
டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்வது குறித்து வினவில் தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். இது தொடர்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் இணைந்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இணையத்தில் தொடங்கிய பிரச்சாரம் களத்திலும் தொடர்கிறது.
வேலைநீக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் சங்கமாக திரண்டு தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறைகூவியும் இன்று (07.01.2015) காலை 8 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் சிக்னலில் திரண்டனர். ஐ.டி ஊழியர்களைக் காப்பாற்ற ஆலைத் தொழிலாளர்கள் அணி திரண்டு வந்தது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்தையும், போராட்ட குணத்தையும் பறை சாற்றுவதாக இருந்தது.


பணிக்கு சென்று கொண்டிருக்கும் ஐ.டி ஊழியர்களை தொழிற்சங்கமாக ஒன்றிணையுமாறு அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஐ.டி காரிடாரில் உள்ள டி.சி.எஸ் மற்றும் மற்ற ஐ.டி நிறுவன அலுவலகங்கள் முன்பும் சாலை சந்திப்புகளிலும் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை வினியோகிக்கின்றனர்.
அதிகாலையில் கார்ப்பரேட் நிர்வாகத்தின் லே ஆஃப் கொடுங்கனவோடு பேருந்துகளில் பயணிக்கும் ஐ.டி மற்றும் டி.சி.எஸ் ஊழியர்களை நம்பிக்கை ஊட்டும் விதமாக தொழிலாளர்களாக இருக்கும் தோழர்கள் பேசி வருகின்றனர். இது தொடர்பான ஆங்கிலம் மற்றும் தமிழ் துண்டறிக்கைகளை விநியோகித்து உரையாடுகின்றனர்.
காலையிலேயே வந்திறங்கி, பிரசுரங்களை பிரித்து மடித்து, கொடிகள், பேனர்களை உயர்த்திப்பிடித்து ஐ.டி வளாக நெடுஞ்சாலையில் நம்பிக்கையூட்டும் விதமாக அவர்கள் பிரச்சாரம் செய்வது கார்ப்பரேட் முதலாளிகளின் கண்ணை உறுத்தத்தானே செய்யும்?
உடனே அவர்கள் உத்தரவுப்படி போலீசு பெரும்படையுடன் களமிறங்கியது. தோழர்களிடம் நைசாக பேசி கலைந்து போகுமாறு கூறியது. தொழிலாளிகளோ, “துண்டறிக்கை விநியோகிப்பது அடிப்படை ஜனநாயக உரிமை, இதை நிறுத்த முடியாது” என்று பேசி தமது தலைவர்களிடம் அனுப்பினர்.
தலைவர்களை தேடி அலைந்த போலீசு இறுதியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் முகுந்தன், மாநிலப் பொதுச்செயலாளர் சுப.தங்கராசு, மாநிலப் பொருளார் விஜயகுமார் ஆகியோரை சந்தித்து பேசியது. தோழர்களும் தொழிலாளிகள் சொன்ன அதே ஜனநாயக விளக்கத்தை எடுத்தியம்பினர்.
“குறைந்த பட்சம் பேனர்கள், கொடிகளையாவது அப்புறப்படுத்துங்கள்” என்று ஆரம்பித்து “பிரசுரம் கொடுக்காதீர்கள்” என்று மிரட்டி வருகிறது போலீசு. இதற்கு அஞ்சாத தொழிலாளர் படை தனது பிரச்சாரத்தை நிறுத்தாமல் செய்து வருகின்றது. ஐ.டி ஊழியர்களை தூக்கி எறியும் டாடாவை எதிர்த்து பேசக்கூடாது என்பதே இங்குள்ள ஜனநாயகத்தின் இலட்சணம்.
![]() |
![]() |
சாலையில் தொடங்கிய இந்த பிரச்சாரம் அவர்களை தொழிற்சங்கமாக திரட்டும் வண்ணம் தொடர்கிறது.
இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை ஜனவரி 10, 2015 அன்று மாலை 6 மணிக்கு சிறுசேரிக்கு அருகில் உள்ள படூரில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைவரும் வாருங்கள்!
இது தொடர்பாக மேலும் விபரங்களைப் பெற 9003198576 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். அல்லது combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பேஸ்புக் பக்கம் fb://VinavuCombatsLayoff
இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான இந்த முயற்சியில் இணைய பிரச்சாரம் தொடர்பான பணிகளை வினவு தளமும், பு.ஜ.தொ.முவும் முன்னெடுத்து வருகிறது. இதற்கு வினவு வாசகர்களின் ஆதரவையும், உதவியையும் கோருகிறோம். இந்தச் செய்தியை இணையத்திலும், உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் பரவலாக கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்.