Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விவாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி - நூல் அறிமுகம்

வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி – நூல் அறிமுகம்

-

குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது பற்றி பல மூட நம்பிக்கைகள் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளன. ‘மழலையர் வகுப்பிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியில் பயின்றால்தான், சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியும், அறிவு வளரும், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகள் திறக்கும்’ என்று பெற்றோர்கள் நம்புகின்றனர். உழைக்கும் மக்கள் கூட தமது வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு தமது குழந்தைகளை தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

kalvi-postஇன்னொரு புறம், அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. கட்டிடங்கள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, நூலகங்கள், ஆய்வகங்கள் இல்லை, முக்கியமாக போதுமான ஆசிரியர்களை நியமிக்காமை என இத்தகைய புறக்கணிப்பினால் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க தகுதியற்றவையாக அரசு பள்ளிகளை மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், ஆசிரியர்களின் அலட்சியமும், பொறுப்பின்மையும் இந்த பிரச்சனையை தீவிரப்படுத்துகின்றன.

இந்தச் சூழலில், பல பத்தாண்டுகள் கல்வித்துறையில் பணியாற்றிய மூத்த கல்வியாளரான எஸ்.எஸ். ராஜகோபாலனின் அனுபவங்களும், கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

2004-ம் ஆண்டு நடந்த குடந்தை தீவிபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் வினவு தளத்தில் வெளியான ராஜகோபாலனின் நேர்முகத்தை தொகுத்து கீழைக்காற்று வெளியீட்டகம் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வியில் தனியார் மயம் உருவான வரலாற்றில் ஆரம்பித்து, குழந்தைகளின் இயல்பான முழுமையான வளர்ச்சிக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை பல நாட்டு உதாரணங்களுடன் விளக்குகிறது இந்த புத்தகம்.

தமிழ் வழியில் படித்தால் ஆங்கிலத்தில் பேச முடியாது என்பது தவறு என்பதை மிக எளிமையாக விளக்குகிறார் ராஜகோபாலன். பாடத்திட்டம் வகுக்கும் குழு உறுப்பினராக அவர் மாணவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள், கோவையில் உள்ள சர்வஜன உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக அவர் இருந்த போது மாணவர்கள் தம்மை முறைப்படுத்திக் கொள்ள முன்முயற்சியுடன் செயல்பட்டது ஆகியவற்றை சொல்கிறார்.

இறுதியாக, கல்விக் கொள்கையில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஆரம்பித்த மாற்றங்களையும், பா.ஜ.க ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இந்துத்துவத்தை கல்வியில் புகுத்துவதைப் பற்றியும் தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார். எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி கற்பிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

சமூகத்தின் மீதும், நமது சநததியினர் மீதும், எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் வாங்கி படிக்க வேண்டிய நூல், இது. வினவு தளத்தில் பதிவுகளை ஏற்கனவே படித்தவர்களும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாங்கிக் கொடுத்து குழந்தைகளின் கல்வி குறித்த சரியான கண்ணோட்டத்தை சமூகத்தில் பரப்பும் கடமையை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

kalvi-front kalvi-back

வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி

எஸ்.எஸ் ராஜகோபாலன்

வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ 25
பக்கங்கள் : 32

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க