மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொருளாளராக இருந்த தோழர் சீனிவாசனின் நினைவேந்தல் நிகழ்வில் தோழர் மருதையன் ஆற்றிய உரை கீழைக்காற்று பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
நினைவேந்தல் கூட்டங்களில் நினைவுகூரப்படும் நபர்களைப்பற்றி புகழ்ந்து பேசுவார்கள்; அந்த நபரின் வாழ்க்கை பற்றி சில விசயங்களை தெரிந்துகொள்ளலாம்; அதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்? என்ற கேள்வி உங்களுக்கு இருப்பின் அதை இந்தப் புத்தகம் நிச்சயமாக உடைத்தெறியும்.
தோழர் சீனிவாசனின் நினைவலைகளில் ஆரம்பிக்கும் எழுத்து அதனூடாக பயணித்து வாசகனின் சமூக வாழ்க்கை குறித்த பரிசீலனையாக, விளக்கமாக, தீர்வாக பல தளங்களில் விரிந்து செல்கிறது.
சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. புதிய சமூகத்தை படைப்பதற்கான போராட்டமும், யதார்த்த வாழ்வும் மோதிக்கொள்ளும் போது ஏற்படும் தடுமாற்றத்தை இந்நுல் விவரிக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல ‘தேவகுமாரனுக்கு’ இந்த தடுமாற்றம் ஏற்பட்டதை சுட்டிக் காட்டுகிறார் தோழர் மருதையன். இத்தகைய தடுமாற்றத்தை எப்படி எதிர்கொண்டு வெளிவருவது என்பதையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
ஆசான்களின், தோழர்களின் தியாகங்கள் அவ்வளவு எளிமையானதா இருந்ததா? அதற்கு பின்னால் இருந்த துயரமென்ன? இதை அனுபவிக்காமல் அவர்களின் மகத்துவத்தை அறிந்ததாக சொல்லமுடியுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது இந்நூல். மார்க்சின் தியாக வாழ்வயும் அதன் வலியையும் மார்க்சின் வார்த்தைகளிலிருந்தே அறியத் தருகிறார் தோழர் மருதையன்.
“தோழர் போராடினார், உறுதியாக இருந்தார், மகிழ்ச்சியாக இருந்தார்” என்பதெல்லாம் நமக்கு தெரிகின்ற சொற்கள். அதற்கு பின்னால் ஒரு மனிதன் தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராக, தன்னுடைய குறைகளுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டம் இருக்கிறது. அது அளித்த துயரம் இருக்கிறது. தோழர்களின் மேன்மைகள் எனப்படுபவையெல்லாம் தமது பலவீனங்களுக்கு எதிராக, தவறுகளுக்கு எதிராக அவர்கள் நடத்தும் தொடர்ந்த போராட்டத்தின் ஊடாகத்தான் சாதிக்கப்படுகின்றன.” சமூக மாற்றத்திற்கு உழைக்கும் அனைவருக்கும் கொண்டிருக்க வேண்டிய கண்ணோட்டம் இது.
அங்கீகாரத்திற்காக அலையும் அற்பற்களுக்கு மத்தியில் கம்யூனிஸ்டுகளோ, இல்லை சிறந்த அறிவியலாளர்களோ எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை சுந்தரராமசாமி எனும் இலக்கியவாதியின் கவிதையையும், ஐன்ஸ்டீன் மற்றும் மார்க்சின் கவிதைகளையும் முன்வைத்து புரியவைக்கிறது இந்நூல்.
இந்நூல் முழுக்க பல புதிய தகவல்கள் காணக்கிடைகின்றன. தோழர்களுடனான பகத்சிங்கின் விவாதம்; மெய்காப்பாளருடனான லெனினின் விவாதம்; மார்க்ஸ், லெனின், பகத்சிங், ஐன்ஸ்டீன் என பல ஆளுமைகளின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நூலின் கண்ணோட்டத்திற்கு பலம் சேர்ப்பதோடு சுவாரஸ்யமானதாகவும், வாசகர்களுக்கு புதியதாகவும் இருக்கின்றன.
சமூக மாற்றத்தை விரும்புவர்களும், சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களும் தங்கள வாழ்வில் எதிர் கொள்ளும் தடுமாற்றங்களுக்கு எதிராக போராட கற்றுத்தரும் ஆயுதம் இந்தப் புத்தகம்.
நினைவுகூர்தல்
தடுமாற்றமும் போராட்டமும்
– மருதையன்
வெளியீடு : கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை : ரூ 15
பக்கங்கள் : 24
புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்
எண்: 80-81 (முதல் நுழைவாயில்)
38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35
நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015 முதல் 21 – 1 – 2015 வரை)
நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை
![]() |
![]() |
கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367