Wednesday, April 16, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்நூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்

நூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்

-

நாம் யாரால் ஆளப்படுகிறோம்? மிக எளிமையான இந்தக் கேள்விக்கான பதில் அத்தனை எளிமையானதல்ல. ‘மோடி தான் பிரதமர், அம்மா தான் மக்கள் முதல்வர். இவர்களைத் தான் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள்’ என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “அவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் சட்டை அவர்களுடையதில்லை” என்கிறது கீழைக்காற்று பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “ஆம் ஆத்மி: பிறப்பும் வளர்ப்பும்” என்கிற சிறு வெளியீடு.

புதிய ஜனநாயகம் பத்திரிகையில் “ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியம்” என்ற தலைப்பில் நான்கு மாதத் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்தச் சிறு வெளியீடு.

aam-aadhmi-party

தொண்ணூறுகள் தொடங்கி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மாவட்ட, வட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தொடங்கி மத்திய அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் வரைக்கும் எந்த திட்டங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும், எந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சகல துறைகளிலும் ஆலோசனை வழங்குவது மக்களால் தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏக்களாகவும், எம்.பிக்களாகவும் உள்ள ‘மக்கள் பிரதிநிதிகள்’ அல்ல – அவை என்.ஜி.ஓக்கள் என்று அழைக்கப்படும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் தாம்.

கடந்த சில பத்தாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நலன்களை சாதித்துக் கொடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட சிந்தனைக் குழாம்களுக்கு கள ஆய்வுகளைச் செய்து கொடுப்பதையும், இவர்கள் ஏகாதிபத்திய நலன்களை நிறைவேற்ற எப்படித் தோள் சேர்கிறார்கள் என்பதை விளக்குகிறது இச்சிறு வெளியீடு. போர்டு, ராக்ஃபெல்லர், மிலிண்டா கேட்ஸ் போன்ற பல்வேறு ஏகாதிபத்திய கார்ப்பரேட் அறக்கட்டளைகளிடம் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கித் தின்னும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டதே ஆம் ஆத்மி கட்சி என்பதை நிறுவுகிறது இவ்வெளியீடு.

ஆம் ஆத்மி கட்சி என்பது அரசு சாராத் தொண்டு நிறுவனங்களின் எந்திரகதியிலான கூட்டுத் தொகை மட்டும் தானா? அதற்கும் மேல், ஆம் ஆத்மி கட்சியின் அவதாரம் நிகழ்ந்த காலகட்டத்தின் உலகப் பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி, அது உலகளாவிய அளவில் மக்களிடையே ஏற்படுத்திய அதிருப்தி, அதிகரித்து வரும் ஊழல் முறைகேடு புகார்கள், செல்வாக்கிழந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் என்ற பின்புலத்தில் நடந்த வண்ணப் புரட்சிகள், ஆட்சிக் கவிழ்ப்பு – அதிகார மாற்றங்கள், அதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு, அந்நடவடிக்கைகளில் உள்ள ஏகாதிபத்திய நலன் என இந்தச் சிறிய வெளியீடு நம்மை பரந்துபட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இந்நூல் ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியத்தை மையமாக கொண்டு நிகழ்கால அரசியலின் பல துண்டு துக்கடாவான சம்பவங்களை இணைக்கும் அடிநீரோட்டத்தை வாசகருக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

அவசியம் வாங்கிப் படிப்பதோடு நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய நூல்.

ஆம் ஆத்மி ஆத்மி கட்சி – பிறப்பும் வளர்ப்பும்

வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ 25

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367