Wednesday, April 23, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்நோன்பு, பள்ளி வாசல், தொழுகை... சொற்களின் மூலம் எது ?

நோன்பு, பள்ளி வாசல், தொழுகை… சொற்களின் மூலம் எது ?

-

சாதிமத அடிப்படை வாதிகளின் கருத்தை பெரும்பான்மை தமிழ்மக்கள் ஏற்கவில்லை” என்றார் “யாதும்” ஆவணப்பட இயக்குனர் கோம்பை அன்வர்.

27.12.2014 அன்று தஞ்சை பேருந்து நிலையம் யூனியன் கிளப் மாடியில் நடைபெற்ற “யாதும்” ஆவணப்பட அறிமுகம் திரையிடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது

கோம்பை அன்வர்
கோம்பை அன்வர் உரை

இந்த ஆவணப்படத்தை தயாரிக்கும் போது பல்வேறு தகவல்கள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. ஆவணப்படம் பார்த்த நீங்களும் அதை உணர்ந்திருக்கக் கூடும்.

இந்த தஞ்சையிலேயே அல்லாசாமி கோயில் இருப்பது அங்கு ஷியா முஸ்லீம் பள்ளிவாசல் ஆசர்கானா இருப்பது எனக்கு வியப்பை அளித்தது. தஞ்சையில் சன்னி முஸ்லிம் பிரிவினரே அதிகம். அரபு, உருது மொழிகளில் குர்ஆன் எழுதப்பட்டிருந்தாலும் தேவ பாஷை என்ற ஒன்று இங்கு இல்லை. தமிழ், குஜராத்தி, மராட்டி, பெங்காளி என்று அந்தந்த வட்டார பண்பாட்டுக் கலாச்சாரத்தின் அடையாளங்களாகவே முஸ்லீம்கள் பரவலாகி வாழ்கிறார்கள் என்பது எனக்கு மேலும் வியப்பை அளிக்கிறது. எனது பயணம் மேலும் நெடுந்தூரம் உள்ளது என்பதை நான் உணர்கிறேன். சமணம், பௌத்தம் என்று விரிந்து கொண்டே போகிறது.

கடலாடி, திரவியத் தேடிய தமிழர்களின் தொன்மப் பதிவுகள் ஏராளம் உள்ளன. இந்தப் பதிவிலும் நீங்கள் சிலவற்றை பார்த்திருப்பீர்கள். இந்த ஆவணப்படம் ஒரு பகுதிதான். இன்னும் இரண்டு பகுதிகளாக பிரித்து ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறேன்.

வாள்முனையில் மதமாற்றம் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள். ஏதாவது, ஓரிரு சம்பவங்களை வைத்து அப்படி கருதுவது தவறு. சமண, பௌத்த சமயங்களின் மீதான தாக்குதல்கள் சாதிய இறுக்கம் இதன் எதிர்வினையாக மதமாற்றம் இருந்திருக்கக் கூடும் என்று நான் கருதுகிறேன்.

இராசராசன் வடக்கு நோக்கியும், கஜினி முகமது தெற்கு நோக்கியும் 10-ம் நூற்றாண்டில் படையெடுத்ததை பார்க்கிறோம். குத்புதீன் கில்ஜி முதலிய அடிமை வம்ச அரசுகளை பார்க்கிறோம். அது மன்னர்கள் ஆட்சிகாலம். பீஜப்பூர் சுல்தான் படைத்தளபதியாக தஞ்சையை ஆண்ட ஏகோஜி இருந்தார். சாமோரி மன்னரின் படைத்தளபதியாக குஞ்ஞானி மரைக்காயர் இருந்தார். சிருங்கேரி மடம் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்களால் தாக்கி அழிக்கப்பட்ட போது மடாதிபதி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். திப்பு சுல்தான் உதவியது ஆவணமாக உள்ளது.

நோன்பு, தொழுகை, பள்ளிவாசல் போன்ற தமிழ் சொற்கள் பௌத்த சமண தொன்மங்களின் குறியீடாகவே உள்ளன. சீனி வெங்கடசாமி அவர்களின் நூல்களில் மேலும் பலவற்றை நீங்களும் அறிந்து கொள்ளலாம்.

தோள்சீலை போராட்டம், நாடார் உறவின்முறை பள்ளிவாசல் ஆகியவை சமீபத்திய நிகழ்வுகளின் ஆவணங்களாக உள்ளன.

தமிழகத்திலும், கேரளாவிலும் உள்ள கட்டிடக் கலைகள் இஸ்லாமிய திராவிட கலாச்சாரத்தின் கூட்டாக உள்ளது. அதனையும் நான் தமிழ் தொன்மமாகவே பார்க்கிறேன்.

கருப்பாயி என்ற நூர்ஜஹான் நூல் தற்போது விவாதத்திற்கு வந்துள்ளது. முஸ்லீம்களின் வர்க்க ஏற்றத் தாழ்வுகள் எல்லா சமூகத்திலும் உள்ளது போலவே இங்கும் உண்டு. எந்த மதமாக இருந்தாலும் மத அடிப்படை வாதத்திலிருந்து வெளிப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

பெரும்பான்மை தமிழர்கள் சாதி, மதம் பார்த்து தங்களது கடமையை வரையறுத்துக் கொள்வதில்லை. மயிலாடுதுறை தொகுதியில் இரண்டரை லட்சம் முஸ்லீம் ஓட்டுகள் உள்ளன. பா.ம.கவும் முஸ்லீம் லீகும் கூட்டணி வைத்து போட்டியிட்ட போது இஸ்லாமிய வேட்பாளர் பெற்ற வாக்குகள் வெறும் முப்பதாயிரம். “எங்களது வாக்கு இருபத்து ஒன்பதாயிரம், உங்களுடைய வாக்கு ஆயிரம்தான்” என்று முஸ்லீம் லீகைப் பார்த்து ராமதாஸ் கேலி பேசினார். த.மு.மு.க தனது வேட்பாளரை நிறுத்திய போது பெற்ற வாக்குகள் 19,000. இதிலிருந்து தெரிவது பெரும்பான்மை தமிழர்கள் சாதிமத அடிப்படை வாதிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.

இந்தச் சந்திப்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் எனது பயணத்தைத் தொடர உங்கள் ஆதரவு ஊக்கமளிக்கிறது

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அறிமுக உரையாற்றினார். தமிழ் பல்கலைக் கழக பேராசிரியர் வெற்றிச் செல்வன், மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழு தோழர் கோவன் ஆகியோர் விமர்சனை உரையாற்றினர். தஞ்சை யூனியன் கிளப் அரங்கம் நிறைந்து வெளியிலும் நின்று மக்கள் நிகழ்ச்சியை கவனித்து ஆதரவு அளித்தனர்.

யாதும் திரையிடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள்
யாதும் திரையிடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள்

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை கிளை.