள் . குழந்தைகள் இருந்தால் கூடுதலாக 2000  யூரோ தந்தார்கள். இந்தியாவில் உள்ள என் நண்பர்கள் இதை லாட்டரி என்றே வர்ணித்தார்கள்.

recession (பொருளாதார சுணக்கம்) வந்தால் ?

log-off-your-silenceஇந்த அடிப்படையில்தான் வாரன் பஃபெட் சென்ற முறை recession வந்தபோது ஒரு கருத்தை வெளியிட்டார் , “ஒருவன் தன் சம்பளத்தின் ஒரு பகுதியை எப்போதும் சேமிக்க வேண்டும். recession அல்லது வேறு காரணத்தினால் வேலை இழப்பு ஏற்பட்டால், எட்டு மாதம் முதல் பதினாறு மாதம் வரை அந்த சேமிப்பு பணம் உதவும்” என்று கூறினார்.

தற்போது டி.சி.எஸ்-இல் நிலவும் இரண்டு மாத சம்பளம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவது உண்மையானால் இவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்று தோன்றுகிறது.

இந்த நீண்ட கடிதத்தின் இலக்கு டி.சி.எஸ்-ல் பணிபுரியும் நண்பர்களுக்கு union (தொழிற்சங்கம்) எப்படி ஆரம்பிப்பது? எப்படி செயல்படுவது? Nasscom blackmark (நாஸ்காம் கருப்புப் பட்டியல்)-ஐ எப்படி சமாளிப்பது? நிறுவனத்தில் இருந்து எப்படி தங்கள் settlement பணத்தை வாங்குவது? போன்றவற்றை Facebook மற்றும் தங்கள் வலைதளத்தில் சாமானியர்களுக்கு புரியும்படியாக தெரிவிக்க வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

இந்திரன்

____________________________

இந்திரன் மற்றும் இலட்சக்கணக்கான இந்திய ஐ.டி துறை ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் வினவு தோழர்கள், ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறோம். தொழிற்சங்கம் அமைத்து செயல்படுவது, நாஸ்காம் மிரட்டலை எதிர்கொள்வது, நிறுவனத்தின் ஊழியர் சுரண்டலை முறியடிப்பது இவற்றை விளக்கும் அரங்கக் கூட்டம் ஒன்றை பு.ஜ.தொ.மு ஏற்பாடு செய்து வருகிறது. கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்திரன் விவரிக்கும் ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள், 19-ம் நூற்றாண்டு முதல் நீண்ட போராட்டங்களின் மூலம் வென்றெடுக்கப்பட்டவை. 1789 ஃபிரெஞ்சு புரட்சி, 1871 பாரிஸ் கம்யூன், 1917 ரசிய புரட்சி ஆகியவை இந்தப் போராட்ட பாரம்பரியத்தின் உந்து சக்திகள்.

ஐரோப்பிய நாடுகளில் வேறு வழியில்லாமல் தொழிலாளர் உரிமைகளை அங்கீகரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் டாடா, இன்ஃபோசிஸ் போன்ற முதலாளிகளை தமது தரகர்களாக வைத்துக் கொண்டு, இந்திய அரசை தமக்கு சாதகமாக செயல்படும்படி வளைத்து இந்திய மக்களை சுரண்டி வருகின்றனர்.

இதை மாற்றுவது ஐ.டி துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் அமைப்பாக அணி திரள்வதன் மூலம் சாத்தியமாகும்.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

தொடர்பு  கொள்ளுங்கள்:

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை